Published:Updated:

எந்தநிலையில் இருக்கிறது சுஷாந்த் வழக்கு? - சி.பி.ஐ-யின் பதில்

சுஷாந்த் சிங்
சுஷாந்த் சிங்

சுஷாந்த் மரணம் தொடர்பான வழக்கில் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை எனவும், அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடைபெற்றுவருவதாகவும் சி.பி,ஐ தெரிவித்திருக்கிறது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பையிலுள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக, கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறிய குடும்பத்தினர், இந்த விவகாரத்தை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

சுஷாந்த் - ரியா
சுஷாந்த் - ரியா

இந்த விவகாரத்தில் சுஷாந்தின் தந்தை கே.கே.சிங், பாட்னா காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், சுஷாந்தின் காதலியான ரியா சக்ரபோர்த்தி அவரைத் தற்கொலைக்குத் தூண்டியதாகப் புகார் கூறியிருந்தார் கே.கே.சிங். இந்த வழக்கு விசாரணை பீகார் போலீஸிலிருந்து சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது.

சுஷாந்த் வழக்கு: `காக்கி' டு `காவி' குற்றச்சாட்டு... பீகார் டி.ஜி.பி குப்தேஷ்வர் ஓய்வு ஏன்?

அதன் பின்னர், ரியாவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் பாலிவுட்டில் போதைப்பொருள் பயன்பாடு இருப்பதாக தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் ஒருபுறம் வழக்கு பதிந்து விசாரித்துவருகிறார்கள். இது தொடர்பாக பாலிவுட் நடிகைகளான தீபிகா படுகோன், அவருடைய மேலாளர், ஷ்ரத்தா கபூர், ரகுல் ப்ரீத் சிங், சாரா அலிகான் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

சுஷாந்த் சிங்
சுஷாந்த் சிங்

இந்தச் சூழலில், சுஷாந்த் மரண வழக்கு விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை எனவும், சி.பி.ஐ மெதுவாக விசாரணையை நடத்திவருவது வேதனையளிப்பதாகவும் சுஷாந்தின் வழக்கறிஞர் விகாஷ் சிங் குற்றம்சாட்டியிருந்தார். பாலிவுட்டில் போதைப்பொருள் பயன்பாடு என்ற பெயரில் விசாரணை திசைமாறிவிட்டதாகவும் அவர் புகார் கூறியிருந்தார்.

`உணர்ச்சிவசப்படத் தேவையில்லை, உண்மையைச் சொல்லுங்கள்’ - NCB; விசாரணையில் கலங்கிய தீபிகா படுகோன்?

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கடந்த வெள்ளிக்கிழமை பேசிய விகாஷ் சிங், ``சுஷாந்த் மரணம் தொடர்பான வழக்கில் சி.பி.ஐ விசாரணையின் வேகம் திடீரெனக் குறைந்துவிட்டது. இந்த வழக்கின் விசாரணை எந்தக் கோணத்தில் செல்கிறது என்றே தெரியவில்லை. வழக்கமாக, சி.பி.ஐ விசாரித்துவரும் வழக்குகள் தொடர்பாக செய்தியாளர் சந்திப்புகள் நடத்தப்படுவதுண்டு. ஆனால், இந்த வழக்கைப் பொறுத்தவரை இதுவரை ஒரு செய்தியாளர் சந்திப்புகூட நடத்தப்படவில்லை'' என்று கூறியிருந்தார்.

சி.பி.ஐ
சி.பி.ஐ

இந்தநிலையில், சுஷாந்த் வழக்கு தொடர்பாக சி.பி.ஐ தரப்பில் அதிகாரபூர்வ செய்தி அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், ``சுஷாந்த் மரணம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ முழுமையாக விசாரித்துவருகிறது. வழக்கில், அனைத்துவிதமான கோணங்களிலும் விசாரணை நடைபெற்றுவருகிறது. எந்த விவகாரத்தையும் சி.பி.ஐ விசாரிக்காமல் விடவில்லை'' என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், ``இந்த வழக்கில் எந்தவிதமான முடிவுக்கும் இதுவரை வரவில்லை’’ எனவும் சி.பி.ஐ தெரிவித்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு