Published:Updated:

நெல்லை முன்னாள் மேயரைக் கொன்றது யார்? - நான்கு நாள்களாகத் திணறும் போலீஸ்!

பி.ஆண்டனிராஜ்

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையில், இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதனால், சிபிசிஐடி போலீஸார், சம்பவம் நடந்த வீட்டுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுசெய்து வருகின்றனர்.

கணவருடன் உமா மகேஸ்வரி
கணவருடன் உமா மகேஸ்வரி

நெல்லையின் முன்னாள் மேயரும் தி.மு.க மகளிரணி நிர்வாகியுமான உமா மகேஸ்வரி, 23-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். வீட்டில் இருந்த அவரையும் அவரது கணவர் முருகசங்கரன், பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோரையும் மர்மக் கும்பல் கத்தியால் குத்தி கொடூரமாகக் கொன்றது. இது தொடர்பாக, நெல்லை மாநகர போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள். ஆனால், இந்த வழக்கு விசாரணையில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

சி.சி.டி.வி காட்சி
சி.சி.டி.வி காட்சி

கொலை நடந்த வீட்டில் சிசிடிவி கேமரா இல்லாத நிலையில், குற்றவாளிகள் யார் என்பது தொடர்பாக எந்த முடிவுக்கும் வர முடியாமல் போலீஸார் திணறிவருகிறார்கள். ஆதாயத்துக்காக இந்தக் கொலை நடந்திருக்கக் கூடும் என போலீஸார் தொடக்கத்தில் சந்தேகித்தார்கள். அதனால், அந்தப் பகுதியில் உள்ள ஆலயத்தில் கிடைத்த சிசிடிவி ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டு விசாரித்தனர். அப்போது, வட மாநிலத்தைச் சேர்ந்த இருவர் அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றுவது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், வட மாநில இளைஞர்கள் சிலரிடம் நடத்திய விசாரணையில், அவர்களுக்குத் தொடர்பு இல்லை என்பது தெரியவந்தது.

கொலையாளிகளைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில், அரசியல் காரணங்களுக்காக இந்தக் கொலை நடந்திருக்குமா என்கிற கோணத்தில் விசாரணை நடந்தது. தி.மு.க-வைச் சேர்ந்த பெண் பிரமுகர் ஒருவரிடம், `சீட்’ வாங்கிக் கொடுப்பதாக உமா மகேஸ்வரி பணம் வாங்கி ஏமாற்றியதால் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இது தொடர்பாக மதுரையில் தங்கியிருக்கும் தி.மு.க பெண் பிரமுகரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அந்தப் பெண்மணிக்கு இந்தக் கொலையில் எந்தத் தொடர்பும் இல்லை என்பது தெரியவந்தது.

கொலை நடந்த வீடு
கொலை நடந்த வீடு

இதனிடையே, உமா மகேஸ்வரியின் கணவருக்கு ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் சிலருடன் மோதல் இருந்ததாகத் தெரியவந்திருக்கிறது. அதனால், ரியல் எஸ்டேட் அதிபர்கள் யாராவது கூலிப்படையை ஏவி, இந்தக் கொலையைச் செய்துள்ளார்களா என்பது பற்றியும் விசாரணை நடந்து வருகிறது. தென்காசி, சங்கரன்கோவில் பகுதிகளைச் சேர்ந்த இரு ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் விசாரணை நடக்கிறது.

இந்தக் கொலைவழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், கொலை நடந்த வீட்டை போலீஸார் இன்னும் உறவினர்களிடம் ஒப்படைக்காமல் தங்களின் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கிறார்கள். தொடர்ந்து, அந்த வீட்டை காவல்துறையின் பல்வேறு பிரிவினரும் ஆய்வுசெய்து வருகிறார்கள். இந்த நிலையில், கொலை நடந்த வீட்டில் சிபிசிஐடி போலீஸார் இன்று விசாரணை நடத்தினார்கள். டிஎஸ்பி அனில்குமார், இன்ஸ்பெக்டர் பிறைச்சந்திரன் தலைமையிலான போலீஸார், கொலை நடந்த வீட்டில் பார்வையிட்டு, பழைய குற்றவாளிகளுக்கு இதில் தொடர்பு இருக்கிறதா என ஆய்வு செய்தார்கள்.

உமா மகேஸ்வரி உள்ளிட்ட மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளன. குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள்.
மாநகர காவல்துறை ஆணையர் பாஸ்கர்

இக்கொலையைப் போன்ற 15 வழக்குகள் சிபிசிஐடி வசம் விசாரணையில் இருப்பதால், பழைய குற்றவாளிகள் யாரேனும் ஈடுபட்டு இருப்பார்களோ என்கிற கோணத்தில் உமா மகேஸ்வரி கொலை நடந்த வீட்டை சிபிசிஐடி அதிகாரிகள் ஆய்வு செய்தார்கள். இதனிடையே, இந்தக் கொலைவழக்கில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியை விரைவில் கைது செய்வோம் என நெல்லை மாநகர காவல்துறை ஆணையாளர் பாஸ்கரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.