Published:Updated:

`இருமியதற்காக துப்பாக்கியால் சுட்டார்கள்..' - ஊரடங்கில் நேர்ந்த சம்பவத்தால் அதிர்ந்த நொய்டா

துப்பாக்கி
துப்பாக்கி ( மாதிரி படம் )

விளையாடும்போது இருமிய நண்பரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் நொய்டாவில் நடந்துள்ளது.

கொரோனா நோய்த் தொற்றின் அச்சம் காரணமாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மத்திய அரசு முதலில் 21 நாள் ஊரடங்கு உத்தரவை அறிவித்திருந்தது. இந்தியாவில் தொடர்ந்து நோய்த் தொற்று அதிகரித்து வருவதால் ஊரடங்கு நாள்களை நீட்டித்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

ஊரடங்கு காரணமாக மக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளே முடங்கியுள்ளனர். நகரப்பகுதிகளில் போலீஸாரின் கெடுபிடிகள் அதிகம் இருப்பதால் மக்கள் அதிகம் வெளிவருவதில்லை. அப்படியே வெளியே வந்தாலும் வாகன பறிமுதல், அபராதம் என அதிரடி காட்டுகின்றனர் போலீஸார்.

கொரோனா
கொரோனா

கிராமங்களில் மக்கள் சிலர் சுயகட்டுப்பாட்டுடன் வீடுகளில் இருக்கின்றனர். ஆனால், ஒரு சிலரோ ஊரடங்கு உத்தரவை ஏதோ விடுமுறையைப் போல் கொண்டாடி வருகின்றனர். நொய்டாவில் அப்படியான நண்பர்கள் நான்கு பேர் சேர்ந்து செய்த காரியம் கிராம மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நொய்டாவின் தயா நகர் பகுதியில் நேற்றிரவு துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு மக்கள் சாலையில் கூடியுள்ளனர். திடீரென சில இளைஞர்கள் சாலையில் ஓடியுள்ளனர். மற்றொரு இளைஞரோ துப்பாக்கிக்குண்டுகள் காலில் துளைத்து ரத்தம் வெளியேறிய நிலையில் இருந்துள்ளார். அவரை மீட்ட அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் விவரம் வெளியே வந்துள்ளது.

துப்பாக்கி
துப்பாக்கி
மாதிரி படம்

இதுகுறித்து பேசிய காவலர்கள், ``தயா நகரைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் இங்குள்ள கோயிலுக்குள் நின்றுகொண்டு போனில் ஏதோ விளையாடியுள்ளனர். அப்போது பிரவீஷ் என்ற இளைஞர் இருமியவாறு இருந்துள்ளார். இதனால் எரிச்சலடைந்த அவரின் நண்பர் ஜெய்வீர் `நீதான் இந்த ஊர் முழுவதும் கொரோனாவை பரப்பப்போகிறாய்’ எனக் கூறியுள்ளார். சிறுது நேரம் கழித்து மீண்டும் பிரவீஷ் இருமியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இது கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கத் தொடங்கியுள்ளனர்.

இதில் ஆத்திரமடைந்த ஜெய்வீர் தான் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியால் பிரவீஷை சுட்டுள்ளார். இதில் காலில் காயம் ஏற்பட பிரவீஷ் வலியால் துடிதுடித்துள்ளார். துப்பாக்கிச் சத்தம் மற்றும் இளைஞரின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் கூடிவிட்டனர். இதையடுத்து, மற்ற மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். அவர்களைத் தேடி வருகிறோம்'' என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு