Published:Updated:

ஓடும் ரயிலிலேயே வளைக்கப்பட்ட வடமாநில கொள்ளைக் கும்பல்!- சென்னை போலீஸின் `விறுவிறு' சிசிடிவி சேஸிங்

சென்னையில் கொள்ளையடித்த வட மாநில கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகளின் உதவியால் மத்தியப் பிரதேசத்தில் கைதுசெய்துள்ளனர், பரங்கிமலை போலீஸார்.

Theft
Theft

சென்னை நங்கநல்லூர் எஸ்.பி.ஐ காலனியைச் சேர்ந்த ரமேஷ் (52) என்பவர், கிரானைட் ஏற்றுமதித் தொழில் செய்துவருகிறார். இவர், கடந்த வாரம் சபரிமலைக்குச் சென்றுவிட்டார். அவரின் வீட்டில் மனைவி மற்றும் பிள்ளைகள் மட்டுமே இருந்துள்ளனர். அவர்களும் கடந்த 20-ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு வெளியில் சென்றுவிட்டனர்.

Gold
Gold

சில நாள்களாகவே அந்த வீட்டை நோட்டமிட்டுக்கொண்டிருந்த கொள்ளையர்கள், வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து, ரமேஷின் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்று, நகை மற்றும் பணம் ஆகியவற்றைத் திருடியுள்ளனர். வெளியில் சென்றவர்கள் வீட்டுக்குத் திரும்பியபோது, கதவு உடைக்கப்பட்டு 120 பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் காணாமல் போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, ரமேஷ் குடும்பத்தினர் உடனடியாக பரங்கிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்றுக் கொண்டு சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள், வீட்டை சோதனையிட்டுள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வுசெய்துள்ளனர். அதில், ‘ சந்தேகத்துக்கிடமான வகையில் மூன்று பேர், ரமேஷின் வீட்டைத் தொடர்ந்து சுற்றிவருவதும், 20-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து, சுவர் ஏறிக் குதித்து வீட்டுக்குள் செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்துள்ளது.

CCTV
CCTV

மேலும், அவர்கள் இரும்புக் கம்பிகளைவைத்து கதவை உடைத்திருப்பதைப் பார்த்தால், வட மாநில கொள்ளையர்களைப் போல இருப்பதாக முதலில் காவல்துறையினர் சந்தேகித்தனர். பின்னர், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தென் சென்னை இணை கமிஷனர் மகேஷ்வரி மற்றும் பரங்கிமலை துணை கமிஷனர் பிரபாகர் ஆகியோர் தலைமையில் 8 தனிப்படை போலீஸார் அமைக்கப்பட்டு, கொள்ளையர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

`குறைந்த விலையில் தரமான பொருள்கள்!’- நள்ளிரவில் கொள்ளை; பகலில் கூவிக் கூவி விற்ற தந்தை-மகன்

கொள்ளை போன வீட்டுக்கு அருகில் உள்ள, மேலும் சில கேமராக்களை சோதனைசெய்து பார்த்ததில், அது வட மாநில கொள்ளையர்கள்தான் என்பது உறுதியானது. அவர்கள் பணத்தைக் கொள்ளையடித்த பின், பரங்கிமலை மின்சார ரயில் மூலம் சென்ட்ரல் சென்று, அங்கிருந்து வட மாநில ரயிலில் ஏறிச் சென்றதையும் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸார் கண்டறிந்தனர். இதுகுறித்து மும்பை மற்றும் மத்தியப் பிரதேச ரயில்வே போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

police
police

இந்நிலையில், சென்னையிலிருந்து மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் சென்ற உஜ்ஜைனி ரயிலில் பயணம் செய்த சந்தேகத்துக்கிடமான 10 பேரை ரயில்வே போலீஸார் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த 10 பேரில், சென்னையில் கொள்ளையடித்த மூவரும் இருந்துள்ளனர். மேலும், அவர்களிடமி ருந்து 200 பவுன் நகைகளும் லட்சக்கணக்கில் பணமும் சிக்கியுள்ளன். இதன்மூலம், நங்கநல்லூர் மட்டுமில்லாது சென்னையின் பல்வேறு இடங்களில் அவர்கள் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டது தெரியவந்தது.

உடனடியாக மத்தியப் பிரதேச ரயில்வே போலீஸார், சென்னை போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். பரங்கிமலை போலீஸார் ஆல்பின் ராஜ் மற்றும் சிவக்குமார் ஆகிய இருவரும் விமானம் மூலம் இந்தூர் சென்று, சென்னையில் திருடிய கொள்ளையர்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். மேலும், 3 தனிப்படை போலீஸார் இந்தூருக்கு விரைந்துள்ளனர்.

Arrest
Arrest

சென்னையில் கொள்ளையடித்த வடமாநில கும்பல், கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு பகுதிகளில் கொள்ளையடித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இன்னும் 2 நாள்களில் இவர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட உள்ளனர்.