Published:Updated:

தேனி: வடமாநில இளைஞருக்கு அடி, உதை; பள்ளி மாணவர்கள் கடத்தப்பட்டனரா?

தேனி

பள்ளிக் குழந்தைகளைக் கடத்திவிட்டதாகப் பொதுமக்களால் வடமாநில இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேனி: வடமாநில இளைஞருக்கு அடி, உதை; பள்ளி மாணவர்கள் கடத்தப்பட்டனரா?

பள்ளிக் குழந்தைகளைக் கடத்திவிட்டதாகப் பொதுமக்களால் வடமாநில இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Published:Updated:
தேனி

தேனி மாவட்டம், போடியில் வடமாநிலத்தவர் ஒருவர் தள்ளுவண்டியில் கம்பளிப் ​போர்வை விற்பதுபோல நடித்து பள்ளிக் குழந்தைகளைக் கடத்தியதாகத் தகவல் பரவியது. இதையடுத்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பள்ளியில் இருக்கின்றனரா என்பதை உறுதிசெய்ய பள்ளிகளை முற்றுகையிடத் தொடங்கினர். இதற்கிடையே சிலமலை என்ற பகுதியில் தள்ளுவண்டியில் வைத்து போர்வை வியாபாரம் செய்த வடமாநில இளைஞரைப் பிடித்துத் தாக்கினர். இதையறிந்த போலீஸார் நிகழ்விடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது தவறான தகவல் காட்டுத்தீயாய் பரவியதால் அப்பாவி வடமாநில இளைஞர் தாக்கப்பட்டது தெரியவந்திருக்கிறது.

தாக்கப்பட்ட இளைஞரை அழைத்துச் செல்லும் போலீஸார்
தாக்கப்பட்ட இளைஞரை அழைத்துச் செல்லும் போலீஸார்

இது குறித்து போலீஸாரிடம் விசாரித்தோம். ``​தேனி மாவட்டம், போடி அருகே சில்லமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ​இயங்கிவருகிறது. இந்தப் பள்ளியில் 170 மாணவர்கள் படித்துவருகின்றனர். பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மூன்று பேர் இன்று பள்ளிக்கு வரவில்லை. வகுப்பு ஆசிரியர் பள்ளிக்கு வராத மாணவர்களின் பெற்றோருக்குத் தகவல் கொடுத்தார். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தேடத் தொடங்கியிருக்கின்றனர். இதற்கிடையே மூன்று மாணவர்களில் இருவர் பள்ளிக்கு வந்துவிட்டனர். அவர்களிடம் தாமதமானதற்கான காரணத்தை ஆசிரியர் கேட்டிருக்கிறார். 

அதற்கு அவர்கள் தங்களை வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், `கத்தியைக் காட்டி மிரட்டி, தள்ளுவண்டியில் இருந்த போர்வையில் மூடிக் கடத்த முயன்றார். நாங்கள் தப்பித்து வந்துவிட்டோம்' எனக் கூறியிருக்கின்றனர். மற்றொரு மாணவனைக் காணவில்லையே எனக் கேட்டபோது, `எங்களுக்குத் தெரியவில்லை. அவன் கடத்தப்பட்டிருக்கலாம்' எனத் தெரிவித்திருக்கின்றனர். இதையடுத்து ஆசிரியர், மாணவர்கள் கூறியதைப் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தியிருக்கிறார். இந்தத் தகவல் பெற்றோர்கள் மூலமாக ஊரிலுள்ள அனைவருக்கும் பரவிவிட்டது. வாட்ஸ்அப் குழுக்களிலும் தகவல் பரவியது. 

பள்ளியில் திரண்ட பெற்றோர்கள்
பள்ளியில் திரண்ட பெற்றோர்கள்

இந்த நிலையில்தான், சில்லமரத்துப்பட்டி - தேவாரம் இடையே சிலமலைப் பகுதியில் தள்ளுவண்டியில் கம்பளிப் போர்வை வியாபாரம் செய்துகொண்டிருந்த வடமாநில இளைஞர்மீது அந்தப் பகுதி மக்கள் சந்தேகம்கொண்டு அவரின் கைகளைக் கயிற்றால் கட்டிவைத்து அடித்து உதைத்திருக்கின்றனர். தகவலறிந்து நிகழ்விடத்துக்குச் சென்று விசாரித்தோம். அந்த இளைஞர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த திலீப் என்பது தெரியவந்தது. போடியிலிருந்து தள்ளுவண்டியை வாடகைக்கு எடுத்துக்கொண்டு போர்வை வியாபாரம் செய்துவந்தது தெரியவந்தது. மேலும் அவரிடம் கத்தி உள்ளிட்ட எவ்வித ஆயுதமும் இல்லை. அவர் வியாபார முதலாளியின் போன் நம்பர் கொடுத்து தன்னைப் பற்றி விசாரித்துக்கொள்ளுங்கள் என்றும், காலையிலிருந்து எந்தக் குழந்தையிடமும் பேசக்கூட இல்லை எனவும் அப்பாவியாகத் தெரிவித்திருக்கிறார். இருப்பினும், போலீஸார் அந்த இளைஞர் தொடர்புடைய நபர்களிடம் விசாரித்து அவர்மீது எவ்விதத் தவறும் இல்லை என்பதை உறுதிசெய்தோம்" என்றனர். 

பள்ளியில் திரண்ட பெற்றோர்கள்
பள்ளியில் திரண்ட பெற்றோர்கள்

இதைத் தொடர்ந்து டி.எஸ்.பி சுரேஷ், ``வதந்திகளைப் பரப்ப வேண்டாம். மக்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்ள வேண்டாம். எந்தத் தகவல் சமூக வலைதளங்களில் வந்தாலும் அதை உறுதிபடுத்திய பிறகு உண்மை எனில் பகிருங்கள்" என மக்களுக்கு அறிவுரை கூறினார்.