Published:Updated:

`மகனுக்குப் புற்றுநோய்; சிகிச்சைக்குப் பணமில்லை!’ - வேலூரில் வடமாநில பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை 

வேலூர் மருத்துவமனை
வேலூர் மருத்துவமனை

வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் மகனுக்குச் சிகிச்சை பெறவந்த வடமாநில பெண்ணை லாட்ஜ் மேலாளர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அருணாசலப் பிரதேசம், சியாங் மாவட்டத்தைச் சேர்ந்த ஐபோம் கம்சிம் (33) என்ற பெண், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன் மகனை சிகிச்சைக்காக வேலூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். காகிதப்பட்டறை பகுதியில் உள்ள எஸ்.என்.ஆர் லாட்ஜில் அறை எடுத்துத் தங்கி மருத்துவமனைக்கு சென்று வந்தார்.

வேலூர் கோட்டை
வேலூர் கோட்டை

இந்த நிலையில், ``மகனின் மருத்துவச் செலவுக்கு பணம் அதிகமாகத் தேவைப்படுகிறது. வேலூரில் வேலை வாங்கிக் கொடுங்கள்’’ என்று லாட்ஜ் மேலாளர் ஜெகதீசன் (38) என்பவரிடம் கூறி வேதனைப்பட்டுள்ளார் ஐபோம் கம்சிம். மேலாளர் சத்துவாச்சாரியை அடுத்த அலமேலுமங்காபுரம் அழகிரி நகரைச் சேர்ந்தவர்.

அந்த பெண்ணின் பரிதாப நிலையைத் தனக்கு சாதமாக்கிக் கொண்ட ஜெகதீசன், நல்லவரைப் போல் நடித்து ஐபோம் கம்சிமை லாட்ஜில் உள்ள வேறொரு அறைக்கு அழைத்துச் சென்று அடைத்துவைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

மேலும், கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி செய்துள்ளார். ஜெகதீசனிடமிருந்து தப்பித்த அந்தப் பெண், பொதுமக்களின் உதவியுடன் வேலூர் வடக்கு காவல் நிலையம் சென்று தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்தார்.

அதிர்ச்சியடைந்த இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீஸார், அந்த லாட்ஜுக்கு விரைந்து சென்று மேலாளர் ஜெகதீசனை கைதுசெய்து காவல் நிலையம் அழைத்துவந்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

வேலூர் வடக்கு காவல் நிலையம்
வேலூர் வடக்கு காவல் நிலையம்

அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு