Published:Updated:

``என் கணவருக்கு உடல்நிலை சரியில்லை!" - கைதுசெய்யப்பட்ட சாட்டை துரைமுருகனின் மனைவி புகார்

கமிஷனர் அலுவலகத்தில் சாட்டை துரைமுருகனின் மனைவி மாதரசி
News
கமிஷனர் அலுவலகத்தில் சாட்டை துரைமுருகனின் மனைவி மாதரசி

ஃபாக்ஸ்கான் நிறுவன ஊழியர்களின் உடல்நிலை குறித்துத் தவறான தகவல்களைப் பரப்பியதாக யூடியூபர் சாட்டை துரைமுருகன் திருச்சியில் கைதுசெய்யப்பட்டார்.

கடந்த வாரம் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உடனடியாக அருகிலிருக்கும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சிகிச்சை பெற்றுவந்த ஊழியர்கள் சிலர் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் சிலர் தவறான தகவல்களைப் பரப்பி பதற்றத்தை மேலும் அதிகரிக்கச்செய்தனர்.

அதையடுத்து சிகிச்சையிலிருக்கும் ஊழியர்களின் உடல்நிலை குறித்த விவரங்களை தொழிற்சாலை நிர்வாகம் தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்தி, 18-ம் தேதி நள்ளிரவு பணிக்கு வந்த சுமார் 1,500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சுங்குவார் சத்திரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாட்டை துரைமுருகன்
சாட்டை துரைமுருகன்

இதையடுத்து போலீஸார் விடுதியில் தரமற்ற உணவு வழங்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, இருவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து யூடியூபர் சாட்டை முருகன் ட்விட்டரில் கருத்துகளைப் பகிர்ந்ததோடு வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். தரமற்ற உணவைச் சாப்பிட்டு யாரும் உயிரிழக்காத நிலையில், உண்மைக்கு மாறாக கலவரத்தைத் தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக இது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து சுங்குவார் சத்திரம் காவல் நிலையத்தில் சாட்டை துரைமுருகன் மீது தவறான செய்தியைப் பரப்புவது, கலவரம் உண்டாக்குவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. திருச்சி பிராட்டியூர் அருகிலிருக்கும் சாட்டை முருகன் அலுவலகத்துக்கு நேற்றிரவு வந்த போலீஸார், துரைமுருகனைக் கைதுசெய்து காஞ்சிபுரத்துக்கு அழைத்துச் சென்றனர். அதையடுத்து 03.01.2022 வரை சாட்டை துரைமுருகனை நீதிமன்றக் காவலில் திருவள்ளூர் கிளைச் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

கமிஷனர் அலுவலகத்தில் சாட்டை துரைமுருகனின் மனைவி மாதரசி
கமிஷனர் அலுவலகத்தில் சாட்டை துரைமுருகனின் மனைவி மாதரசி

இந்த நிலையில், திருச்சி மாநகர காவல்துறை புலனாய்வுப் பிரிவு உதவி ஆணையரிடம் சாட்டை துரைமுருகனின் மனைவி மாதரசி புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அதில், ``போலீஸ்ன்னு சொல்லி பிராட்டியூர்ல இருக்கற சாட்டை அலுவலகத்துக்கு ஏழு பேர் வந்தாங்க. விசாரணைக்கு அழைச்சுட்டுப் போறோம்னு சொல்லி என்னோட கணவரை கூட்டிட்டுப் போனாங்க. என் கணவர் எங்கே இருக்கார்னு தெரியலை. அவருக்கு உடல்நிலை சரியில்லை. மருத்துவச் சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கிறது. என் கணவரை அரசாங்கமும், போலீஸும் மீட்டுக் கொடுக்கணும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

தலைவர்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் சாட்டை துரைமுருகன் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் வெளிவந்திருந்தார். இந்த நிலையில், அவர் ஃபாக்ஸ்கான் ஊழியர்கள் குறித்து அவதூறு பரப்பியதாக மீண்டும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.