Published:Updated:

ஜோடியாகத் தண்ணீரில் மிதக்கும் சடலங்கள்... பதைபதைக்க வைக்கும் ஊட்டி ஏரி #TamilnaduCrimeDiary

#TamilnaduCrimeDiary
#TamilnaduCrimeDiary

ஊட்டி ஏரியில் சடலமாக மீட்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை ஜோடியாக கண்டெடுக்கப்படும் சடலங்கள் என்பதுதான் பெரிய மர்மமாக இருக்கிறது. #TamilnaduCrimeDiary

2019 ஜூலை 19-ம் தேதி காலை, அப்படி விடியும் என ஊட்டி மக்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. ஊட்டி ஏரியின் `தேனிலவு படகு இல்லத்'தில் சடலம் ஒன்று மிதப்பதை ஊழியர்கள் பார்த்தனர். உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, சடலத்தை மீட்கும் பணி தொடங்கியது. சடலத்தை மேலே தூக்கியவர்களுக்குப் பேரதிர்ச்சி. காரணம், நீரில் மிதந்த ஆண் சடலத்துடன் பெல்ட்டால் பிணைக்கப்பட்டு மற்றொரு ஆண் சடலமும் இருந்தது.

ஊட்டி
ஊட்டி

இரண்டு உடல்களும் ஒரே பெல்ட்டில் பிணைக்கப்பட்ட நிலையில் சடலமாக மிதந்துள்ளன. இதைப் பார்த்த போலீஸார் குழப்பமடைந்தனர். பின்னர், போலீஸ் விசாரணையில் ஊட்டி காந்தல் குருசடி பகுதியைச் சேர்ந்த கௌதம் (23). இவரின் நண்பர் டேனிஷ் (23). இருவரும் ஓட்டுநர்கள். இணை பிரியாத நண்பர்களான இருவரும், அடிதடி வழக்கு தொடர்பாகக் காவல் நிலையத்துக்கு வருமாறு போலீஸாரால் அழைக்கப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணைக்குப் பயந்து இருவரும் தற்கொலை செய்துகொண்டதாக மக்கள் தெரிவித்தவுடன் போலீஸ் விசாரணையும் அத்தோடு நின்றுபோனது.

`முதலில் குழந்தைகள், அடுத்து கணவரின் குடும்பம்!' -பஞ்சாப் போலீஸுக்கு அதிர்ச்சிகொடுத்த இளம்பெண்

இதேபோல, கடந்தாண்டு செப்டம்பர் 21-ம் தேதி காலையும் ஊட்டி படகு இல்ல ஏரியில் இறந்த நிலையில் பெண் சடலம் ஒன்று மிதப்பதை படகு இல்ல ஊழியர்கள் பார்த்தனர். ஊட்டி ஜி-1 காவல் துறையினர் வந்து சடலத்தை மீட்டபோதுதான், அந்தப் பெண் சடலத்துடன் பள்ளிச் சீருடை அணிந்திருந்த நிலையில் ஒரு சிறுமியின் சடலமும் துப்பட்டாவில் பிணைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. விசாரணையில் இறந்த பெண் 25 வயதான நிர்மலா மற்றும் அவரின் மகள் ஹரிதா (5) என்றும் ஊட்டி நொண்டி மேடு பகுதியில் வசித்து வந்துள்ளதும் தெரியவந்தது.

மீட்கப்பட்ட சடலங்கள்
மீட்கப்பட்ட சடலங்கள்

பைக்காராவில் உள்ள தன் மாமியார் வீட்டுக்குச் செல்வதாகக்கூறி தன் மகளை அழைத்துக்கொண்டு சென்ற நிர்மலா, இரவு நீண்ட நேரம் ஆகியும் அவர் மாமியார் வீட்டுக்குச் செல்லவில்லை. இரு வீட்டார்களும் பல இடங்களில் தேடியும் காணவில்லை. இந்த நிலையில்தான், இருவரும் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். `உடல்நலக்குறைவால் கணவர் இறந்த நிலையில் விரக்தி மற்றும் வறுமை காரணமாக தாயும் மகளும் தற்கொலை செய்திருக்கலாம்' என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. வேறு காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டுவருகிறோம்’ என போலீஸார் கூறினர்.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு ஊட்டியைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் இரண்டு பேர், அதன் பிறகு ஒரு முதியவர் என தற்போதுவரை ஊட்டி ஏரியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இதில் ஜோடியாக இணைக்கப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. உண்மையிலேயே இவையெல்லாம் தற்கொலையா? அல்லது கொலை செய்யப்பட்டு ஏரியில் வீசப்பட்டார்களா என்கிற கேள்வி ஊட்டி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மீட்கப்பட்ட சடலங்கள்
மீட்கப்பட்ட சடலங்கள்

சுற்றுலா சிறப்புவாய்ந்த மலை மாவட்டமான நீலகிரிக்கு ஆண்டுதோறும் சுமார் 40 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலாவுக்குப் பெயர் பெற்ற பகுதிகளில், தற்கொலைக்கும் பெயர் பெற்றதாக சில இடங்கள் ஊட்டியில் இருந்தன. இதில் தொட்டபெட்டா சிகரம், கொடநாடு காட்சிமுனை, ஊட்டி ஏரி போன்ற இடங்கள் தற்கொலைகள் அதிகம் நடைபெறும் பகுதிகளாக இருந்தன. காதல் தோல்வி முதல் கடன் தொல்லை வரை சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்கள் என சிதைந்தும் அழுகியும் சடலங்களை கண்டெடுக்கப்பது ஒரு கட்டத்தில் தொடர்கதையாக இருந்தது.

5,000 பேர்… ரூ.100 கோடி… தேனி மக்களை ஏமாற்றிய போலி நிறுவனம்!

மாவட்ட நிர்வாகம் சுற்றுலாத்துறை, வனத்துறை மற்றும் காவல்துறையினரின் கூட்டு முயற்சியால் இந்த இடம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, படிப்படியாக தற்கொலை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் நடைபெறுவது தடுக்கப்பட்டது. இப்போது மீண்டும் சடலங்கள் கண்டெடுக்கப்படுவது அதிகரித்துள்ளது.

ஊட்டி ஏரி
ஊட்டி ஏரி

தொடரும் துயரம் குறித்து உதகை நகர விழிப்புணர்வு சங்கத் தலைவர் ஜனார்த்தனன் கூறுகையில், ``ஊட்டி நகரின் அருகில் சுமார் 4 சதுர கி.மீ பரப்பளவுள்ள இந்த ஏரியில் கடந்த ஒரு ஆண்டாக சடலங்கள் மிதப்பது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. காவல்துறையோ எல்லாவற்றையும் தற்கொலை என்று கோப்பை மூடுகின்றனர்‌. கொலைச் சம்பவங்கள் நடைபெறவும் வாய்ப்புள்ளது. எனவே, ஊட்டி ஏரியைச் சுற்றிப் பாதுகாப்பு வேலிகளை ஏற்படுத்தி இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும்" என்றார்.

போலீஸார் தீவிர ரோந்துப் பணியை மேற்கொண்டு குற்றச்சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதோடு, சடலங்கள் மீட்கப்படுவதன் பின்னணி உண்மையான தற்கொலையா அல்லது கொலையா என்பதையும் புலனாய்வு செய்து உண்மையை வெளிக்கொணர வேண்டும் என்பதே ஊட்டி மக்களின் விருப்பமாக இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு