பாலிவுட் நடிகை சோனம் கபூர் திருமணம் செய்துகொண்டு டெல்லியில் வசித்துவருகிறார். கர்ப்பமாக இருக்கும் சோனம் கபூர், தற்போது மும்பையில் இருக்கிறார். டெல்லி இல்லத்தில் அவரின் மாமனார், மாமியார் பிரியா அஹுஜா ஆகியோர் வசிக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சோனம் கபூரின் மாமியார் வீட்டில் இருந்த நகைகளை சோதனை செய்து பார்த்தபோது ₹2.45 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் பணம் காணாமல்போயிருப்பது தெரியவந்தது. இதையடுத்து இந்தத் திருட்டு தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதமே போலீஸில் புகார் செய்யப்பட்டது. வீட்டு வேலைக்கு வரும் அனைவரிடமும் போலீஸார் விசாரித்தனர். போலீஸார் இவ்வழக்கு குறித்து பல மாதங்களாக விசாரணை நடத்திவந்த நிலையில் தற்போது இவ்வழக்கில் துப்பு துலங்கியிருக்கிறது.

இந்தத் திருட்டு தொடர்பாக சோனம் கபூர் வீட்டுக்குப் பணியாற்றவந்த நர்ஸ், அவரின் கணவர் உட்பட மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர். இது குறித்து இவ்வழக்கை விசாரித்த டெல்லி துணை கமிஷனர் ரோஹித் மீனா அளித்த பேட்டியில், ``நடிகை இல்லத்தில் திருடியது தொடர்பாக நர்ஸ் அபர்ணா வில்சன் (30), அவரின் கணவர் நாகேஷ் சாகர், திருட்டு நகைகளை வாங்கிய நகைக்கடைக்காரர் தேவ் வர்மா ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 1.25 கோடி மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS11 மாதங்களாக நடந்த திருட்டு
திருடிய தங்க நகைகள் மூலம் அபர்ணா தனது கடன் முழுவதையும் அடைத்துவிட்டு, சொந்தமாகப் பழைய கார் ஒன்றையும் வாங்கினார். அதோடு தனது பெற்றோரின் மருத்துவச் செலவுகளையும் கவனித்துக்கொண்டிருக்கிறார். அபர்ணா இந்தத் திருட்டை 11 மாதங்களாகச் செய்திருக்கிறார்” என்றார்.
இது குறித்து டெல்லி குற்றப்பிரிவு சிறப்பு கமிஷனர் ரவீந்திரநாத் கூறுகையில், ``அபர்ணாவும் அவரின் கணவரும் சேர்ந்து இந்தத் திருட்டைச் செய்திருக்கின்றனர். அவர்களிடமிருந்து 100 வைரங்கள், ஆறு தங்க வளையல்கள், ஆறு வைர வளையல்கள், ஒரு வைர கை செயின், ஒரு ஹூண்டாய் கார் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு 1.32 கோடி. லக்னோவைச் சேர்ந்த அபர்ணா, நர்ஸிங் முடித்துவிட்டு 2015-ம் ஆண்டு டெல்லி வந்து மருத்துவமனைகளில் பணியாற்றிவந்தார். 2017-ம் ஆண்டு ஃபேஸ்புக்கில் சாகரைச் சந்தித்துள்ளார். இருவரும் பின்னர் திருமணம் செய்துகொண்டனர்.

2020-ம் ஆண்டு சோனம் கபூரின் மாமியார் உடல்நலம் பாதிக்கப்பட்டு அபர்ணா பணியாற்றும் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். அவரை பிரேமலதா என்ற நர்ஸ் கவனித்துக்கொண்டார். சோனம் கபூரின் கணவர் ஆனந்த், தன் தாயார் பிரியாவை கவனித்துக்கொள்ள ஒரு நர்ஸைத் தேடினார். இது குறித்து பிரேமலதா தனது தோழி அபர்ணாவிடம் தெரிவித்தார். உடனே அபர்ணா அந்த வேலையில் சேர்ந்தார்.
மயக்க மருந்து கொடுத்து திருட்டு
அடிக்கடி சோனம் கபூரின் மாமியாரை கவனித்துக்கொள்ள சோனம் கபூரின் வீட்டுக்கு அபர்ணா சென்று வந்தார். அப்படிச் சென்று வரும்போது வீட்டில் அதிக தங்க நகைகள் இருப்பதை அபர்ணா கவனித்தார். அதோடு இது குறித்து தனது கணவரிடமும் தெரிவித்தார். இருவரும் சேர்ந்து சோனம் கபூர் வீட்டிலிருந்து தங்க நகைகளைத் திருட திட்டமிட்டனர். மொத்தமாகத் திருடினால் சந்தேகம் வந்துவிடும் என்று கருதி ஒவ்வொன்றாகத் திருட திட்டமிட்டனர். 11 மாதங்களாக இந்தத் திருட்டில் ஈடுபட்டனர். அபர்ணா நகைகளைத் தன் கணவரிடம் கொடுப்பார். அவற்றை சாகர் விற்று பணமாக்குவார். அபர்ணா, சோனம் கபூர் வீட்டில் திருடும்போது நோயாளிக்கு மயக்க மருந்து கொடுத்துவிடுவதை வழக்கமாகக்கொண்டிருந்தார். எம்.பி.ஏ படித்துள்ள சாகரும் இந்தத் திருட்டை ஒப்புக்கொண்டிருக்கிறார். சாகரிடம் தங்க நகைகளை வாங்கிய ஒருவர் மட்டுமே கைதுசெய்யப்பட்டுள்ளார். மற்றவர்கள் தலைமறைவாகிவிட்டனர். அவர்களைத் தேடிவருகிறோம்” என்று தெரிவித்தார்.