Published:Updated:

`சிங்கப்பூர் ஆசையைத் தடுத்த கொரோனா பரவல்' - குடும்பச் சண்டையால் விபரீத முடிவெடுத்த சென்னை நர்ஸ்!

நர்ஸ் ஜோஷிரீனா
நர்ஸ் ஜோஷிரீனா

சென்னை நர்ஸ் ஜோஷிரீனாவுக்கு சிங்கப்பூரில் வேலை பார்க்க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை. தற்போதுள்ள சூழலில் அங்கு வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று கணவர் குடும்பத்தினர் தடுத்ததால் அவர் தற்கொலை செய்துள்ளார்.

சென்னை அருகே உள்ள ஆவடியை அடுத்த பட்டாபிராம், தீனதயாளன் நகர் காந்தியடிகள் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ் (34). இவர் பி.சி.ஏ- படித்துவிட்டு வீட்டிலேயே சொந்தமாக பிசினஸ் செய்துவருகிறார். இவருக்கும் திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர், நாவலர்தெருவைச் சேர்ந்த ஜோஷிரீனாவுக்கும் (32) கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. இவர் பி.எஸ்ஸி நர்சிங் முடித்துவிட்டு சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாகப் பணியாற்றிவந்தார்.

நர்ஸ் வீடு அமைந்துள்ள இடம்
நர்ஸ் வீடு அமைந்துள்ள இடம்

இந்தத் தம்பதியினருக்கு ரேச்சல் (3) என்ற மகளும் ஜான் பிரபாகர் (1) என்ற மகனும் உள்ளனர். ஜோஷிரீனா, வெளிநாட்டில் நர்ஸ் வேலைக்காக விண்ணப்பித்திருந்தார். அவருக்கு சிங்கப்பூரில் உள்ள பிரபலமான மருத்துவமனையில் வேலை கிடைத்தது. அதற்கான ஆர்டரும் அவருக்கு வந்தது. அதனால், அவர், கடந்த மாதம் சென்னை வேலையை ராஜினாமா செய்தார். மார்ச் 26-ம் தேதி (நாளை) சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் நர்சாக வேலையில் சேர இருந்தார்.

இந்த நிலையில், 23-ம் தேதி இரவு ஜோஷிரீனா வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அவரின் அம்மா எலிசபெத், பட்டாபிராம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் ஜோஷிரீனாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜோஷிரீனாவின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று அவரின் குடும்பத்தினரிடம் விசாரித்தனர்.

வீடு அமைந்துள்ள இடம்
வீடு அமைந்துள்ள இடம்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``நர்ஸ் ஜோஷிரீனாவுக்கு சிங்கப்பூரில் வேலை பார்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. கொரோனா தொற்று காரணமாக அவரை சிங்கப்பூர் வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று கணவர் வீட்டினர் கூறியுள்ளனர். அதுதொடர்பாக ஜோஷிரீனாவுக்கும் கணவர் குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் மனம் உடைந்த நர்ஸ் ஜோஷிரீனா, சம்பவத்தன்று கணவர் மற்றும் குழந்தைகள் தூங்கச் சென்றபிறகு படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். ஆர்.டி.ஓ. விசாரணைக்குப்பிறகுதான் ஜோஷிரீனா தற்கொலைக்கான காரணம் தெரியவரும்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு