Published:Updated:

`மாணவியின் ஆடையை வைத்தே அவளை எரித்தனர்!' - வங்கதேசத்தை உலுக்கிய வழக்கில் 16 பேருக்கு தூக்கு

மாணவி
மாணவி

வங்கதேசத்தில் பள்ளி மாணவி உயிருடன் எரிக்கப்பட்ட வழக்கில் 16 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி மதரஸாவில் இருக்கும் ஆசிரியர் சிராஜ் என்பவரால் மார்ச், 27-ம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். இதையடுத்து, அவரது தாயார் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். இந்தப் புகாரை திரும்பப்பெறக்கோரி சிராஜ் தரப்பிலிருந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டது. ஆனால், மாணவியின் குடும்பத்தினர் வழக்கை திரும்பப்பெறுவதாக இல்லை. இந்த நிலையில், ஏப்ரல் 6-ம் தேதி அவர் தேர்வு எழுதச் சென்றார். அப்போது அங்கிருந்த சிலர் வழக்கை திரும்பப்பெறக் கோரி நிர்பந்தித்துள்ளனர். மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்தவர்கள் மாணவி அணிந்திருந்த ஆடையைக் கொண்டே அவரது கை மற்றும் கால்களைக் கட்டி மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தியுள்ளனர்.

`மாணவியின் ஆடையை வைத்தே அவளை எரித்தனர்!' - வங்கதேசத்தை உலுக்கிய வழக்கில் 16 பேருக்கு தூக்கு

மாணவியை மிரட்டி பார்ப்போம் இல்லையென்றால் கொலை செய்துவிட்டு தற்கொலை போல் சித்திரித்துவிடுவோம் என அந்த கும்பல் ஏற்கெனவே திட்டம் தீட்டியுள்ளனர். அவர்களது திட்டப்படி மாணவியை தீ வைத்து கொளுத்தி தற்கொலைபோல் சித்திரிக்க முயன்றுள்ளனர். அவரது உடலில் தீ பற்றி எரிந்தபோது கை மற்றும் கால்களில் கட்டப்பட்டிருந்த துணிகள் அவிழ்ந்தது. தீப்பிழம்புகளுடன் மாடிப்படிகளில் இருந்து ஓடிவந்துள்ளார். அங்கிருந்தவர்கள் தீயை அணைத்து மாணவியை மீட்டுள்ளனர். இதையடுத்து, அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

கடைசி மூச்சு வரை போராடுவேன்!

தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஆம்புலன்ஸ் வாகனத்தில் செல்லும்போதே வீடியோ மூலம் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். அதில் ``ஆசிரியர் என்னை தவறான நோக்கத்துடன் தொட்டார். எனது கடைசி மூச்சு இருக்கும்வரை இந்தக் குற்றத்துக்காகப் போராடுவேன்” எனப் பேசியிருந்தார். மேலும், தன்னுடைய இந்த நிலைமைக்கு யார் காரணம் என்பதையும் தெரிவித்திருந்தார். 80 சதவிகித காயங்களுடன் டாக்கா மருத்துவமனை கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். ஐந்து நாள்கள் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர். ஏப்ரல் 10-ம் தேதி உயிரிழந்தார்.

போராட்டம்
போராட்டம்

இந்த மரணம் வங்கதேசத்தை உலுக்கியது. மக்கள் வீதிகளில் திரண்டனர். இந்த விவகாரத்தில் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இது அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசினாவுக்குப் பெரும் பிரச்னையாக அமைந்தது. எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடின. இந்த வழக்கு தொடர்பாக 18 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதில் 16 நபர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கைதான 16 நபர்களில் 12 பேர் தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

இந்த வழக்கு விசாரணை ஜூன் 27-ம் தேதி தொடங்கியது. செப்டம்பர் 30-ம் தேதி வரை நீதிமன்றம் 87 சாட்சிகளிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்தது. அப்போது அக்டோபர் 24-ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இந்த வழக்கில் கைதான 16 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வாதங்கள் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு இன்று வாசிக்கப்பட்டது. இந்த வழக்கில் கைதான 16 பேரும் குற்றவாளிகள் என உறுதிசெய்த நீதிமன்றம். அனைவருக்கும் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

நீதிமன்றம்
நீதிமன்றம்

இந்தத் தீர்ப்பை மாணவியின் குடும்பத்தினர் வரவேற்றுள்ளனர். இது குறித்து பேசிய அவரது சகோதரர், ``இந்தத் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. அவர்கள் அனைவரும் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டனர். அதற்கான விளைவுகளை அனுபவிக்க வேண்டும்” எனக் கூறினார்.

வங்கதேசம் மகிளா பேரையில் பொதுச் செயலாளர், மலேகா பானு ( Maleka Banu), ``மாணவி கொல்லப்பட்டதற்கான காரணம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாலியல் துன்புறுத்தலுக்கு நீதி கிடைக்க விரும்பினார், அதைப் பெறுவதற்குப் பதிலாக, அவர் கொடூரமாக கொல்லப்பட்டார். இது போன்ற ஒரு தீர்ப்பை அனுமதிக்க வேண்டும். நீங்கள் பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து தப்ப முடியாது என்று மக்களுக்குத் தெரிய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு