Published:Updated:

`வாடகை கேட்டா போலீஸுக்குப் போவியா?' - வட மாநிலத் தம்பதிக்கு திருப்பூரில் நேர்ந்த சோகம்

பாதிக்கப்பட்ட வட மாநிலத்தவர்கள்
பாதிக்கப்பட்ட வட மாநிலத்தவர்கள்

வெறும் 1,500 ரூபாய் வாடகைக்காக வீட்டின் உரிமையாளர், வட மாநிலத் தம்பதியரை தரக்குறைவாகப் பேசி அடித்திருக்கிறார். இதனால் வீட்டின் உரிமையாளர் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மீது வழக்கு பதிவாகியிருக்கிறது.

நாடு முழுக்க போடப்பட்டிருக்கும் ஊரடங்கு உத்தரவால், தினக்கூலியை நம்பி பிழைப்பு நடத்திவந்த தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக, பிழைப்பிற்காக மற்ற மாநிலங்களில் இருந்து வந்தவர்களின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் இப்படி ஏராளமான வடமாநிலத் தொழிலாளர்கள் வேலையில்லாமல், கையில் பணமில்லாமலும் தவித்து வருகின்றனர். இப்படியான சூழ்நிலையில் வீட்டு வாடகை கொடுக்காததால், திருப்பூரில் வட மாநிலத் தம்பதியர்களை வீட்டின் உரிமையாளர் தரக்குறைவாகத் திட்டி, அடித்து உதைத்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

`வெறும் 1,500 ரூபாய் வாடகை தானே ஏங்க தொந்தரவு செய்றீங்க. அரசாங்கமும் சொல்லியிருக்குல்ல’ என வீட்டின் உரிமையாளரைச் சந்தித்து ஏற்கெனவே போலீஸாரும் எச்சரித்திருக்கின்றனர்.

திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூரை அடுத்த பரமசிவன்பாளையத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (60). இவருக்குச் சொந்தமாக உள்ள 30 வீடுகளில், கிட்டத்தட்ட 90 வட மாநிலத் தொழிலாளர்கள் வாடகைக்கு வசித்து வருகின்றனர். அதில் ஒரு தம்பதிதான் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிஜய் பார்ஜோ - சிபானி தம்பதியர். இவர்கள் இருவரும் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் வேலைபார்த்து வந்திருக்கின்றனர். ஊரங்கு போடப்பட்டதால் கையில் பணமில்லாமலும் ஊருக்குச் செல்ல முடியாமலும் தவித்திருக்கின்றனர்.

இந்நிலையில், வீட்டின் உரிமையாளரான பாலசுப்பிரமணியன் வாடகையைக் கேட்டு நச்சரித்திருக்கிறார்.`வேலையில்லாததால் கையில் சுத்தமாக காசு இல்லை. இந்த மாதம் வாடகை தர முடியாது’ எனத் தம்பதியினர் கூறியிருக்கின்றனர். அதற்கு பாலசுப்ரமணியனோ, `வாடகை கொடுக்கலைன்னா தண்ணி, கரன்ட் எல்லாத்தையும் கட் பண்ணிடுவேன்’ எனத் தரக்குறைவான வார்த்தைகளைப் பேசியதோடு, அவரின் மனைவி, மருமகன் என மூவரும் சேர்ந்து வட மாநிலத் தம்பதியைத் தாக்கியதாகச் சொல்கின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண்
பாதிக்கப்பட்ட பெண்

இதில் நிலைகுலைந்துபோன தம்பதியர், நடுநோட்டில் நின்றபடி கண்ணீரோடு அவர்களுக்கு நடந்த கொடுமையைப் பேசி வீடியோவாக ஃபேஸ்புக்கில் ஏற்றியிருக்கின்றனர். மேலும், அருகிலிருந்த வடமாநில நண்பர்களோடு கூட்டமாகச் சென்று பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கின்றனர். இதன் அடிப்படையில் வீட்டின் உரிமையாளரான பாலசுப்பிரமணியன் (60), அவருடைய மனைவி புஷ்பா (55) மற்றும் மருமகன் செந்தில் (34) ஆகிய மூவர் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.

இந்த விவகாரம் குறித்து போலீஸார் கூறுகையில், ``இரண்டு நாள்களுக்கு முன்பே இப்படியான பிரச்னை இருக்கிறது என எங்களுக்கு போன் வந்தது. `வெறும் 1,500 ரூபாய் வாடகைதானே ஏங்க தொந்தரவு செய்றீங்க. அரசாங்கமும் சொல்லியிருக்குல்ல’ என வீட்டின் உரிமையாளரைச் சந்தித்து எச்சரித்துவிட்டு வந்தோம்.

போலீஸாரிடம் புகாரளிக்க வந்த வட மாநிலத்தவர்கள்
போலீஸாரிடம் புகாரளிக்க வந்த வட மாநிலத்தவர்கள்

அதனை மீறியும் வீட்டின் உரிமையாளர் குடும்பத்தோடு சேர்ந்து கொண்டு வாடகை கேட்டு வாக்குவாதம் செய்திருக்கின்றனர். `வாடகை கேட்டா போலீஸ்கிட்ட போவியா..?’ என ஒருகட்டத்தில் வட மாநிலத் தம்பதியர் மீது தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். தம்பதியினரின் புகாரையடுத்து வீட்டின் உரிமையாளர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருக்கிறோம்” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு