Published:Updated:

`வைர மோதிரமா... மதிப்பு தெரியாம வித்துட்டேன்!' - தொழிலதிபர் வீட்டுக் கொள்ளையில் சிக்கிய காவலாளி

பல லட்சம் மதிப்புள்ள வைர மோதிரத்தை அதன் மதிப்பு தெரியாமலே சில ஆயிரங்களுக்கு விற்றுள்ளார்.

கொள்ளை
கொள்ளை

சென்னையைச் சேர்ந்த கட்டுமான நிறுவன அதிபர் சிவா ரெட்டி. இவருக்கும் பிரபல துணிக்கடை அதிபரின் மகள் தர்ஷினிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. மகளை விட்டுப் பிரிய மனமில்லாத துணிக்கடை அதிபர், தன் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள பங்களாவில் வாடைக்குக் குடி வைத்துள்ளார். சிவா ரெட்டி தொழில் சம்பந்தமாக அடிக்கடி வெளியில் சென்றுவிடுவார். தர்ஷினியும் வீட்டில் தனியாக இருப்பதால், அம்மா வீட்டுக்குச் சென்றுவிடுவார். பொதுவாக சிவா வீட்டில் பகல் நேரத்தில் குடும்பத்தினர் யாரும் இருக்க மாட்டார்கள். வேலையாட்களும் பணி முடித்ததும் கிளம்பிவிடுவார்கள்.

வைர மோதிரம்
வைர மோதிரம்

திருமணத்தின்போது தர்ஷினிக்கு சிவா ரெட்டி வைர மோதிரம் அணிவித்துள்ளார். வெளியில் ஏதாவது நிகழ்ச்சிக்குச் செல்லும்போது இந்த மோதிரத்தை அணிந்துகொள்வார் மற்றபடி வீட்டில் இருக்கும் சமயங்களில் அலமாரியில்தான் இருக்கும். இந்நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த வைர மோதிரம் மாயமானது. இதையடுத்து காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வீட்டில் பணிபுரிந்த பணியாளர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். ஆனால், எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது வெளியாட்கள் யாரும் வந்ததாகத் தெரியவில்லை. வீட்டில் காவலாளி இருந்தும் இந்தத் திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது.

`நாய்க்கு மயக்க மருந்து; ரூ.15 லட்சம், 130 சவரன் நகைகள்!' - கோவை கான்ட்ராக்டரை அதிரவைத்த கொள்ளை

இதற்கிடையில் மூன்று மாதங்களுக்கு முன்பு படுக்கை அறையில் இருந்த கைப்பை ஒன்று மாயமானது அதில் பெரிய அளவில் தொகை இல்லாததால் தர்ஷினி, அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், அடுத்தடுத்த நாள்களில் விலை உயர்ந்த பொருள்கள் தொடர்ந்து மாயமானது. இதையடுத்து காவல்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் வீட்டின் உள்ளேயும் சிசிடிவி கேமராவை பொருத்தியுள்ளனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு சில நாள்கள் முன்பு அவரது வீட்டில் இருந்த 10 பவுன் தாலி சங்கிலி மாயமானது. சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வேலியே பயிரை மேய்ந்ததுபோல் அந்த வீட்டின் காவலாளிதான், திருட்டு சம்பவங்களை அரங்கேற்றியது தெரியவந்தது.

சிசிடிவி கேமரா
சிசிடிவி கேமரா

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ரஜிப் லிங்கா கடந்த 3 வருடங்களாக இந்த பங்களாவில் காவலாளியாக உள்ளார். தீபாவளியைக் கொண்டாடுவதற்காக லிங்கா சொந்த மாநிலமான ஒடிசாவுக்கு சென்றது தெரியவந்தது. லிங்கா திரும்பி வந்ததும் சிவாவின் குடும்பத்தினர் வழக்கம்போல் இருந்தனர். காவல்துறையினரின் அறிவுரைப்படி அவர்கள் நடத்துகொண்டனர். சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு லிங்காவை போலீஸார் கைது செய்தனர். காவல்துறையின் விசாரணையில் மோதிரம், பணம் ஆகியவற்றை திருடியதை ஒப்புக்கொண்டார்.

தர்ஷினி வெளியில் செல்லும்போது முன்பக்க கதவை மட்டும் தாழிட்டுச் செல்லும் வழக்கத்தைக் கொண்டுள்ளார். மற்ற அறை கதவுகளைப் பூட்டமாட்டார். இது லிங்காவுக்கு வசதியாக இருந்துள்ளது. பங்களாவின் முதல் மாடியின் வழியாக லிங்கா வீட்டுக்குள் நுழைந்து தாழிடப்படாமல் இருக்கும் அறைகளுக்குச் சென்று அங்கிருக்கும் பொருள்களைத் திருடியுள்ளார்.

அரைநிர்வாணக் கோலம்… நள்ளிரவில் கொள்ளை… தேனியை மிரட்டும் வடமாநில கொள்ளையர்கள்!

திருடிய பொருள்களை ஒடிசாவுக்குச் சென்று விற்றுள்ளார். பல லட்சம் மதிப்புள்ள வைர மோதிரத்தை அதன் மதிப்பு தெரியாமல் சில ஆயிரங்களுக்கு விற்றுள்ளார். தாலிச் சங்கிலி மற்ற பொருள்களையும் விற்று இஷ்டம்போல் செலவழித்தது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.