திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் தங்கக் கடத்தல் சம்பவங்களும், வெளிநாட்டு கரன்சிகள் கடத்தப்படும் சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகமாகிவருகின்றன. இந்தக் கடத்தல் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுவருகின்றனர். ஆனாலும் கடத்தல் சம்பவங்கள் குறைந்தபாடில்லை. ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக சினிமாவை மிஞ்சும் வகையில் கடத்தல் சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன.
அந்த வகையில், திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று காலை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சிங்கப்பூருக்குக் கிளம்பத் தயாராக இருந்தது. போர்டிங் செய்துவிட்டு விமானத்தில் பயணிகள் ஏறிக்கொண்டிருந்தனர்.

அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்யவிருந்த பயணிகளைச் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஆண் பயணி ஒருவரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. உடனே, அந்த பயணியை ஓரம்கட்டி தனியே அழைத்துச் சென்று அவரையும், அவரின் உடைமைகளையும் அதிகாரிகள் சோதனை செய்திருக்கின்றனர்.
அப்போது அந்தப் பயணி தன்னுடைய செருப்பில் கத்தை கத்தையாக அமெரிக்க டாலரைக் கடத்தி, மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இந்திய மதிப்பில் ரூ.7.73 லட்சம் மதிப்பிலான, கிட்டத்தட்ட 9600 அமெரிக்க டாலர் அந்தப் பயணி தன்னுடைய செருப்பில் மறைத்துவைத்து, கடத்தி வந்ததைக் கண்டு அதிகாரிகள் அதிர்ந்து போயினர். அதையடுத்து, அந்த அமெரிக்க டாலரைக் கைப்பற்றிய விமான நிலைய வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள், அந்தப் பயணியிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.