Published:Updated:

`இ-பாஸ் இங்கே கிடைக்கும்..!' -போலீஸுக்கு அதிர்ச்சிகொடுத்த சூலூர் ஜெராக்ஸ் கடை

ஜெராக்ஸ் கடை
ஜெராக்ஸ் கடை

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில், போலி இ-பாஸ் தயாரித்துக் கொடுத்த ஜெராக்ஸ் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, மண்டலவாரியாகப் பிரிக்கப்பட்டு போக்குவரத்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மண்டலத்திலிருந்து மற்றொரு மண்டலத்துக்கு செல்ல இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கோவை
கோவை
`ரூ. 4000-க்கு போலி இ-பாஸ்!’ - கன்னியாகுமரி போலீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த சென்னை டிரைவர்

திருமணம், இறப்பு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்படுகிறது. அப்படி இ-பாஸுக்கு விண்ணப்பித்து கிடைக்காதவர்கள், புரோக்கர்கள் மூலம் போலியாக இ-பாஸ் வாங்கிக்கொண்டு வெளியூர்களுக்கு சென்று கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், தென் மாவட்டங்களில் போலி இ-பாஸ் மூலம் வருபவர்கள் , காவல்துறை சோதனைச் சாவடிகளில் சிக்கிவருகின்றனர்.

இந்நிலையில், கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில், போலி இ-பாஸ் அச்சடித்துக் கொடுத்த ஜெராக்ஸ் கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

கண்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவர், திருச்செந்தூர் சென்றுகொண்டிருந்தபோது, விருதுநகர் அருகே அவரை போலீஸார் சோதனை செய்தனர். அப்போது, போலீஸ் விசாரணையில் மணிவண்ணன் வைத்திருந்தது போலியான இ-பாஸ் எனத் தெரியவந்துள்ளது.

இ-பாஸ் ஜெராக்ஸ் கடை
இ-பாஸ் ஜெராக்ஸ் கடை

இதையடுத்து, விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோவை மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கோவை வருவாய்த்துறை அதிகாரிகள் மணிவண்ணனிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

மணிவண்ணனுக்கு அரசுத் தரப்பில் இ-பாஸ் கிடைக்காததால், சூலூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள சூலூர் ஜெராக்ஸ் என்னும் கடையில் போலி இ-பாஸ் பெற்றது தெரியவந்தது. அதையடுத்து, சூலூர் வட்டாட்சியர் மீனாகுமாரி அந்த கடைக்குச் சென்று சோதனை செய்தார். பின்னர், அந்தக் கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தார்.

சீல்
சீல்

மேலும், அந்த ஜெராக்ஸ் கடை உரிமையாளர் பாலு மீது, சூலூர் காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார். பாலு மீது வழக்குப்பதிவு செய்து, அவர் எத்தனை பேருக்கு இ-பாஸ் விற்பனை செய்துள்ளார், இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என சூலூர் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு