Published:Updated:

சினிமா எடுக்க ₹50 கோடி ஃபைனான்ஸ்; நகைக்கடன் மோசடியில் வாரிச்சுருட்டிய கூட்டுறவு வங்கி நிர்வாகிகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மோசடியில் சிக்கிய குரும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி
மோசடியில் சிக்கிய குரும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி

``வாடிக்கையாளர்களிடம் பெற்ற டெபாசிட் பணத்தில் ரூ.50 கோடியை திருச்செந்தூரிலுள்ள சில தொழிலதிபர்கள் மூலம் சினிமா எடுக்க, 2 பேருக்கு தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டாகச் சேர்ந்து கடன் கொடுத்துள்ளனர்." - அதிகாரிகள்

தமிழகக் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 சவரன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் எனக் கடந்த மாதம் முதல்வர் ஸ்டாலின், சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார். யாருக்கெல்லாம் இந்த சலுகை கிடைக்கும் என்பது குறித்த அறிவிப்பு வெளியானதும் அதிகாரிகள் குழுவினர் அனைத்துக் கூட்டுறவு வங்கிகளில் அடமானமாக வைக்கப்பட்ட நகைகளின் விவரம் அறிய வங்கிகளில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள குரும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில், திருச்செந்தூர் கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் மற்றும் சார் பதிவாளர் ஆகியோர் அடங்கிய குழுவினர் கடந்த செப்டம்பர் 8-ம் தேதி மற்றும் 13-ம் தேதியில் நகைக்கடன்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

வங்கி பெயரில் வழங்கப்பட்ட போலி டெபாசிட் பாண்ட்
வங்கி பெயரில் வழங்கப்பட்ட போலி டெபாசிட் பாண்ட்

அப்போது, நகைக் கடன்கள் வழங்கப்பட்டிருந்த 548 நகைப் பைகளில் 261 நகைப் பைகள் மாயமானது ஆய்வில் தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், தொடர்ந்து நடத்திய விசாரணையில் நகையே இல்லாமல் நகைக்கடன் என்ற பெயரில் ரூ.2,03,92,700 மோசடி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதேபோல், வாடிக்கையாளர்கள் வங்கியில் டெபாசிட் செய்த பணம் இருக்கிறதா என்று வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவராக வந்து பார்த்தபோது, டெபாசிட் பணத்தை வாடிக்கையாளர்கள் கணக்கில் வரவு வைக்காமல் அவர்களுக்கு போலியான பாண்ட் போட்டுக் கொடுத்து அந்தப் பணத்தையும் மோசடி செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து வங்கியில் பணத்தை டெபாசிட் செய்த வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவராக விசாரணைக் குழுவினரிடம் புகார் அளித்தனர். நகைக்கடன், டெபாசிட் பணம் என மொத்தம் ரூ.3 கோடி வரை மோசடி நடந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது.

குரும்பூர்
குரும்பூர்

இந்த நிலையில், அதிகாரிகளின் தொடர் விசாரணையில், `ரூ.50 கோடிக்கும்மேல் மோசடி நடந்திருக்கலாம்’ எனத் தெரியவந்துள்ளது.

இதையடுத்து வங்கியின் தலைவரான நாலுமாவடியைச் சேர்ந்த முருகேசபாண்டியன் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். செயலாளரான திருச்செந்தூரைச் சேர்ந்த தேவராஜ், துணைச் செயலாளரான குரும்பூரைச் சேர்ந்த ஜான்ஸி சந்திரகாந்தா ஞானபாய் ஆகியோரும் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டனர்.

இந்த மோசடிக்குத் துணைபோனதாக ஆழ்வார்திருநகரி வட்டாரக் கூட்டுறவு வங்கியின் களஅலுவலர், கிளையின் ஆய்வாளர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மோசடி செய்யப்பட்ட பணத்துக்கு ஈடாக, பதவி நீக்கப்பட்ட வங்கியின் நிர்வாகிகளின் அசையும், அசையாச் சொத்துகளை பறிமுதல் செய்திடும் வகையில் ஜப்தி நோட்டீஸும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு டி.எஸ்.பி பாண்டிச் செல்வம் தலைமையிலான போலீஸார், வங்கியின் தலைவர் முருகேசபாண்டியனை கடந்த 13-ம் தேதி கைது செய்ததுடன் அவர் மீது பணியாளர் மோசடி, நம்பிக்கை மோசடி, குற்றச் சதித்திட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மோசடியில் சிக்கிய வங்கி
மோசடியில் சிக்கிய வங்கி
12,000 பேரிடம் மோசடி செய்த நிதி நிறுவன அதிபர் அடித்துக் கொலை? - பணத்தை முதலீடு செய்தவர்கள் அதிர்ச்சி

அத்துடன் தலைமறைவாகியுள்ள பிற நிர்வாகிகளையும் தேடி வருகின்றனர். இது குறித்து வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் தரப்பில் பேசினோம்.

``ரூ.2 கோடிக்கு நகைக்கடன் வழங்கப்பட்டதற்கான முறைகேட்டைக் கண்டுபிடித்துள்ளோம். வங்கியில் டெபாசிட் செய்த வாடிக்கையாளர்கள் வைத்திருந்த பாண்டுவை வைத்து, அவர்களது வங்கிக் கணக்கைச் சரிபார்த்தபோது, அதில் குறிப்பிடப்பட்ட கணக்கு எண், உண்மையான டெபாசிட் கணக்கு எண் இல்லை. வாடிக்கையாளர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு போலியான பாண்டைக் கொடுத்ததும் இப்போதுதான் தெரிய வருகிறது.

மோசடியில் ஈடுபட்ட நிர்வாகிகளின் சொத்துகளை மற்றவர்கள் பெயரில் மாற்றாமல் இருக்கவும், அவர்களின் சொத்துகளை முடக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

வாடிக்கையாளர்களிடம் பெற்ற டெபாசிட் பணத்தில் ரூ.50 கோடியை திருச்செந்தூரிலுள்ள சில தொழிலதிபர்கள் மூலம் சினிமா எடுக்க, 2 பேருக்கு தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டாகச் சேர்ந்து கடன் கொடுத்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கால் சினிமாத் துறையில் படப்பிடிப்புகள் நடக்காததால், சினிமாவுக்காகக் கொடுத்தப் பணம் திரும்பிக் கிடைக்கவில்லை. அத்துடன் டெபாசிட் பணத்தில் பல இடங்களில் பினாமிகளின் பெயர்களில் சொத்துகளை வாங்கியுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தலைமறைவான செயலாளர், துணைச் செயலாளர் இருவரும் கைதானால்தான் மோசடி குறித்து முழுமையாகத் தெரியவரும்” என்றனர்.

ஜப்தி நோட்டீஸ் ஒப்பட்டப்பட்ட துணைச் செயலாளர் ஜான்ஸி சந்திரகாந்தாவின் வீடு
ஜப்தி நோட்டீஸ் ஒப்பட்டப்பட்ட துணைச் செயலாளர் ஜான்ஸி சந்திரகாந்தாவின் வீடு
`திமுக அரசின் நகைக்கடன் தள்ளுபடியில் ஏகப்பட்ட நிபந்தனைகள்..!’ - குற்றம்சாட்டும்  எம்.ஆர்.விஜயபாஸ்கர்

ஆக, தோண்டத் தோண்ட பூதம் கிளம்புவது போல, குரும்பூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் பல மோசடிகள் கிளம்பி வெளியே வருகின்றன. இந்தக் கூட்டுறவு வங்கியில் நடந்த மோசடிகளைப் பார்க்கும்போது, தமிழகத்தில் பல ஊர்களில் இயங்கும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் எப்படி இயங்குகின்றன, அந்த வங்கிகளிலும் ஏதாவது மோசடி நடந்திருக்கிறதா என்பதை ஆய்வு செய்து பார்க்க வேண்டியது கட்டாயம். இதைத் தமிழக அரசு உணர்ந்தாக வேண்டும்.

குறிப்பாக, இந்த வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்து வைத்திருக்கும் மக்கள் தங்கள் டெபாசிட் பணம் பத்திரமாக இருக்கிறதா என்பதை சரிபார்த்து, அதில் ஏதும் மோசடி நடந்திருந்தால், உடனடியாகப் புகார் செய்வது அவசியத்திலும் அவசியம்!

அரசும் மக்களும் கவனமாக இல்லை என்றால், பாடுபட்டு உழைத்துச் சம்பாதித்த பணத்தை இழக்க வேண்டிய அபாயம் ஏற்படும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு