Published:Updated:

`கோவை தி.மு.க பிரமுகர் வீட்டில் நடந்த சோதனை!’ - கட்டுக்கட்டாக சிக்கிய பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகள்

குறிப்பாக ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் மேல் ஒரு நோட்டு மட்டுமே ஒரிஜினல் கீழ் உள்ள அனைத்தும் காகிதங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயிரம் ரூபாய் நோட்டுகள்
ஆயிரம் ரூபாய் நோட்டுகள்

கோவை தொண்டாமுத்தூர், வடவள்ளி பகுதியில் தி.மு.க பிரமுகர் வீட்டில் மத்தியப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மற்றும் வடவள்ளி காவல் துறையினர் நடத்திய அதிரடி சோதனையின்போது பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாகப் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆனந்தன்
ஆனந்தன்

திருப்பூர் மாவட்டம், அவிநாசி தொகுதி தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ இளங்கோ. இவரது மகன் ஆனந்தன். இவரும் தி.மு.க கட்சியில் இருக்கிறார். நீலகிரி எம்.பி ராசாவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், கோவை தொண்டாமுத்தூர் பகுதியிலுள்ள ஆனந்தன் வீட்டில் கட்டுக்கட்டாக பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருப்பதாக மத்தியப் புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அவருக்குச் சொந்தமான சொகுசு பங்களாவில் சுமார் 30 -க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் வடவள்ளி காவல்துறையினர் இரவு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, ரூ.2,68,000 மதிப்பிலான பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகளைப் பறிமுதல் செய்தனர். மேலும் 660 காகித ரூபாய் நோட்டுகள் போன்ற காகிதப் பண்டல்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். குறிப்பாக ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் மேல் ஒரு நோட்டு மட்டுமே ஒரிஜினல் கீழ் உள்ள அனைத்தும் காகிதங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ரகசிய தகவலின் அடிப்படையில் தொடர்ந்து கருவிகளைக் கொண்டு வீடு முழுக்க சோதனையில் ஈடுபட்டனர். இந்தப் பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுக் கட்டுகளைக் கொண்டு மோசடி செய்ய திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

`கோவை தி.மு.க பிரமுகர் வீட்டில் நடந்த சோதனை!’ - கட்டுக்கட்டாக சிக்கிய பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகள்

அமைதிப்படை 2 திரைப்படம், மேலும் சில நாடகம் உள்ளிட்ட சின்னத்திரை மற்றும் திரைப்படங்கள் இந்த சொகுசுவீட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீட்டில் குடியிருந்த ரசீத், பேரூக், சேக் ஆகியோரின் தொலைபேசி எண்களை போலீசார் தொடர்பு கொண்ட போது மூவரின் தொலைபேசி எண்களும் அணைத்துவைக்கப்பட்டிருந்தன.

இதுகுறித்து மத்தியப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனந்தன் ஏற்கெனவே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வனப்பகுதியில் ரியல் எஸ்டேட் மோசடியில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.