Published:Updated:

நாங்குநேரி: மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்; நகைக்காக மருமகனே கொலை செய்த கொடூரம்!

கொலை
கொலை

ஏற்கெனவே நோய்வாய்ப்பட்டிருந்த மூதாட்டி உயிரிழந்ததால், உறவினர்கள் உடலை எரியூட்டினர். ஆனால், அவரது நகைகள் காணாமல் போயிருந்ததால் நடந்த விசாரணையில் மருமகனே கொலை செய்தது தெரியவந்தது.

நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகேயுள்ள ஜெகநாதபுரத்தைச் சேர்ந்தவர் வடிவு. 65 வயது மூதாட்டியான அவருடைய கணவர் பேச்சி ஏற்கெனவே இறந்துவிட்டார். வடிவுக்கு திருமலை நம்பி என்ற மகனும் பரமேஸ்வரி, வேலம்மாள் என்ற மகள்களும் உள்ளனர்.

பழிக்குப் பழி; கட்டட ஒப்பந்ததாரர் கொலை! - ட்ரோன் மூலம் கொலையாளிகளைத் தேடும் நெல்லை போலீஸ்!

மகன், மகள்களுக்குத் திருமணமாகி தனிக்குடித்தனம் நடத்திவருவதால், வடிவு மட்டும் தனியாக வசித்துவந்திருக்கிறார். அவரது வீட்டுக்கு அடுத்த தெருவில் மகன் திருமலை நம்பியும், மகள் வேலம்மாளும் குடும்பத்துடன் வசித்துவருகின்றனர்.

வடிவு கடந்த 12-ம் தேதி மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் வீட்டில் இறந்துகிடந்திருக்கிறார். அவருக்கு ஏற்கெனவே உடல்நலக் குறைவு இருந்ததால், நோய் காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இறந்திருக்கலாம் என உறவினர்கள் கருதினார்கள்.

கொலைசெய்யப்பட்ட வடிவு
கொலைசெய்யப்பட்ட வடிவு

அதனால் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, குடும்ப வழக்கப்படி இறுதிச் சடங்குகள் செய்து அவரது உடலை எரித்துள்ளனர். வடிவு இறந்து ஓரிரு நாள்கள் ஆகிவிட்டதால் அவர் அணிந்திருந்த நகைகளை உறவினர்கள் சரிபார்த்திருக்கிறார்கள்.

வடிவு அணிந்திருந்த கம்மல், செயின் உள்ளிட்டவை மாயமாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் அணிந்திருந்த 13 சவரன் நகைகள் மாயமாகியிருந்தது தெரியவந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தார்கள். வீட்டுக்குள் எங்காவது இருக்குமா எனத் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

நெல்லை: ஆடு திருடிய கும்பல் மீது போலீஸில் புகார்?! - பார் உரிமையாளர் வெட்டிக் கொலை

அதனால் வடிவு இறப்பதற்கு முன்பு, இரவு நேரத்தில் வீட்டுக்கு யாராவது வந்தார்களா என அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் குடும்பத்தினர் விசாரித்தனர். அப்போது, இரவு நேரத்தில், பாளையங்கோட்டை அருகேயுள்ள நடுவக்குறிச்சியில் வசிக்கும் மகள் பரமேஸ்வரியின் கணவரான கல்லத்தியான் என்பவர் சிலருடன் வந்து சென்ற தகவல் கிடைத்தது.

கல்லத்தியான் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதால் மாயமான நகைகள் குறித்து குடும்பத்தினர் அவரிடம் விசாரித்துள்ளனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததுடன், அனைவரையும் மிரட்டும் தொனியில் பேசியிருக்கிறார். அதனால் உறவினர்கள் இது குறித்து மூலைக்கரைப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

கொலை
கொலை
representational image

இன்ஸ்பெக்டர் காளியப்பன் தலைமையிலான போலீஸார் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். பின்னர், கல்லத்தியானிடம் விசாரித்தனர். அவர் பேச்சிலிருந்த முரண்பாடுகளைத் தொடர்ந்து போலீஸார், வழக்கமான பாணியில் விசாரித்தபோது நகைக்காக நண்பர்கள் சிலருடன் சேர்ந்து மூதாட்டி வடிவைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

குடிப்பதற்குப் பணம் இல்லாததால், நண்பர்களுடன் வடிவைக் கொன்று கொள்ளையடிக்கத் திட்டமிட்டதாகவும், அதன்படி சென்று அவரது முகத்தில் தலையணையை வைத்து அழுத்திக் கொலை செய்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

நகைகளைக் கொள்ளையடிக்க நண்பர்களுடன் சேர்ந்து மாமியாரைக் கொலை செய்தேன்.
மருமகன் வாக்குமூலம்

பின்னர், அவர் அணிந்திருந்த நகைகள், வீட்டில் இருந்த 13 சவரன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்தக் கொலையில் அவருக்கு உடந்தையாக இருந்த நடுவக்குறிச்சியைச் சேர்ந்த இசக்கிராஜா (26) கீழநத்தம் மூர்த்தி (29) அந்தோணி (32) ஆகியோரையும் போலீஸார் கைதுசெய்தனர். நகைக்காக மருமகனே மாமியாரைக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு