Published:Updated:

`தடுத்தார்; கட்டாயப்படுத்தினார்; கொன்றுவிட்டேன்'- முதியவரைக் கொலை செய்தவர் அதிர்ச்சி வாக்குமூலம்

எஸ்.மகேஷ்

சம்பவத்தன்று முதியவர் பாஸ்கரன் வீட்டுக்குச் சென்றேன். அங்கு அவர் `என்னைக் கட்டாயப்படுத்தினார். அதனால் அவரைக் கொலை செய்துவிட்டு செயின் மோதிரங்களை கொள்ளையடித்துவிட்டு தப்பினேன்' என்று ஹோட்டல் தொழிலாளி அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

பாஸ்கரனின் சடலம்
பாஸ்கரனின் சடலம்

சென்னையை அடுத்த மாங்காடு அருகே உள்ள மதனந்தபுரம், குறிஞ்சி தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (78). இவர் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து ஓய்வுபெற்றவர். கடந்த சில தினங்களாக பாஸ்கரனின் வீடு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில், பூட்டிய வீட்டுக்குள் இருந்து கடந்த 20-ம் தேதி தூர்நாற்றம் வீசியது. இதுகுறித்து மாங்காடு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார், பூட்டை உடைத்து உள்ளே சென்றபோது பாஸ்கரன் இறந்துகிடந்தார். மேலும், அவரின் தலையில் பலத்த காயம் இருந்தது. அவர் இறந்து சில தினங்கள் ஆனதால் சடலமும் அழுகிய நிலையில் காணப்பட்டது.

பாஸ்கரனின் வீடு
பாஸ்கரனின் வீடு

இதையடுத்து, சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் பாஸ்கரின் தலையில் காயமும் கழுத்து நெரிக்கப்பட்டதும் தெரியவந்தது. அதோடு இன்னொரு முக்கிய தகவலும் பிரேதப் பரிசோதனையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் பாஸ்கரனை கொலை செய்தது யார் என்று போலீஸார் விசாரித்தனர்.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் நம்மிடம், ``கொலை செய்யப்பட்ட பாஸ்கரனுக்கு சுசிலா என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் தனித்தனியாக வசித்துவந்தனர். பாஸ்கரனின் மூத்த மகன் வெளிநாட்டில் பணியாற்றுகிறார். இளைய மகன், மணிமங்கலத்தில் குடியிருக்கிறார். அவருடன்தான் சுசிலா தங்கியுள்ளார். பாஸ்கரன் மட்டும் தனியாக இந்த வீட்டில் குடியிருந்தார்.

Representational image
Representational image

வசதியானவர் என்பதால் அவரின் கழுத்தில் செயினும் கைகளில் மோதிரங்களை அணிந்திருப்பார். ஆனால், பாஸ்கரனின் சடலத்தில் செயினும் மோதிரங்களும் காணாமல் போயிருந்தன. இதனால் நகைக்காக இந்தக் கொலை நடந்திருக்கும் என்ற கோணத்தில் விசாரித்தோம். அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தோம். மேலும் நடத்திய விசாரணையில் பாஸ்கரன் வீட்டுக்கு அந்தப்பகுதியைச் சேர்ந்த காவலாளி ஒருவர் அடிக்கடி வரும் தகவல் தெரியவந்தது. கொலை நடந்த பிறகு அவரும் மாயமாகியிருந்தார். இதனால் அவரைத் தேடிவந்தோம்.

இந்தச் சூழ்நிலையில் பாஸ்கரனின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தபோது அவர், அதே பகுதியைச் சேர்ந்த அகமது என்பவரிடம் போனில் பேசியது தெரியவந்தது. ஆனால், பாஸ்கரன் கொலை செய்த நாளிலிருந்து அகமதுவைக் காணவில்லை. இதனால் அகமது மீதான சந்தேகம் வலுத்தது. அகமது குறித்து விசாரித்தபோது அவர் பதுங்கியிருந்த இடம் எங்களுக்குத் தெரியவந்தது. அங்கு சென்று அவரைப் பிடித்து விசாரித்தபோது பாஸ்கரனைக் கொலை செய்ததை ஒத்துக்கொண்டார். அதோடு கொலைக்கான காரணத்தையும் அவர் கூறினார். இதையடுத்து அகமதுவைக் கைது செய்துள்ளோம்" என்றார்.

கொலை நடந்த வீடு
கொலை நடந்த வீடு

போலீஸாரிடம் அகமது அளித்த வாக்குமூலத்தில், ``நான் ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்துவருகிறேன். அங்கு, பாஸ்கரன் சாப்பிட வருவார். என்னுடன் சகஜமாகப் பழகினார். அப்போது என்னுடைய குடும்ப விவரம், பணக் கஷ்டத்தை பாஸ்கரனிடம் கூறினேன். அதைக் கேட்ட பாஸ்கரன், எனக்கு உதவி செய்வதாகக் கூறினார். இதனால் அவர் சொல்வதைக் கேட்கத் தொடங்கினேன்.

சம்பவத்தன்று எனக்கு பாஸ்கரன் போன் செய்தார். அவரின் வீட்டுக்கு நான் சென்றேன். அப்போது அவர், என்னிடம் அன்பாக பேசினார். பண உதவி செய்வதாகக் கூறினார். இதனால் பணம் கிடைத்தால் கடன்களை அடைத்துவிடலாம் என்று திட்டமிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது என் அருகில் வந்த பாஸ்கரன், நீயும் நானும் சந்தோஷமாக இருக்கலாம் என்று கூறினார். முதலில் அவர் கூறியது எனக்குப் புரியவில்லை. இதனால் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், நான் சொன்னது இன்னமும் உனக்குப் புரியவில்லை என்று கூறியபடி என்னைக் கட்டிப்பிடிக்க முயன்றார். அப்போதுதான் அவரின் சுயரூபம் எனக்குத் தெரிந்தது. இதனால் வேண்டாம் என்று கூறியபடி வீட்டிலிருந்து வெளியில் செல்ல ஆயத்தமானேன். ஆனால், பாஸ்கரன் என்னைத் தடுத்தார். அதோடு என்னைக் கட்டாயப்படுத்தினார். இதனால் எனக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டது.

நான் சப்ளையராக பணியாற்றும் ஹோட்டலுக்கு சாப்பிட வரும் பாஸ்கரன், என்னிடம் அன்பாக பேசுவார். எனக்கு பண உதவிகளைச் செய்வதாகக் கூறினார். அதை நம்பி அவரின் வீட்டுக்குச் சென்றபோது அவரின் உள்நோக்கம் எனக்கு தெரிந்ததும் புறப்பட தயாரானேன்.
அகமது

ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த நான், அருகில் கிடந்த செங்கலை எடுத்து அவரின் தலையில் ஓங்கி அடித்தேன். இதில் அவர் தலையிலிருந்து ரத்தம் கொட்டி மயங்கிவிட்டார். அவர் இறந்துவிட்டார் என்று கருதினேன். ஆனால் அவரின் உயிர் பிரியவில்லை. கண் விழித்துவிட்டால் என்னைக் காட்டிக் கொடுத்துவிடுவார் என்ற பயத்தில் லுங்கியால் அவரின் கழுத்தை நெரித்தேன். சிறிது நேரத்தில் அவர் இறந்துவிட்டார். நகைக்காக அவர் கொலை செய்யப்பட்டார் என்று நம்ப வைக்க அவர் அணிந்திருந்த செயின், மோதிரங்களை கழற்றினேன். பிறகு வீட்டை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு தப்பிவிட்டேன். ஆனால் போனின் கால் ஹிஸ்ட்ரியால் சிக்கிக்கொண்டேன்'' என்று கூறியுள்ளார்.