Published:Updated:

மெழுகுவத்தி எடுத்துவருவதில் தாமதம் - மனநலம் குன்றிய மகனால் தந்தைக்கு நேர்ந்த கொடூரம்!

திருவள்ளூர் அருகே தந்தையைக் கட்டையால் அடித்துக் கொலை செய்த மகனை போலீஸார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், வெங்கத்தூரை அடுத்த கண்ணியம்மா நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (51) கூலித்தொழிலாளி. இவர் மனைவி மகேஸ்வரி. இந்த தம்பதிக்குப் பாண்டியன் (28) என்ற மகன் இருக்கிறார். பாண்டியனுக்கு மனநலம் குன்றியவர் என்று கூறப்படுகிறது. அதனால், அவர் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருந்து, மாத்திரை வாங்கி கொடுத்து வந்திருக்கின்றனர். ஆனால், மருந்து சாப்பிட்டும் அவர் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது. பாண்டியன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தாய் மகேஸ்வரியை திடீரென தாக்கியதாகத் தெரிகிறது. அதனால், அவர் தன் கணவர் பாலகிருஷ்ணனை மட்டும் அங்கு விட்டு விட்டு, திருநின்றவூரில் இருக்கும் தன் உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்று வசித்து வந்திருக்கிறார்.

திருவள்ளூர்
திருவள்ளூர்

அதனால், வீட்டில் பாலகிருஷ்ணனும், அவர் மகன் பாண்டியனும் மட்டும் தங்கி வந்திருக்கின்றனர். இந்த நிலையில், நேற்று நள்ளிரவு நேரத்தில் அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டது. அதனால், பாண்டியன் தன் தந்தை பாலகிருஷ்ணனிடம் மெழுகுவத்தி கொண்டு வருமாறு கூறியிருக்கிறார். அப்போது, பாலகிருஷ்ணன் மெழுகுவத்தி கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. அதனால், திடீரென ஆத்திரமடைந்த பாண்டியன், தந்தை பாலகிருஷ்ணனிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். பதிலுக்கு அவரும் பாண்டியனிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். ஒருகட்டத்தில், வாக்குவாதம் முற்றிய நிலையில், பாண்டியன் வீட்டிலிருந்த உருட்டு கட்டையை எடுத்து பாலகிருஷ்ணனின் தலையில் பலமாகத் தாக்கியிருக்கிறார்.

கொலை
கொலை

அதில், பாலகிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், பித்துப் பிடித்தவர் போல அங்குமிங்கும் அலைந்திருக்கிறார். சத்தம் கேட்டு வந்த அங்கு விரைந்த அக்கம்பக்கத்தினர், பாலகிருஷ்ணன் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதையடுத்து, உடனடியாக மணவாள நகர் காவல்நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், மணவாள நகர் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் ஆகியோர் தலைமையிலான போலீஸார், தந்தையைக் கொலை செய்த பாண்டியனைக் கைது செய்து காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.

அதைத் தொடர்ந்து, பாலகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகத் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, பாண்டியனிடம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருவள்ளூர்: `தண்டவாள மின்கம்பத்தில் தொங்கிய சடலம்... கொலையா, தற்கொலையா?!' - போலீஸ் தீவிர விசாரணை
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு