Published:Updated:

ஆரணி: `வீடு தேடிவந்து அசிங்கப்படுத்தியதால்..!’ - அதிரவைத்த நெசவுத் தொழிலாளி

நெசவுத் தொழிலாளி கணேசன்
நெசவுத் தொழிலாளி கணேசன்

``கொரோனா ஊரடங்கில் சாப்பாட்டுக்கே வழியில்லாத சூழலில், கடனை எப்படி அடைக்க முடியும்? வீடு தேடிவந்து அசிங்கப்படுத்தியதால் மூதாட்டியைக் கொன்றுவிட்டேன்’’ என்று திடுக்கிடும் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார், நெசவுத் தொழிலாளி ஒருவர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த தேவாங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி (67). கணவரை இழந்தவர். இவரின் ஒரே மகளான கோமதி பக்கத்து கிராமத்தில் குடும்பத்துடன் தங்கியிருக்கிறார். தனியாக வசித்துவந்த மூதாட்டி ராஜேஸ்வரி, வீட்டை வாடகைக்குவிட்டும், வட்டிக்கு பணம் கொடுத்து வசூலித்தும்வந்திருக்கிறார். இந்தநிலையில், பலமுறை போன் செய்தும் தாய் எடுக்காததால், மகள் கோமதி பதறியடித்துக்கொண்டு கடந்த 21-ம் தேதி தாய் வீட்டுக்கே வந்திருக்கிறார். அப்போது, ராஜேஸ்வரி தீயில் கருகிய நிலையில் வீட்டுக்குள் சடலமாக இறந்துகிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்து கதறியழுதார். வீடு முழுவதும் மிளகாய்ப்பொடி தூவப்பட்டிருந்தது. தாய் ராஜேஸ்வரியை யாரோ கொலைசெய்து எரித்துள்ளதை உணர்ந்துகொண்ட கோமதி கண்ணமங்கலம் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.

ஆரணி
ஆரணி

போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, உடலை மீட்டு, தடயங்களையும் கைப்பற்றினர். கொலை செய்யப்பட்ட மூதாட்டியின் கழுத்து, காதிலிருந்த தங்க நகைகளும் மாயமாகியிருந்தன. இதனால் சந்தேகமடைந்த போலீஸார், ஆரணி ஒண்ணுபுரத்திலுள்ள நகை அடகுக்கடை வியாபாரிகளிடம் சமீபத்தில் நகை அடகுவைத்தவர்களின் விவரங்களைச் சேகரித்தபோது துப்பு துலங்கியது. கொலை நடந்த தேவாங்குபுரத்தைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளியான கணேசன் (36) என்பவர் ஒரு கடையில் நகைகளை அடகுவைத்திருப்பது தெரியவந்தது.

ராஜேஸ்வரியிடம் கடன் பெற்றவர்களின் விவரங்களையும் போலீஸார் சேகரித்துப் பார்த்தனர். அதிலும், கணேசனின் பெயர் இடம்பெற்றிருந்தது. அவரைத் தேடிச்சென்றபோது தலைமறைவான தகவலும் தெரியவந்தது. உடனடியாக தனிப்படை அமைக்கப்பட்டு கணேசனைப் பிடிக்க தேடுதல் பணியும் முடுக்கிவிடப்பட்டது. சென்னையில் பதுங்கியிருந்த கணேசனை போலீஸார் நேற்று கைதுசெய்தனர். விசாரணையில் மூதாட்டியை தீர்த்துக்கட்டியதை அவர் ஒப்புக்கொண்டார்.

கைது செய்யப்பட்ட கணேசன்
கைது செய்யப்பட்ட கணேசன்

போலீஸாரிடம் கணேசன் கொடுத்த வாக்குமூலத்தில், ``மூதாட்டி ராஜேஸ்வரிடம் 10,000 ரூபாய் கடன் வாங்கியிருந்தேன். அந்தக் கடனை முழுமையாகத் திருப்பி செலுத்த முடியவில்லை. ராஜேஸ்வரி கடனைக் கேட்டு தொந்தரவு செய்தார். கொரோனா ஊரடங்கில் சாப்பாட்டுக்கே வழியில்லாத சூழலில், கடனை எப்படி அடைக்க முடியும்? வீடு தேடிவந்து அசிங்கப்படுத்தியதால் கொலைத் திட்டத்தை அரங்கேற்றினேன். கடந்த 14-ம் தேதி ஓர் இரும்பு ராடுடன் ராஜேஸ்வரியின் வீட்டுக்கே சென்றேன். தனியாக இருந்த அவரை இரும்பு ராடால் தாக்கினேன். சுருண்டு விழுந்த அவரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றேன். கொலையை திசைதிருப்புவதற்காக வீடு முழுவதும் மிளகாய்ப் பொடியைத் தூவிட்டு, அவர் அணிந்திருந்த நகைகளையும் பறித்துச் சென்றேன்’’ என்று கூறியதாகக் காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள்.

இதையடுத்து, கணேசனைக் கைது செய்த போலீஸார், ஆரணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு