Published:Updated:

`மருத்துவமனை பில் ரூ. 5,700; போலி பில் ரூ. 2,00,000!’- விபத்தில் சிக்கிய நபரைப் பதறவைத்த நண்பன்

உயிர் நண்பனே தன்னை ஏமாற்றிவிட்டானே என நொறுங்கிப்போனார் முருகன். இதைத் தொடர்ந்து போலி பில் அச்சடித்த பெனட் மீது மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

மருத்துவமனை பெயரில் போலி பில் தயாரித்த பெனட்
மருத்துவமனை பெயரில் போலி பில் தயாரித்த பெனட்

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (34). கூலித் தொழிலாளியான இவர் கடந்த ஆண்டு ஒரு விபத்தில் சிக்கினார். அதில் படுகாயம் அடைந்த அவருக்கு முதுகுத் தண்டுவடத்தில் முறிவு ஏற்பட்டது. ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். எனினும் அவருக்கு முதுகுத் தண்டுவட பிரச்னை சரியாகவில்லை. இதுகுறித்து முருகன் தனது நெருங்கிய நண்பரான பெனட் என்பவரிடம் கூறியுள்ளார். தன்னிடம் தமிழக அரசின் முதலமைச்சர் காப்பீடு திட்ட அட்டை உள்ளதாகவும் அதைப் பயன்படுத்தி ஏதாவது தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய முடியுமா என்றும் உதவி கேட்டுள்ளார்.

முருகன்
முருகன்

நாகர்கோவில் அருகே தேரேக்கால்புதூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதுகுத்தண்டு பிரச்னைக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறியுள்ளார் பெனட். மேலும், அங்கு தமிழக அரசின் காப்பீட்டுத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் தண்டுவட பிரச்னை சரி செய்ய பல லட்சம் ரூபாய் செலவாகும் என்றும் கூறியுள்ளார். முருகனுக்கு லட்சக்கணக்கில் பணம் செலவு செய்யும் வசதி இல்லாததால், அவர் தனக்கு சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதாக ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில் வங்கி கணக்கு எண் மற்றும் செல்போன் எண்ணையும் பதிவிட்டுள்ளார்.

அதன்மூலம் சுமார் இரண்டு லட்சம் ரூபாய் அவரது வங்கிக் கணக்கில் வந்துள்ளது. பணம் வந்திருக்கும் விவரத்தை நண்பர் பெனட்டிடம் கூறி, சிகிச்சைக்கு ஏற்பாடுசெய்யும்படி கேட்டுள்ளார். நாகர்கோவில் மனுவேல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். மருத்துவமனையில் முருகனுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. பெனட் தனது நண்பனை கூடவே இருந்து கவனித்திருக்கிறார். மேலும், சிகிச்சை செலவுக்காக மருத்துவமனை பில் ஆவணங்களைக் காட்டி அவ்வப்போது சிறிது சிறிதாக இரண்டு லட்சம் ரூபாய் வரை முருகனிடம் இருந்து வாங்கியுள்ளார்.

போலி ரசீது
போலி ரசீது

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய முருகன் கடந்த சில நாள்களுக்கு முன்பு மருந்து, மாத்திரைகள் வாங்குவதற்காக மருத்துவமனைக்கு தனியாக வந்துள்ளார். அப்போது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவரிடம்  உங்கள் மருத்துவமனையில் அதிக பணம் வாங்குகிறார்கள் எனது சிகிச்சைக்கு இரண்டு லட்சம் ரூபாய் வரை செலவாகிவிட்டது என்று கூறி வருத்தப்பட்டுள்ளார். மருத்துவர்களோ உங்கள் அறுவை சிகிச்சைக்கு எங்கள் மருத்துவமனையில் பணம் வாங்கவில்லை. முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உங்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. மருந்து செலவுகளுக்காக ரூ.5,700 மட்டுமே உங்களிடமிருந்து வாங்கினோம் என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த முருகன் தனது நன்பன் பெனட் கொடுத்த பில்களை மருத்துவர்களிடம் காட்டியுள்ளார்.

பில்களை சோதித்த மருத்துவமனை நிர்வாகம் அனைத்துப் பில்களும் போலியாக தயாரிக்கப்பட்டவை என்பதை கண்டுபிடித்தனர். இதுகுறித்து முருகனிடமும் தெரிவித்தனர். உயிர் நண்பனே தன்னை ஏமாற்றிவிட்டானே என நொறுங்கிப்போனார் முருகன். இதைத் தொடர்ந்து போலி பில் அச்சடித்த பெனட் மீது மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் வழக்கு பதிவு செய்து பெனட்டை கைது செய்தனர்.