Published:Updated:

25,000 லிட்டர் சாராயம்; மதிப்பு ரூ.1 கோடி! - நள்ளிரவில் வேட்டையாடிய மத்திய புலனாய்வு போலீஸ்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே டேங்கர் லாரியில் கடத்திவரப்பட்ட 1 கோடி ரூபாய் மதிப்புள்ள 25,000 லிட்டர் எரி சாராயத்தை, மத்திய புலனாய்வு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

எரிசாராயத்துடன் டேங்கர் லாரி
எரிசாராயத்துடன் டேங்கர் லாரி ( கா.முரளி )

கர்நாடகப் பதிவு எண் கொண்ட லாரி ஒன்று, விழுப்புரம் மாவட்டத்திலிருந்து திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நோக்கி நேற்று இரவு வந்துகொண்டிருந்தது. இதில் சாராயம் கடத்தப்படுவதாக மத்திய புலனாய்வு போலீஸுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனால், ஆரணி - செஞ்சி சாலையில் நள்ளிரவில் தேடுதல் வேட்டை நடத்திவந்த மத்திய புலனாய்வு போலீஸார், ஆரணி அடுத்த நெசல் கிராமத்தில் உள்ள விவசாய வயலில் நிறுத்தியிருந்த இரண்டு லாரிகளை சோதனை செய்தபோது, அதில் 500 கேன்களில் 25,000 லிட்டர் எரிசாராயம் இருந்தது தெரியவந்தது. அதைப் பறிமுதல் செய்து, போளூர் கலால் போலீஸில் ஒப்படைத்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயம்
பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயம்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``எரிசாராயம் கடத்துவதாகத் தகவல் கிடைத்ததன் பேரில், ரோந்து பணியைத் தீவிரப்படித்தினோம். அப்போது ஆரணி அருகே நெசல் கிராமத்தில் உள்ள விவசாய வயலில் நிறுத்தியிருந்த இரண்டு லாரிகளை சோதனை செய்யச் சென்றோம். அப்போது, டேங்கர் லாரி சேற்றில் சிக்கிக்கொண்டு இருந்தது தெரிந்தது. அந்த லாரியில் இருந்து மற்றொரு லாரிக்கு சாராய கேன்களை மாற்றி வைக்கப்பட்டு இருந்தது தெரிந்தது.

`ஒரு போன்கால்; டோர் டெலிவரி இலவசம்!' - கடலூரில் கொடிகட்டி பறக்கும் கள்ளச் சாராயம் விற்பனை

அதோடு தமிழ்நாடு பதிவுகொண்ட 4 டூ வீலர்களும் இருந்தன. நாங்கள் வருவதைத் தெரிந்துகொண்ட கடத்தல் கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. அங்கிருந்து 'பறிமுதல் செய்யப்பட்ட 500 கேன்களில் 25,000 லிட்டர் சாராயம் இருந்தது. இதன் மதிப்பு 1 கோடி ரூபாய் இருக்கக் கூடும். சாராயத்தையும், இரண்டு லாரிகளையும் பறிமுதல் செய்துள்ளோம். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

எரிசாராயம் நிரப்பபட்ட கேன்கள்
எரிசாராயம் நிரப்பபட்ட கேன்கள்

டேங்கர் லாரி சேற்றில் சிக்கிக்கொண்ட சிறிது நேரத்திலேயே வேறு ஒரு லாரியை வரவைத்து சாராயக்கேன்களை மாற்றியுள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. அப்படியெனில் அவர்கள் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்கக்கூடும் என்று எண்ணி விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளோம். மேலும், கர்நாடகப் பதிவு வாகனம் யாருடைய பெயரில் இருக்கிறது என்பதையும் விசாரணை செய்து வருகிறோம். கர்நாடகாவிலிருந்து சாராயம் இங்கு கடத்தி வரப்பட்டதா அல்லது இங்கிருந்து கர்நாடகாவுக்குச் சென்றதா? எனத் தெரியவில்லை. தப்பியோடிய கும்பலைத் தேடி வருகிறோம்” என்றார்கள்.