Published:Updated:

`போலி பில் மூலம் சுருட்டப்பட்ட ரூ.74 லட்சம்!'‍ - சர்ச்சையில் ராமேஸ்வரம் கோயில்

இரா.மோகன்
உ.பாண்டி

ராமேஸ்வரம் திருகோயிலின் தற்காலப் பணியாளர் சிவன் அருள்குமரன், கோயில் கணக்காளர் ரவீந்திரன் மீது மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்...

ராமேஸ்வரம் கோயில்
ராமேஸ்வரம் கோயில்

ராமேஸ்வரத்தில் உள்ள அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் கண்காணிப்பாளர், பேஷ்கார், இளநிலை உதவியாளர்கள், அர்ச்சகர்கள், கைங்கர்யம், பாராக்காரர்கள் என 89 பேர் ஊழியர்களாகப் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கென ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிட்ட சதவிகிதமும் கோயில் நிர்வாகத்தின் மூலம் குறிப்பிட்ட சதவிகிதமும் மாதந்தோறும் எடுக்கப்பட்டு ராமேஸ்வரம் ஸ்டேட் வங்கியில் எலக்ட்ரானிக் பரிவர்த்தனை மூலம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

கைதான கோயில் ஊழியர்கள்
கைதான கோயில் ஊழியர்கள்

இந்நிலையில், கடந்த சில வருடங்களாகத் திருக்கோயில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் பணம் முறையாக வரவு வைக்கப்படவில்லை. இதற்கு காரணம் என்ன என விளக்கம் கேட்டு திருக்கோயில் இணை ஆணையருக்கு கடிதம் வந்துள்ளது. மேலும், ஓய்வு பெற்ற மற்றும் இயற்கை எய்திய கோயில் ஊழியர்களின் குடும்பத்துக்கான இழப்பீட்டு தொகையும் சரிவர கிடைக்கவில்லை. இதையடுத்து வருங்கால வைப்பு நிதி கணக்கு குறித்து இணை ஆணையர் கல்யாணி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது திருக்கோயிலின் தற்காலிகப் பணியாளரான கணிப்பொறி ஆபரேட்டர் சிவன் அருள்குமரன் என்பவர் தொழிலாளர்களின் பெயரில் செலுத்த வேண்டிய ரூ.78 லட்சம் வங்கியில் செலுத்தப்படாமல் மோசடி மூலம் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் இணை ஆணையர் கல்யாணி புகார் அளித்திருந்தார்.

இது குறித்து மாவட்டக் குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜெயபிரிட்டா தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும், கோயில் அலுவலகப் பதிவேடுகள், வங்கி ஆவணங்கள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் கோயில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் செலுத்த வேண்டிய ரூ.74,24,568 கையாடல் செய்யப்பட்டதுடன், அதற்கு போலியான ரசீதுகள் இணைக்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து திருகோயில் தற்காலிக பணியாளர் சிவன் அருள்குமரன், கோயில் கணக்காளர் ரவீந்திரன் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். ரவீந்திரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், தலைமறைவான மற்றொரு ஊழியரான சிவன் அருள்குமரனை தேடி வருகின்றனர்.

ராமேஸ்வரம்
ராமேஸ்வரம்

கடந்த ஆண்டு இது போன்று கோயில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியில் மோசடி நடந்தது தெரிய வந்த நிலையில் அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் கையாடல் செய்யப்பட்ட பணம் கட்டப்பஞ்சாயத்தின் மூலம் வசூல் செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் வருங்கால வைப்பு நிதியில் மீண்டும் நடந்துள்ள மோசடியில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது. இதனால் மோசடி செய்யப்பட்ட பணம் தங்களுக்கு திரும்ப கிடைக்குமா என கோயிலின் கீழ் நிலை ஊழியர்கள் பலர் கலக்கம் அடைந்துள்ளனர்.