Published:Updated:

`ஏஜென்டை மாற்றுவதில் சண்டை!'- ஒட்டப்பிடாரத்தில் ஒருவர் கல்லால் அடித்துக்கொலை

தூத்துக்குடியில் வாக்குப்பதிவின் போது தி.மு.க., அ.தி.மு.க., தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ஐந்து பேர் அரிவாளால் வெட்டப்பட்டதும், ஒருவர் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டதும் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரிவாள் வெட்டுப்பட்டவர்
அரிவாள் வெட்டுப்பட்டவர்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி, கயத்தார், புதூர், விளாத்திகுளம் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு இரண்டாம் கட்டமாக இன்று உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தின் தலைவராக அ.தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவர் மாசானசாமியின் மனைவி லதா, தி.மு.கவைச் சேர்ந்த இளையராஜா, சுயேச்சையாக கோ.சி.மணி ஆகிய மூன்று பேர் போட்டியிடுகின்றனர்.

கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட மாரியப்பன்
கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட மாரியப்பன்

இதில், லதா மற்றும் இளையராஜா ஆகிய இருதரப்பினரிடையே தேர்தலில் வெற்றி பெறுவதில் போட்டி இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், இதே ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேட்டுப்பசேரி கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நேரம் முடியும் நிலையில் சுமார் 100 பேர் வரை வாக்குப்பதிவிற்காகக் காத்திருந்தனர். அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இந்நிலையில், லதா தரப்பைச் சேர்ந்த மாற்று முகவர் ஒருவர் வாக்குச்சாவடிக்குள் நுழைந்தாராம்.

சம்பவ இடத்தில் போலீஸார்
சம்பவ இடத்தில் போலீஸார்

அப்போது, அந்த முகவரை இளையராஜா தரப்பினர் வெளியே அனுப்பினார்களாம். இதில், லதா தரப்பினருக்கும், இளையராஜா தரப்பினருக்கும் திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதில், லதாவின் கணவர் மாசானசாமி, அவரது சகோதரர் இயேசு என்ற சண்முகசுந்தரம், ராமசாமி ஆகியோருக்கும், இளையராஜாவின் ஆதரவாளர்களான பச்சைப்பெருமாள், அவரது மகன் ஜெயமுருகன்ஆகியோருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

வெட்டுக்குப் பயன்படுத்திய அரிவாள்
வெட்டுக்குப் பயன்படுத்திய அரிவாள்

இதில், வெட்டுப்பட்டவர்கள் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையில், பச்சைப்பெருமாளை இருசக்கர வாகனத்தில் மாரியப்பன் என்ற ரேஸ்வண்டி மாரியப்பன் ஒட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தார்.

மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு வரும்போது, மாரியப்பனை, லதா தரப்பினர் துரத்தியதில் கீழே விழுந்தார். அவர் மீது கல்லைத் தூக்கிப் போட்டுக் கொலை செய்துவிட்டுத் லதா தரப்பினர் தப்பியோடினர். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. நெல்லை சரஜ டி.ஐ.ஜி பிரவீன்குமார் அபிநபு, மாவட்ட எஸ்.பி., அருண்பால கோபாலன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

சிகிச்சை
சிகிச்சை

வாக்குப்பதிவு முடிவடையும் நிலையில், இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டதும் இன்னொருவர் அரிவாளால் வெட்டப்பட்டதும் அப்பகுதியில், பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் வாக்குப்பதிவு போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் நடந்ததுடன், வாக்குப்பதிவுக்குப் பின் வாக்குப் பெட்டிகளும் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன.