Published:Updated:

தென்மலையில் சிக்கிய நால்வர்... களியக்காவிளை எஸ்.எஸ்.ஐ. கொலையாளி ஒருவர் கைது?

இறுதிச்சடங்கில் போலீஸ் உடலை சுமந்த எஸ்.பி.
இறுதிச்சடங்கில் போலீஸ் உடலை சுமந்த எஸ்.பி.

குற்ற சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை என தெரியவந்துள்ளதால் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை செக்போஸ்டில் பணியில் இருந்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை கடந்த 8-ம் தேதி இரண்டுபேர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர். கொலையாளிகள் அருகிலுள்ள பள்ளிவாசல் வழியாக தப்பி ஓடும் சி.சி.டி.வி. காட்சிகளை காவல்துறையினர் வெளியிட்டனர். அவர்கள் காவல்துறையால் தேடப்பட்டுவரும் அப்துல் சமீம் மற்றும் தொளபீக் என தெரியவந்தது.

எஸ்.எஸ்.ஐ வில்சன்
எஸ்.எஸ்.ஐ வில்சன்

மேலும் அவர்களின் புகைப்படத்தை வெளியிட்ட காவல்துறை அவர்கள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ஏழு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்தது. மேலும் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் இந்த வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்துவதால், குமரி மாவட்ட பொறுப்பு எஸ்.பி.யாக ராஜராஜன் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் இரண்டுபேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களுக்கும் குற்ற சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை என தெரியவந்துள்ளதால் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் கேரள மாநிலம் கொல்லம் தென்மலை பகுதியில் நான்குபேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அதில் எஸ்.எஸ்.ஐ கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட இருவரும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தௌஃபீக், சமீம்
தௌஃபீக், சமீம்

களியக்காவிளையில் எஸ்.எஸ்.ஐ. வில்சனை கொலை செய்தவர்கள் அந்த பகுதியில் இருந்து தப்பி ஓடியுள்ளார்கள். பின்னர் அவர்கள் கேரள மாநிலத்துக்குள் சுமார் பத்து கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்றுள்ளனர். அவர்கள் சாலையில் நடந்து செல்லும் சி.சி.டி.வி. காட்சிகளையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

எஸ்.எஸ்.ஐ.யை கொலை செய்வதற்கு முன்பு அவர்கள் கேரளத்தில் இருந்து புறப்பட்டிருக்கிறார்கள். அதற்கு முன்பாக அவர்கள் ஆயுத பயிற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. கேரளத்தில் கைது செய்யப்பட்ட நான்குபேரையும் தமிழக போலீஸாரிடம் ஒப்படைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு