Published:Updated:

`அண்ணனை வெட்டியவருக்குத் தம்பியால் நேர்ந்த கொடூரம்' -அதிர்ச்சி கொடுத்த போதை நண்பர்கள்

கைது செய்யப்பட்ட வின்ஸ்டன்
கைது செய்யப்பட்ட வின்ஸ்டன்

தன் அண்ணன் ஜெனிஸ்டன் வெட்டப்பட்ட தகவல் அறிந்த அவரின் தம்பி வின்ஸ்டன் (19) ஆத்திரத்தில் அப்பகுதியில் கிடந்த கூர்மையான கம்பியால் வினோத்தைக் குத்திய தகவல் வெளியாகியுள்ளது.

நாகர்கோவிலை அடுத்த ஆசாரிப்பள்ளம் காந்திநகர் காலனியைச் சேர்ந்தவர் வினோத் (23). வாடகை கார் ஓட்டுநராக இருந்து வந்தார். அவரும் அவரின் நண்பரான அனந்தன் நகர் பகுதியைச் சேர்ந்த ஜெனிஸ்டன் (25) என்பவரும் நேற்று முன்தினம் இரவு ஆசாரிப்பள்ளம் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் பேசிக்கொண்டிருந்தார்கள்.

அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் வீட்டில் இருந்து அரிவாளை எடுத்துச் சென்ற வினோத் அவரின் நண்பனான ஜெனிஸ்டனை வெட்டியுள்ளார். வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்ட ஜெனிஸ்டனை அப்பகுதியினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் வயிற்றில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் வினோத் அவரது வீட்டின் அருகே மீட்கப்பட்டார். பின்னர் அவர் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு வினோத் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரை ஜெனிஸ்டன் கத்தியால் குத்தியிருக்கலாம் எனப் போலீஸ் தரப்பில் முதலில் கூறப்பட்டது. ஆனால், வெட்டுக்காயம் ஏற்பட்ட பிறகு ஜெனிஸ்டன் குத்துவதற்கு வாய்ப்பில்லை, மேலும் அவரை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பும்போதும் வினோத் அங்கு நின்றுள்ளார். இதனால் இரவு நேரத்தில் என்ன நடந்தது என போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

உயிரிழந்த வினோத்
உயிரிழந்த வினோத்

இந்த நிலையில் ஜெனிஸ்டனின் தம்பி வின்ஸ்டனை போலீஸார் கைது செய்துள்ளனர். வின்ஸ்டன் கம்பியால் வினோத்தைக் குத்திக் கொலை செய்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், "ஜெனிஸ்டனும் அவரின் நண்பர் வினோத்தும் நேற்று முன்தினம் இரவு தென்னந்தோப்பில் கள் குடித்துள்ளனர். அப்போது போதையில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த வினோத் அரிவாளால் ஜெனிஸ்டனை வெட்டியுள்ளார். ஜெனிஸ்டனுக்கு வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் தென்னந்தோப்பில் சரிந்துள்ளார். லேசாக போதை தெளிந்த நிலையில் வினோத்தும் சத்தம் போட்டுள்ளார். இதனால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்கு சென்று ஜெனிஸ்டனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த நிலையில் வினோத்
இறந்த நிலையில் வினோத்

தன் அண்ணன் ஜெனிஸ்டன் வெட்டப்பட்ட தகவல் அறிந்த அவரின் தம்பி வின்ஸ்டன் (19) ஆத்திரத்தில் அப்பகுதியில் கிடந்த கூர்மையான கம்பியால் வினோத்தைக் குத்தியுள்ளார். குத்துப்பட்ட வினோத் தென்னந்தோப்பில் இருந்து தனது வீட்டை நோக்கி ஓடிய நிலையில் வீட்டை அடைவதற்கு முன் ரோட்டில் விழுந்துள்ளார். அதன் பின்னர் சிலர் வினோத்தைப் பார்த்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். வினோத் கொலை வழக்கில் ஜெனிஸ்டனின் தம்பி வின்ஸ்டன் கைது செய்யப்பட்டுள்ளார்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு