Published:Updated:

`பால் பாக்கெட்டுகளைத் திருடியபோது வருமானம் இல்ல..!' - செல்போன் கொள்ளையன் `குதிரை' சிவா

பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள்
பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள்

சிறையிலிருந்து வெளியில் வந்ததும் பால் பாக்கெட்டுகள், காய்கறி மூட்டைகளைத் திருடினேன். ஆனால், கைநிறைய பணம் வராததால் மீண்டும் செல்போன் பறிப்பில் ஈடுபட்டேன் என குதிரை சிவா போலீஸாரிடம் கூறியுள்ளார்.

சென்னை பார்க்டவுன், கலப்பா ஆச்சாரி தெருவைச் சேர்ந்தவர் ராகுல்குமார். இவர், எழும்பூர் காவல் நிலைய குற்றப்பிரிவில் கொடுத்த புகார் மனுவில், `உ.பி-யிலிருந்து வந்து எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் தங்கி கார்பென்டர் மற்றும் பெயின்டிங் வேலையை சிலர் செய்துவருகின்றனர். கடந்த 9.5.2020-ல் வேலையை முடித்துவிட்டு அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். இரவு 2 மணியளவில் கண்விழித்தபோது 6 செல்போன்களைக் காணவில்லை. 35 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் அந்தப்பகுதியில் ஓடினார். அவர்தான் செல்போனை எடுத்திருப்பார் என்று சந்தேகப்படுகிறோம். செல்போனை கண்டுபிடித்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன்' என்று கூறியிருந்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா வழக்கு பதிவுசெய்து விசாரித்தார்.

குதிரை சிவா
குதிரை சிவா

செல்போன் கொள்ளையனைப் பிடிக்க இணை கமிஷனர் சுதாகர் உத்தரவிட்டார். அதன்பேரில் மயிலாப்பூர் துணை கமிஷனர் தேஸ்முக் சேகர் சஞ்சய் மேற்பார்வையில் கோட்டூர்புரம் உதவி கமிஷனர் சுதர்சன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் ராஜா, தலைமைக் காவலர் சரவணக்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் விசாரித்தனர். சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.

அப்போது ரோட்டில் செல்போனில் பேசியபடி நடந்து செல்பவர்களைப் பின்தொடர்ந்து ஹெல்மெட் அணிந்து பைக்கில் செல்லும் நபர், செல்போனை பறித்துவிட்டு செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அதனடிப்படையில் தனிப்படை போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது வினோத் அலெக்ஸாண்டர் என்கிற குதிரை சிவா (35) என்று தெரியவந்தது. பின்னர் தனிப்படை போலீஸார் குதிரை சிவாவை எழும்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

`மாமா என்று அழைத்தால் கடன் கொடுப்பார்!’ -மீஞ்சூர் இளைஞர் மரணத்துக்குப்பின் வெளிவந்த அதிர்ச்சி வீடியோ
போலீஸ் கமிஷனரிடம் பாராட்டுச் சான்றிதழை பெறும் உதவி கமிஷனர் சுதர்சன்
போலீஸ் கமிஷனரிடம் பாராட்டுச் சான்றிதழை பெறும் உதவி கமிஷனர் சுதர்சன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸார், ``செல்போன் பறிப்பு சம்பவத்தில் வினோத் அலெக்ஸாண்டர் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார். இவர், எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் பின்பகுதியில் குடியிருந்துவருகிறார். குதிரைகளுடன் இருந்ததால் வினோத் அலெக்ஸாண்டரை அவரின் நண்பர்கள் குதிரை சிவா என்றே அழைத்துள்ளனர். அதுவே அவரின் அடைமொழியாகியுள்ளது.

குதிரை சிவா, பைக்கில் சென்று செல்போன் பறிப்பதில் கில்லாடி. அப்போது சிசிடிவி-யில் முகம் தெரியாமலிருக்க ஹெல்மெட் அணிந்துகொள்வார். ஹெல்மெட் அணியவில்லை என்றால் துணியால் முகத்தை மூடிக்கொள்வார். அவர் பயன்படுத்தும் பைக்குகளும் திருட்டு வாகனங்கள்தான். அதனால் குதிரை சிவா, காவல்துறையில் சிக்காமல் எஸ்கேப் ஆகிவந்துள்ளார்.

குதிரை சிவா மீது சென்னை எழும்பூர், நுங்கம்பாக்கம், குமரன்நகர், பாண்டிபஜார், வடபழனி, அபிராமபுரம் ஆகிய காவல் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைதான குதிரை சிவா, சில மாதங்களுக்கு முன்புதான் வெளியில் வந்தார். வடபழனி, கோடம்பாக்கம் பகுதிகளில் பால் பாக்கெட், காய்கறி மூட்டைகளை திருடிவந்துள்ளார். அதில் போதிய வருமானம் கிடைக்காததால் மீண்டும் செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஊரடங்கு காலகட்டத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் போலீஸார் கைது செய்யமாட்டார்கள் என குதிரை சிவா தப்புக் கணக்குப் போட்டுள்ளார். அதனால்தான் செல்போன் பறிப்பு சம்பவங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவந்துள்ளார். குதிரை சிவாவிடமிருந்து 6 செல்போன்கள், பைக் ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளோம்" என்றனர்.

``என் கணவர் இறந்துவிட்டார், அய்யா உதவி செய்யுங்கள்"- கண் தெரியாத சென்னை மூதாட்டியின் கண்ணீர்க் கதை
பறிமுதல் செய்யப்பட்ட பைக்
பறிமுதல் செய்யப்பட்ட பைக்

குதிரை சிவாவிடமிருந்து திருட்டு செல்போன்களை வாங்கி விலைக்கு விற்க ஒரு தனி நெட்வொர்க் செயல்பட்டு வந்துள்ளது. செல்போனைத் திருடியதும் குதிரை சிவாவிடமிருந்து திருட்டு செல்போன்களை வாங்கி விற்பவர்களுக்கு தகவல் சென்றுவிடும். குறிப்பிட்ட இடத்தில் செல்போன்கள் கைமாறும். குதிரை சிவாவின் கைக்குப் பணம் வந்ததும் அவர் அடுத்த செல்போனைப் பறிக்க நோட்டமிடத் தொடங்கிவிடுவார்.

குறிப்பாக நடந்து செல்பவர்கள்தான் குதிரை சிவாவின் டார்கெட் என்கின்றனர் போலீஸார். குதிரை சிவாவைப் பிடிக்கச் சென்றபோது போலீஸாரிடமிருந்து தப்பிக்க அவர் முயற்சி செய்துள்ளார். அப்போது போலீஸாருக்கும் குதிரை சிவாவுக்கும் இடையே நடந்த மோதலை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், சினிமா ஷூட்டிங் என்றே முதலில் கருதியுள்ளனர். அதன்பிறகுதான் அது உண்மைச் சம்பவம் என்று பொதுமக்களுக்கு தெரியவந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு