Published:Updated:

`என் இடத்துல நின்னு சிகரெட் பிடிக்கலாமா?!' - `துப்பாக்கி' ராமநாதனால் அலறிய சென்னை போலீஸ்

செங்குன்றத்தில் புகைபிடித்த தகராறில் காவலரை நோக்கி `துப்பாக்கி' ராமநாதன் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதன்
ராமநாதன்

சென்னை செங்குன்றம் காவல் நிலையத்துக்குட்பட்ட மொண்டியம்மன்நகர், சர்வீஸ் சாலையிலிருந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசியவர், ` என்னுடைய பெயர் வெற்றிவேல், நான் சென்னை மத்திய குற்றப்பிரிவில் பணியாற்றுகிறேன். என்னை நோக்கி ஒருவர் துப்பாக்கியால் சுடுகிறார். காப்பாற்றுங்கள்' என்று பதற்றத்துடன் கூறினார். உடனடியாக இந்தத் தகவலைக் காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்த போலீஸார் செங்குன்றம் காவல் நிலையத்துக்குத் தெரிவித்தனர்.

pistol
pistol

தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் ஜவஹர் பீட்டர் தலைமையிலான போலீஸார் மின்னல் வேகத்தில் சென்றனர். அப்போது துப்பாக்கிச் சூடு நடந்த அந்தப்பகுதி பரபரப்பாகக் காணப்பட்டது. அந்த இடத்தில் ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர். அவர்களிடம் போலீஸார், `யார் கன்ட்ரோல் ரூமுக்குத் தகவல் கூறியது?' என விசாரித்தனர். அப்போது காவலர் வெற்றிவேல், நடந்த விவரத்தை இன்ஸ்பெக்டர் ஜவஹர் பீட்டரிடம் தெரிவித்தார். இதையடுத்து செங்குன்றம் போலீஸார் துப்பாக்கியால் சுட்ட நபர் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சென்னை செங்குன்றம் சோலையம்மன்நகரைச் சேர்ந்தவர் வெற்றிவேல். இவர், சென்னை மத்திய குற்றப்பிரிவில் டிரைவராகப் பணியாற்றிவருகிறார். இவர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து மொண்டியம்மன் நகர், சர்வீஸ் சாலையில் உள்ள வணிகவளாகத்தின் அருகில் சிகரெட் பிடித்தபடி பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வணிக வளாகத்தின் உரிமையாளர் மொண்டியம்மன் நகரைச் சேர்ந்த ராமநாதன் என்கிற `துப்பாக்கி' ராமநாதன் காரில் வந்தார்.

police
police

கட்டடப் பணிக்காகக் கொட்டப்பட்டிருந்த மணலில் வெற்றிவேல் நண்பர்களுடன் சிகரெட் பிடித்ததைக் கவனித்தவர், `யாருடா அங்கே.. என்னுடைய இடத்தில் உட்கார்ந்திருந்து சிகரெட் பிடிப்பது' என்று கேட்டுள்ளார். அதற்கு வெற்றிவேல், `என்னைப் பார்த்துக் கேள்விகேட்க, நீ யாருடா?' என்று கூறியுள்ளார். இதனால் ராமநாதனுக்கும் வெற்றிவேலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ராமநாதன், காரிலிருந்து துப்பாக்கியை எடுத்துவந்து வெற்றிவேலை நோக்கி ஒரு ரவுண்ட் சுட்டுள்ளார். குறி தவறி மணலில் குண்டு பாய்ந்துள்ளது. இதனால் வெற்றிவேல் மற்றும் அவரின் நண்பர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர். வெற்றிவேல் அளித்த புகாரின் பேரில் துப்பாக்கி ராமநாதனைப் பிடித்துள்ளோம். அவரிடம் விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.

துப்பாக்கி ராமநாதன் பின்னணி குறித்துப் போலீஸாரிடம் விசாரித்தோம். ``ராமநாதன், அவரின் சகோதரர் பாலா ஆகிய இருவரும் எப்போதும் லைசென்ஸ் பெற்ற துப்பாக்கிகளைப் பாதுகாப்புக்காக வைத்திருப்பார்கள். இதனால் அவர்கள் பெயரோடு துப்பாக்கி என்ற அடைமொழியும் சேர்ந்து கொண்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அரசு பஸ் டிரைவர் வழிவிடாத காரணத்தால் துப்பாக்கி பிரதர்ஸ் வானத்தை நோக்கிச் சுட்டனர். இந்த வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் துப்பாக்கி ராமநாதனுக்குச் சொந்தமாக செம்மரக் குடோன்கள் உள்ளன. செம்மரம் தொடர்பாகவும் துப்பாக்கி ராமநாதன் மீது வழக்குகள் உள்ளன.

`சேற்றில் சிக்கிய காரில் செம்மரம்!’- கிராம மக்களைக் கண்டதும் தப்பி ஓடிய கடத்தல்காரர்கள்

மேலும் தேசிய கட்சியில் இருந்த ராமநாதன், பிறகு அந்தக்கட்சியிலிருந்து விலகிவிட்டார். தற்போது இந்து அமைப்பை ஏற்படுத்தி அதில் முக்கிய பதவியில் இருந்துவருகிறார். மேலும். பா.ஜ.க.வைச் சேர்ந்த வி.வி.ஐ.பி.க்களுடன் ராமநாதன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அவரின் வீட்டின் ஹாலில் வைக்கப்பட்டிருக்கிறது. குடியிருக்கும் ஏரியாவில் `கெத்து' காட்ட அடிக்கடி துப்பாக்கியைத் தூக்கி சர்ச்சையில் சிக்குவது ராமநாதனின் வாடிக்கை" என்கின்றனர் போலீஸார்.