Published:Updated:

`குழந்தையின் உயிரைப் பறித்த செல்போன் அழைப்பு!' -உணவு ஊட்டியபோது நேர்ந்த துயரம்

சென்னையில் 2-வது மாடியிலிருந்து தவறி விழுந்த ஒன்றரை வயதுக் குழந்தை இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை இர்ஃபான்
குழந்தை இர்ஃபான்

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை என்.என்.கார்டன், 7-வது தெருவைச் சேர்ந்தவர் சையது அபுதாகீர். இவரின் மனைவி மும்தாஜ். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள். இளைய மகன் இர்ஃபானுக்கு ஒன்றரை வயதாகின்றது. சையது அபுதாகீர், டீக்கடை நடத்திவருகிறார். சம்பவத்தன்று அவர் வேலைக்குச் சென்றுவிட்டார். வீட்டில் மகன்களுடன் மும்தாஜ் மட்டும் இருந்தார். இவர்களின் வீடு 2-வது தளத்தில் உள்ளது.

representational image
representational image

நேற்று முன்தினம் மதியம் இர்ஃபானுக்கு வீட்டின் பால்கனியில் இருந்து மும்தாஜ் உணவு கொடுத்துக்கொண்டிருந்தார். அப்போது போன் அழைப்பு வந்துள்ளது. உடனே, செல்போனை எடுத்துப் பேசியுள்ளார். இந்தச் சமயத்தில் இர்ஃபான், பால்கனி வழியாக தவறி கீழே விழுந்தான்.

திடீரென குழந்தை இர்ஃபானின் அழுகைச் சத்தம் கேட்ட மும்தாஜ், மேலிருந்து கீழே பார்த்தார். அப்போது இர்ஃபான் கீழே விழுவதைப் பார்த்த மும்தாஜ் ஒருகணம் அதிர்ச்சியில் உறைந்தார். உடனே அவர் அலறியபடி கீழே ஓடிவந்தார். அவரின் சத்தம் கேட்டு அந்தப்பகுதியில் இருந்தவர்களும் அங்கு வந்தனர். கீழே ரத்த வெள்ளத்தில் இர்ஃபான் விழுந்து கிடந்தான்.

`மாடியிலிருந்து விழுந்த குழந்தை... எதார்த்தமாக வந்த ரிக்‌ஷா'- வைரலாகும் வீடியோ!

உடனடியாக, குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இர்ஃபானை பரிசோதித்த டாக்டர்கள், இறந்துவிட்டதாகக் கூறினர். அதைக்கேட்டு மும்தாஜ் மட்டுமல்ல அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்களும் கதறி அழுதனர்.

இதுகுறித்து வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் இர்ஃபானின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பிரேத பரிசோதனை முடிந்து சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் சம்பவத்தன்று பால்கனியிலிருந்து இர்ஃபானுக்கு மும்தாஜ் உணவு கொடுத்துள்ளார். அப்போது அவர் செல்போனில் பேசியுள்ளார்.

செல்போனில் கவனம் திசைமாறியதால் இர்பானை சில நிமிடங்கள் மும்தாஜ் கவனிக்கத் தவறியுள்ளார். இந்தச் சமயத்தில்தான் அந்தச் சோகச் சம்பவம் நடந்தது தெரியவந்தது. சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் மாடியிலிருந்து குழந்தைகள் கீழே விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.

2018-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தி.நகர், துக்காராம், 3வது தெருவில் குடியிருந்த கண்ணன் - மகேஸ்வரி தம்பதியின் ஒன்றரை வயது குழந்தை முத்துராஜ் 2-வது மாடியின் பால்கனியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தான். முத்துராஜை பால்கனியில் விட்டுவிட்டு மகேஸ்வரி துணியைக் காயப்போடும் போது இந்தச் சம்பவம் நடந்தது. 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சூளைமேட்டில் 7-வது மாடியிலிருந்து ஈஷா என்ற 4 வயது குழந்தை உயிரிழந்தது.

மடியிலிருந்து விழுந்த குழந்தை... 50 கி.மீ தூரம் சென்றபின் பதறிய கேரளத் தாய்..!- நடந்தது என்ன?

சென்னை கொண்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவர், 3-வது மாடியிலிருந்து குழந்தைக்கு உணவு ஊட்டினார். அப்போது கைதவறி குழந்தை கீழே விழுந்து உயிரிழந்தது.

இந்தச் சோக சம்பவம் 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடந்தது. சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியிருப்பவர்கள் குழந்தைகள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதோடு பால்கனி பகுதி, போதிய பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.