Published:Updated:

சென்னை: `பெட்ஷீட்டுக்கு ரூ.12 லட்சம், சொகுசு கார்!’ - ஆசையைத் தூண்டி வலைவிரித்த கும்பல்

கார்
கார்

சென்னையில் ஆன்லைனில் பெட்ஷீட் ஆர்டர் செய்த பஞ்சர் கடைக்காரரை செல்போனில் தொடர்புகொண்ட மோசடி கும்பல், பம்பர் பரிசாக சொகுசு கார் கிடைத்திருப்பதாகக் கூறியிருக்கிறது.

சென்னை சோழிங்கநல்லூர், காந்தி நகர், பொன்னியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் (38). இவர் வீட்டுக்கு அருகே, ஓ.எம்.ஆர் சாலையில் பஞ்சர் கடை வைத்திருக்கிறார். கடந்த ஜூலை மாதம், 28-ம் தேதி ஆன்லைன் மூலம் 350 ரூபாய் மதிப்புள்ள பெட்ஷீட் ஆர்டர் செய்தார். அதன்படி அவருக்கு பெட்ஷீட் சில தினங்களுக்கு முன்னர் டெலிவரி செய்யப்பட்டது. அதன் பிறகு சுரேஷ், வழக்கம்போல தன்னுடைய பணியில் ஈடுபட்டுவந்திருக்கிறார்.

சுரேஷ்
சுரேஷ்

இந்தநிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சுரேஷின் செல்போன் நம்பருக்கு ஒரு போன் கால் வந்தது. அதில் பேசியவர் தன்னை, பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தின் மேனேஜர் சுஜித் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். பின்னர் சுரேஷிடம், `நீங்கள்தான் பெட்ஷீட்டை எங்களின் ஆன்லைன் நிறுவனத்தில் வாங்கினீர்களா?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு சுரேஷும், `ஆமாம்’ என்று பதிலளித்திருக்கிறார். `எங்கள் நிறுவனத்தின் மூலம் நீங்கள் பொருள் வாங்கியதற்கு பம்பர் பரிசாக 12.80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. கார் வேண்டாமென்றால் அரை மணி நேரத்தில் பணமாக உங்கள் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்’ என்று அந்த மேனேஜர் கூறியிருக்கிறார்.

பிறகு மேனேஜர், `நீங்கள் பரிசை பெற வேண்டுமென்றால் ஒரு சதவிகிதம் டி.டி.எஸ் செலுத்த வேண்டும். மேலும், 12,800 ரூபாய் எங்கள் நிறுவன வங்கிக் கணக்கில் நீங்கள் டெபாசிட் செய்தவுடன், உங்களுக்கு கார் டெலிவரி செய்யப்படும்’ என்று கூறியிருக்கிறார். இதையடுத்து சுரேஷின் ஆதார் கார்டு, போட்டோ, வங்கி பாஸ்புக்கின் முன்பக்க ஜெராக்ஸ் ஆகியவற்றை குறிப்பிட்ட வாட்ஸ்அப் நம்பருக்கு உடனடியாக அனுப்பும்படி மேனேஜர் தெரிவித்தார். மேனேஜர் கூறிய தகவல்கள் சுரேஷுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தாலும், கூடவே சந்தேகமும் வந்தது.

அனுப்பப்பட்ட மெசேஜ்
அனுப்பப்பட்ட மெசேஜ்

ஏனென்றால், கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஓ.எம்.ஆர் சாலைப் பகுதியில் இரண்டு பேர் இதுபோல ஏமாந்த தகவல் சுரேஷுக்கு நினைவுக்கு வந்தது. அதனால் என்ன செய்வது என்று குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் ஆலோசனை செய்தார் சுரேஷ். பணம் அனுப்புவதற்கு முன்னர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கலாம் என எல்லோரும் கருதினார்கள். இதையடுத்து செம்ஞ்சேரி காவல் நிலையத்துக்கு சுரேஷ் சென்று, அங்கு பணியிலிருந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் ஐயப்பன், கார்த்திகேயனிடம் முழு விவரத்தையும், செல்போனுக்கு வந்த மெசேஜ்களையும் காண்பித்தார்.

அந்தச் சமயத்தில் சுரேஷின் செல்போனுக்கு ஆன்லைன் ஷாப்பிங் மேனேஜர் என்று கூறியவர் மீண்டும் கால் செய்திருக்கிறார். அப்போது சப்-இன்ஸ்பெக்டரே போனை எடுத்துப் பேசினார். உடனே மேனேஜர், `ஏன் நீங்கள் இன்னும் போட்டோ, ஆதார் கார்டு போன்ற விவரங்களை அனுப்பவில்லை?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு சப்-இன்ஸ்பெக்டர், `நீங்கள் நேரில் வந்து போட்டோ, ஆதார் கார்டு ஆகியவற்றை வாங்கிக் கொள்ளுங்கள்’ என்று கூறியிருக்கிறார். அதற்கு அந்த மேனேஜர், `உங்களுக்குப் பரிசு வேண்டுமென்றால் அனுப்புங்கள்’ என்று பதில் சொல்லியிருக்கிறார். உடனே சப்-இன்ஸ்பெக்டர், `நீங்கள் எங்கிருந்து பேசுகிறீர்கள்?’ என்று கேட்டதும், போனிலேயே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

அனுப்பப்பட்ட மெசேஜ்
அனுப்பப்பட்ட மெசேஜ்
சென்னை: மகளிடம் தவறாக நடந்த தந்தை; காட்டிக்கொடுத்த பாட்டி! - போதையால் மாறிய பாதை

இதையடுத்து ஆன்லைன் நிறுவன மேனேஜர் இணைப்பைத் துண்டித்திருக்கிறார். அதன் பிறகு சுரேஷிடம் போலீஸார், `இது போன்ற மோசடி அழைப்புகளை நம்பி, பணத்தை அனுப்பி ஏமாற வேண்டாம்’ என்று அறிவுரை கூறியிருக்கிறார்கள்.

இது குறித்து சுரேஷிடம் பேசினோம். ``350 ரூபாய் பெட்ஷீட்டுக்கு யாராவது 12,80,000 ரூபாய் மதிப்பிலான சொகுசு கார் கொடுப்பார்களா.... அவர்கள் கொடுப்பதாகக் கூறியதும், எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும், `அந்த காரை வாங்க 12,800 ரூபாய் செலுத்த வேண்டும்’ என்று கூறியபோது சந்தேகம் உறுதியானது. அதனால்தான் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தேன். `சதுரங்க வேட்டை’ படத்தைப்போல ஆசையைத் தூண்டி, ஆன்லைனில் மோசடி செய்வதை ஒரு கும்பல் வாடிக்கையாக வைத்திருக்கிறது. ஃபேஸ்புக்கில் மேனேஜரின் செல்போன் நம்பரைப் பதிவு செய்ததால், பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் தகவல்களைப் பதிவு செய்துள்ளனர். புத்திச்சாலித்தனமாகச் செயல்பட்டதால் நான் ஏமாறவில்லை" என்றார்.

`ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்துள்ளன. அதனால் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்’ என சைபர் க்ரைம் போலீஸார் அறிவுறுத்திவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு