Published:Updated:

`எலைட் ஒயின் ஷாப், அண்ணாநகர், சாந்தி காலனி' - மதுப் பிரியர்களைக் குறிவைத்து ஒரு மெகா மோசடி

முகநூலில் எலைட் பெயரில் மதுபானம் விளம்பரம்
முகநூலில் எலைட் பெயரில் மதுபானம் விளம்பரம்

போன் செய்தால் ஒரு மணிநேரத்தில் வீடு தேடி டாஸ்மாக் மதுபானம் வரும் என்று முகநூலில் விளம்பரம் செய்து ஒரு கும்பல் மோசடி செய்து வருகிறது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் மதுப் பிரியர்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்துவருகின்றனர். இதில் சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மாற்றுப்போதைக்கு ஆசைப்பட்ட சிலர் மரணமடைந்துள்ளனர். டாஸ்மாக் மதுபானம் கிடைக்காத நிலையில் கள்ளச்சாராய விற்பனை படுஜோராக நடந்துவருகிறது. கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்க காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

ஊரடங்கில் ஏன் இப்படி வெளியில் விளையாடுகிறீர்கள்? - தட்டிக் கேட்ட தம்பிக்காக உயிரை விட்ட அண்ணன்
மதுபானங்கள்
மதுபானங்கள்

இருப்பினும் மதுபானங்களை வாங்கும் ஆர்வம் மட்டும் குறைந்தபாடில்லை. இத்தகையவர்களைக் குறிவைத்து ஆன்லைனில் மோசடி சம்பவங்கள் நடந்துவருகின்றன. இந்த வரிசையில், `எலைட் ஒயின் ஷாப், சென்னை அண்ணாநகர், சாந்தி காலனி என்ற முகவரியில் ஆன்லைனில் பாதிப் பணம் செலுத்தினால் வீட்டுக்கே வந்து மதுபானங்கள் டெலிவரி செய்யப்படும். அப்போது மீதிப்பணத்தைக் கொடுத்தால் போதும்' என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. மதுபானங்களை ஆர்டர் செய்வதற்கு செல்போன் நம்பர் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த செல்போன் நம்பருக்கு வருத்தப்படாத வாக்காளர்கள் சங்கத் தலைவர் விஜயகுமார் நேற்றிரவு போன் செய்துள்ளார். எதிர்முனையில் பேசியவர், ஆங்கிலமும் இந்தியும் கலந்து பதிலளித்துள்ளார். அந்த நபர், தான் சாந்திகாலனியில் உள்ள எலைட் ஓயின் ஷாப்பில் பணியாற்றிவருவதாகவும் மதுபானம் ஆர்டர் செய்த ஒருமணி நேரத்தில் டோர் டெலிவரி செய்யப்படும் என்று கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த விஜயகுமார், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு ஆன் லைனில் புகாரளித்துள்ளார்.

உங்களை நம்பி பணத்தை எப்படி அனுப்ப முடியும் என்று நான் கேள்வி கேட்டதற்கு, வாட்ஸ்அப்பில் மதுபானங்களின் புகைப்படங்கள் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போதுதான் எனக்கு அந்த நபர் மீது சந்தேகம் வலுத்தது.
விஜயகுமார்
விஜயகுமார்
விஜயகுமார்

இதுகுறித்து விஜயகுமாரிடம் பேசினோம். ``முகநூலில்தான் எலைட் ஓயின் ஷாப் என்ற பெயரில் அந்த விளம்பரத்தைப் பார்த்தேன். அதில் குறிப்பிட்டிருந்த செல்போன் நம்பருக்கு போன் செய்து பேசினேன். அப்போது எதிர்முனையில் பேசியவர், என்ன வகை மதுபானம் வேண்டும் என்று கேட்டார். உடனே எனக்குத் தேவையான மதுபானத்தை ஆர்டர் செய்தேன். அதற்கான விலையையும் அவர் கூறினார். பின்னர் பாதிப் பணத்தை ஆன்லைன் மூலமாகவும் மீதிப்பணத்தை டெலிவரி செய்யும்போதும் கொடுங்கள் என்று கூறினார். உடனே நான், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் நீங்கள் மட்டும் எப்படி மதுபானங்களை டெலிவரி செய்கிறீர்கள் என்று கேட்டேன்.

அதற்கு போனில் பேசிய நபர், எங்களுக்கு ஸ்பெஷல் பர்மிஷன் இருக்கிறது என்று கூறினார். உடனே நான், அந்த நபரிடம் வீட்டுக்கு மதுபானத்தைக் கொண்டு வருவதில் சில சிக்கல் உள்ளது. எனவே, நானே நீங்கள் கூறும் இடத்துக்கு நேரில் வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று தெரிவித்தேன். அதற்கு போனில் பேசியவர், அண்ணாநகர் சாந்திகாலனியிலிருந்துதான் நாங்கள் டெலிவரி செய்கிறோம். நேரில் வந்தால் போலீஸ் பிரச்னை செய்வார்கள். எனவே டோர் டெலிவரி மட்டுமே செய்ய முடியும் என்று கூறினார்.

மது கிடைக்காததால், ஒருவர் தற்கொலை... கேரளா துயரம்!
மதுபானங்கள்
மதுபானங்கள்

உங்களை நம்பி பணத்தை எப்படி அனுப்ப முடியும் என்று நான் கேள்வி கேட்டதற்கு, வாட்ஸ்அப்பில் மதுபானங்களின் புகைப்படங்கள் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அப்போதுதான் எனக்கு அந்த நபர் மீது சந்தேகம் வலுத்தது. இதையடுத்து இணைப்பை துண்டித்துவிட்டு போலீஸ் கமிஷனருக்கும், டாஸ்மாக் நிர்வாகத்துக்கும் ஆன்லைன் மூலம் புகாரளித்துள்ளேன்" என்றார்.

ஊரடங்கு சமயத்தில் மதுபானம் கிடைக்காதவர்களை ஏமாற்றும் வகையில் இந்த ஆன்லைன் மோசடி நடந்துவருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்தால் மதுப் பிரியர்கள் ஏமாறுவதைத் தடுக்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

அடுத்த கட்டுரைக்கு