Published:Updated:

தஞ்சை: ஆன்லைன் லோன் செயலிகளுக்கு செக்... மிரட்டும் கும்பல்?! - நடந்தது என்ன?

ஆன்லைன் மோசடி
ஆன்லைன் மோசடி ( Representational Image )

பணம் கட்டாதவர்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து இணையதளத்தில் வெளியிடுவார்கள். இந்தச் செயலால் பல தற்கொலைகளும் நடந்திருக்கின்றன.

ஆன்லைன் கடன் மோசடிக் கும்பலின் அட்டகாசங்கள் தொடர்கின்றன. அந்தக் கும்பல் குறித்த தகவல்களை கூகுள் நிறுவனத்துக்கு அனுப்பி, மோசடி ஆப்களை நீக்க காரணமாக இருந்ததற்காக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளரை தொடர்ந்து மிரட்டிவரும் கொடுமையும் நடந்துவருகிறது.

 சீனா வர்த்தகப் போர்
சீனா வர்த்தகப் போர்

பெங்களூரில் தலைமறைவு வாழ்க்கை நடத்தியபடி, ஆன்லைன் கடன் மோசடி பிசினஸை கவனித்துவந்த ஜீயோ யமாவோ, வூ யுவான்லன் ஆகிய இரண்டு சீனர்களை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடந்த மாதம் கைதுசெய்தார்கள். மோசடி நிறுவனத்தின் வங்கிக் கணக்கிலிருந்த இரண்டரைக் கோடி ரூபாய் பணத்தையும் முடக்கினார்கள். இவர்களுக்கெல்லாம் தலையாகச் செயல்பட்ட ஹாங்க் என்பவரைக் கைதுசெய்ய, டெல்லியிலிருக்கும் சீனத் தூதரகத்துக்குக் கடிதம் எழுதியது தமிழக காவல்துறை. இது பற்றி 17.1.2021 தேதியிட்ட ஜூ.வி இதழில், `சீனாவிலிருந்து ஆன்லைன் வார்?’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

ஆன்லைன்
ஆன்லைன்

`சில மாதங்களுக்கு முன்பு, டிக்டாக் உள்ளிட்ட பல்வேறு சீன ஆப்களை மத்திய அரசு முடக்கி அறிவிப்பு வெளியிட்டது. இதனால் கோபமடைந்த சீனா, பொருளாதாரச் சீரழிவுகளை உண்டாக்கும் வகையில் சைபர் போரை நடத்திவருகிறது. அதன் ஒரு பகுதிதான் இந்த ஆப் மோசடி. இந்த மோசடிக் கும்பலின் டார்ச்சர் தாங்க முடியாமல் கடந்த ஓராண்டில் கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களில் 15 பேர் வரை தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்’ என்ற விவரங்களையெல்லாம் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம். இந்தநிலையில்தான் அந்த மோசடிக் கும்பலின் மிரட்டலுக்கு பயந்து, தலைமறைவு வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கிறார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கரிகாலசோழன்.

கரிகாலசோழனிடம் பேசினோம், ``நாம் வைத்திருக்கும் ஸ்மார்ட்போன்தான் நமக்கு எமன். ஸ்மார்ட்போன் ஆப் மூலமாக உங்களுக்கு லோன் வேண்டுமா? எந்தவித டாக்குமென்ட்டும் கொடுக்காமல் நீங்கள் எளிதில் லோன் பெறலாம் என்று உங்களது ஃபேஸ்புக் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக உங்களது செல்போனுக்கு விளம்பரம் அனுப்புவார்கள். அதைப் பார்த்து அவர்களிடம் கடன் பெற்றுவிட்டால் அவ்வளவுதான். தற்கொலை செய்துகொள்ளும் வரையிலும் நம்மைவிட மாட்டார்கள்.

கரிகாலசோழன்
கரிகாலசோழன்

உதாரணமாக, செங்கல்பட்டுக்கு அருகேயுள்ள பழையனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் விவேக். அவரடின் தந்தையின் மருத்துவச் செலவுக்காக `கெட் ரூப்பி டாட் காம்’ (GET RUPEE DOT.COM) என்ற ஆன்லைன் ஆப் மூலமாகக் கடன் பெற்றிருக்கிறார். தந்தையின் மருத்துவச் செலவு அதிகமானதால் கடனைத் திருப்பிச் செலுத்த தாமதமாகியிருக்கிறது. கடன் கொடுத்த ஆப்-பின் கஸ்டமர் கேரிலிருந்து, `பணத்தை கட்டச் சொல்லி கொடுத்த டார்ச்சரில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். அதேபோல், சென்னையிலும் ஆப் மூலம் பெற்ற கடனை, திருப்பிச் செலுத்த முடியாததால், கடன் பெற்ற பெண்ணின் அந்தரங்கப் புகைப்படங்களை அவருக்கே அனுப்பி கடனை வசூல் செய்திருக்கிறார்கள்.

இந்தத் தகவல் தெரியவரவே விசாரிக்கத் தொடங்கினேன். பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தன. இந்தச் சம்பவத்தில் பின்னணியில் இருப்பது சீனர்கள். சில வருடங்களுக்கு முன்பே பினாமி கம்பெனிகளின் மூலமாக இந்தியாவில் காலூன்றிவிட்டார்கள். அவர்கள் மற்ற ஒருவரின் பெயரைப் பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக அதிக வட்டிக்குக் கடன் கொடுக்கிறார்கள். எங்கும் அலையாமல் உடனே பணம் கிடைக்கிறதே என்று யோசிக்காமல் ஆண்களும் பெண்களும் கடன் வாங்குகிறார்கள்.

வூ யுவான்லன்
வூ யுவான்லன்

உதாரணமாக ஒருவர் 5,000 ரூபாய் மொபைல் ஆப் மூலமாகக் கடன் பெறுகிறார் என்றால் அதில், ரூ.1,200-ஐ பிடித்துக்கொண்டு, ரூ.3,800-ஐக் கடனாகக் கொடுப்பார்கள். இதை வாரந்தோறும், பதினைந்து நாள்களுக்கு ஒருமுறை, மாதந்தோறும் எனப் பல கேட்டகரியில் வசூலிக்கிறார்கள்.

ஜீயோ யமாவோ
ஜீயோ யமாவோ

கடன் பெறுவோரின் ஆதார், ஓட்டர் ஐ.டி., செல்போனின் ஐ.எம்.ஐ நம்பர்களைப் பெற்றுக்கொள்வார்கள். நீங்கள் பணம் கட்டவில்லையென்றால் அவர்களே லோன் டாப்பப் பண்ணிக்கொள்ளலாம் என்று அடுத்தடுத்த ஆப்கள் மூலமாக லோன் பெற்று கடனை அடையுங்கள் என்று வழிமுறையைச் சொல்வார்கள். இதில் கடன் தொகை கூடுகிறதே எனத் தெரிந்தும் டார்ச்சரால் டாப்அப் லோன் வாங்குகிறார்கள்.

பணத்தைக் கட்டாவிட்டால் நீங்கள் அதிகமாகப் பேசும் போன் நம்பரை எடுத்துக்கொண்டு அவர்களிடம் கடன் கொடுத்த ஆப் நிறுவனத்திலிருந்து பேசுவார்கள். நீங்கள் கடன் பெற்று ஏமாற்றி ஓடிவிட்டதாகவும், திருடன் என்றும் சமுக வலைதளங்களில் மெசேஜ் அனுப்புவார்கள். இந்த இன்ஸ்டன்ட் லோன் முறை சீனாவில் பிரபலம். சீனாவில் லோன் பெற வேண்டுமென்றால் வாடிக்கையாளர்களிடமிருந்து ஒரு புகைப்படத்தை மட்டும் பெற்றுக்கொள்வார்கள். பணம் கட்டாதவர்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து இணையதளத்தில் வெளியிடுவார்கள். இந்தச் செயலால் பல தற்கொலைகளும் நடந்திருக்கின்றன. அந்த ஸ்டைலில்தான் இங்கும் நடக்கிறது. அதேபோல் சென்னையைச் சேர்ந்த கணேசன் என்பவர் ஆப் மூலம் கடன் பெற்றிருக்கிறார். கடன் கட்ட முடியாததால், அவரைக் கடுமையாக டார்ச்சர் செய்திருக்கிறார்கள். பயத்தில் போலீஸாரிடம் புகார் கொடுத்திருக்கிறார்.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

அதன்பேரில் போலீஸார் விசாரணை செய்து பெங்களூரில் செயல்பட்டுவந்த கால்சென்டரில் விசாரணை செய்ததில், இரண்டு சீனாக்காரர்கள் மற்றும் நான்கு பேரைக் கைதுசெய்து அழைத்துவந்திருக்கிறார்கள். சீனர்கள் பெங்களூரைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்படுகிறார்கள். போலியாக வங்கி மற்றும் ரிசர்வ் பேங்க் லோகோவை பயன்படுத்தி இல்லீகலாக பல வேலைகள் செய்கிறார்கள். தமிழகத்தில் மூன்று வழக்குகள், கேரளாவில் ஏழு வழக்குகள், தெலங்கானாவில் 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் எங்குமே நடவடிக்கை இல்லை.

இது தொடர்பாக ஆதரங்களுடன் (Directorate of Public Grievances (Cabinet Secretariat) Enforcement Directorate, FIU , Directorate of Income Tax (Intelligence) The Central Economic Intelligence Bureau (CEIB),TRAI) எனப்படும் கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கேரளா உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களுக்குப் புகார்களை அனுப்பினேன். இது தொடர்பாக ஐந்து மாநிலங்களில் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

தடைசெய்யப்பட்ட ஆப்
தடைசெய்யப்பட்ட ஆப்

இதை கூகுள் சி.இ.ஒ., சுந்தர் பிச்சைக்கு அனுப்பினேன். அதன் பெயரில் புதுக்கோட்டையில் செயல்பட்டுவந்த லக்மினி ஆப், மைகேஷ் ஆப், கேஷ் மேப் ஆப்,. (Krazyrupee) கிரேசி ருபி ஆப், கோல்ட் பவுல் (Gold Bowl) உள்ளிட்ட 54 ஆப்களை கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கியிருப்பதோடு. எனக்கு கூகுள் நிறுவனமும், வருமான வரித்துறையும் நன்றி தெரிவித்தனர். ஆப்களை நீக்கியதால் சீன நிறுவனத்துக்கு ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறதாம். இதனால் `இந்தப் புகார் மனுவைத் திரும்பப் பெறுங்கள். உங்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் பணம் தருகிறோம்’ என்றெல்லாம் பேசினார்கள்.

ஆன் லைன்
ஆன் லைன்

மறுத்து அடுத்தடுத்த சட்ட நகர்வுகளை மேற்கொண்டுவருவதால் கர்நாடக மாநிலத்திலிருந்து தொடர்ந்து மிரட்டல் வந்துகொண்டிருக்கிறது. இது குறித்து தமிழக போலீஸாரிடம் புகார் கொடுத்தால் புகாரை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். உயிருக்கு பயந்து நிற்கிறேன்" என்றார்.

தேஷ்முக் சேகர் சஞ்சய்
தேஷ்முக் சேகர் சஞ்சய்
ம.அரவிந்த்

இது குறித்து தஞ்சை எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய்-யிடம் பேசினோம்,``இது போன்ற சம்பவம் அதிகரித்தவண்ணமாக இருக்கிறது. பாதிக்கப்பட்டவரை என்னிடம் நேரில் வந்து புகார் அளிக்கச் சொல்லுங்கள். புகாரின் அடிப்படையில் நாங்கள் விசாரித்து நடவடிக்கை எடுக்கிறோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு