Published:Updated:

ஷீர்டி சாய்பாபா கோயில் பெயரில் ஆன்லைன் பண மோசடி-பக்தர்கள் உஷாராக இருக்க கோயில் நிர்வாகம் எச்சரிக்கை!

ஷீர்டி சாய்பாபா பெயரில் பொதுமக்களிடம் மர்மக் கும்பல் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி நன்கொடை வசூலித்துவருவது தெரியவந்துள்ளது. அவர்களிடம் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மகாராஷ்டிராவிலுள்ள புண்ணிய தலங்களில் ஷீர்டி சாய்பாபா கோயில் மிகவும் புகழ்பெற்றது. இந்தக் கோயிலுக்கு இந்தியா முழுவதிலுமிருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். சென்னையிலிருந்து தினமும் ரயில் மூலம் டிராவல் ஏஜென்சிகள் பக்தர்களை ஷீர்டிக்கு அழைத்துச் செல்வது வழக்கமாக நடந்துவந்தது. ஆனால் இந்த கொரோனா வந்த பிறகு, இவை அனைத்தும் மாறிவிட்டன. கடந்த மாதம் 5-ம் தேதியிலிருந்து ஷீர்டி சாய்பாபா கோயில் மூடப்பட்டுவிட்டது. பக்தர்கள் யாருக்கும் அனுமதி கொடுக்கப்படுவதில்லை. வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெறுகின்றன. இதனால் ஷீர்டி சாய்பாபா கோயில் வெறிச்சோடிக்கிடக்கிறது.

ஷீர்டி சாய்பாபா
ஷீர்டி சாய்பாபா

இந்த கொரோனா பொதுமுடக்கத்தைப் பயன்படுத்தி ஷீர்டி சாய்பாபா கோயில் பெயரில் ஆன்லைன், சமூக வலைதளம் மூலமாக பொதுமக்களிடம் நன்கொடை வசூலிக்கத் தொடங்கியிருக்கிறது ஒரு மோசடிக் கும்பல். இது தொடர்பாக கோயில் நிர்வாகத்துக்குப் புகார்கள் வந்தன. ஸ்ரீசாய்பாபா சன்ஸ்தான் டிரஸ்ட் நிர்வாகத்துக்கு வந்த இந்தப் புகார்கள் குறித்து விசாரிக்கப்பட்டதில், சாய்பாபா பெயரில் பக்தர்களிடம் சட்டவிரோதமாக நன்கொடை வசூலிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் கோயில் நிர்வாகிகள் போன்று தகவல்களைப் பதிவேற்றம் செய்கின்றனர். ஆர்த்தி, அன்னதானம், பூஜை போன்ற பல ஆன்மிகப் பணிகளுக்கு பக்தர்கள் ஆன்லைனில் நன்கொடை வழங்கலாம் என்று அதில் குறிப்பிடுகின்றனர். இதனால் மக்களும் அவறறை நம்பிப் பணத்தைக் கொடுக்கின்றனர் என ஷீர்டி சாய்பாபா கோயில் செய்தித் தொடர்பாளர் ஏக்நாத் கூறுகிறார்.

Vikatan

ஷீர்டி சாய்பாபா கோயில் நிர்வாக அதிகாரி கங்குராஜ் இது குறித்துக் கூறுகையில், ``ஸ்ரீசாய்பாபா சேவாபவி சன்ஸ்தான் ஷீர்டி என்ற அமைப்பு பெயரில் ஆன்லைனில் பக்தர்களிடம் நன்கொடை கேட்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நெட் பேங்க்கிங், கூகுள் பே, பேடி எம் போன்ற வழிகளில் நன்கொடை கொடுக்கலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அமைப்புக்கும் ஷீர்டி சாய்பாபா கோயில் சன்ஸ்தான் டிரஸ்ட்டுக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது. அதோடு அன்னதானத்துக்காக எந்த அமைப்புடனும் தொடர்பும் வைத்திருக்கவும் இல்லை. கூகுள் பே, பேடிஎம் மூலம் ஷீர்டி சாய்பாபா கோயில் நிர்வாகம் நன்கொடையும் கேட்கவில்லை.

ஷீர்டி சாய்பாபா கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதுண்டு. அதைப் பயன்படுத்தி மோசடி அமைப்புகள் பக்தர்களிடம் சமூக வலைதளம், வெப்சைட்களைப் பயன்படுத்தி மோசடி செய்துவருகின்றன. இது போன்ற மோசடி அமைப்புகளிடம் பக்தர்கள் உஷாராக இருக்க வேண்டும். பக்தர்கள் நன்கொடை கொடுப்பதாக இருந்தால் ஷீர்டி சாய்பாபா கோயில் அதிகாரபூர்வ இணையதளத்தைப் பயன்படுத்த வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். கோயில் நிர்வாகம் இந்த மோசடி குறித்து போலீஸில் புகார் செய்வது குறித்தும் பரிசீலித்துவருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு