Published:Updated:

ஊட்டியை உறையவைக்கும் லாக்-அப் கொடூரம்! - மூடி மறைத்த அதிகாரிகள்

 சுரேஷ்
பிரீமியம் ஸ்டோரி
சுரேஷ்

‘இடது காலை வெட்டி எடுத்தாத்தான் ஆளைக் காப்பாத்தவே முடியும். இங்க வைத்தியம் பார்க்க முடியாது.

ஊட்டியை உறையவைக்கும் லாக்-அப் கொடூரம்! - மூடி மறைத்த அதிகாரிகள்

‘இடது காலை வெட்டி எடுத்தாத்தான் ஆளைக் காப்பாத்தவே முடியும். இங்க வைத்தியம் பார்க்க முடியாது.

Published:Updated:
 சுரேஷ்
பிரீமியம் ஸ்டோரி
சுரேஷ்

காவல்துறையின் இரக்கமற்ற சித்ரவதைக்கு ஆளாகி, பெருந்துயரத்தில் துடிதுடித்துக்கொண்டிருக்கிறார் ஊட்டியைச் சேர்ந்த சுரேஷ். குற்றம் செய்ததாக ஒப்புக்கொள்ளச்சொல்லி காந்தல் போலீஸார் தாக்கியதில், கால் நரம்புகள் பாதிக்கப்பட்டு, சீழ் பிடித்து அழுகிப்போய் நடக்க முடியாத நிலையில் படுத்த படுக்கையாகக் கிடக்கிறார் சுரேஷ். அரசின் அத்தனை துறைகளுக்கும் இந்தக் கொடூரம் தெரிந்தும், திட்டமிட்டே மறைக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் பெருங்கொடுமை!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் பரபரப்பாக மூழ்கியிருந்தது நீலகிரி கலெக்டர் அலுவலகம். உச்சி வெயிலில் கையில் சில பேப்பர்களை வைத்துக்கொண்டு, வருவோர் போவோரிடமெல்லாம் அதைக் காட்டி கண்ணீர்விட்டுக் கொண்டிருந்தார் நடுத்தர வயது மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவர். அருகில் சென்று விசாரித்தோம், பீறிட்டு வந்த கண்ணீரை அடக்க முடியாமல் தேம்பியபடியே நம்மிடம் பேசினார்...

ஊட்டியை உறையவைக்கும் லாக்-அப் கொடூரம்! - மூடி மறைத்த அதிகாரிகள்

‘‘என் பெயர் ஜெயசுதா. வீட்டுக்காரர் பேரு சுரேஷ். நாங்க பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவங்க. எங்களுக்கு ரெண்டு பொண்ணுங்க. ஒருத்தி 11-வது படிக்கிறா... ஒருத்தி 9-வது படிக்கிறா. ஊட்டி பக்கத்துல இருக்கிற ‘தலையாட்டு மந்து’தான் எங்க ஊரு. நான் ஒரு மாற்றுத்திறனாளி. என் வீட்டுக்காரர் கேரட் மூட்டை சுமந்தாரு. ஆனாலும், எந்தக் குறையும் இல்லாம என்னை ரொம்ப சந்தோஷமாப் பார்த்துக்கிட்டாரு. எந்தக் கவலையும் இல்லாம நிம்மதியாத்தான் இருந்தோம்.

போன வருஷம் (2021), ஆகஸ்ட் மாசம் 9-ம் தேதி, விடியற்காலை 4 மணிக்கு, திடீர்னு வீட்டுக் கதவைத் தட்டுற‌ சத்தம் கேட்டுது. எழுந்துவந்து பார்த்தேன். ரெண்டு மூணு போலீஸ்காரங்க வீட்டு வாசல்ல நின்னாங்க. மனசு கருக்குன்னு இருந்துச்சு. எங்களுக்கு ஒண்ணுமே புரியலை. ‘ஒரு வேலை விஷயமா உங்க வீட்டுக்காரரைக் கூட்டிட்டுப் போறோம். சீக்கிரம் அனுப்பிவெக்கிறோம்’னு சொல்லி, எங்களை எதுவுமே பேசவிடாம கூட்டிட்டுப் போயிட்டாங்க. யாரு, என்னன்னு எதுவுமே தெரியாம குடும்பமே தவிச்சுக் கெடந்தோம். பகல் ஒரு மணி வாக்குல எனக்கு ஒரு போன் வந்தது. ‘காந்தல் ரூரல் ஸ்டேஷன்லருந்து பேசுறோம். உடனே உங்க வீட்டுக்காரரோட ஆதார் கார்டை எடுத்துக்கிட்டு வாங்க’னு சொன்னாங்க. பதறியடிச்சுக்கிட்டு ஓடினோம்.

‘தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சுற மோட்டாரை உங்க வீட்டுக்காரர் திருடியிருக்கார். ஆனா, உண்மையை ஒப்புக்க மாட்டேங்கிறார். அவர்மேல கேஸ் போடுறோம்‌. நீ கோர்ட்டுல வந்து பாத்துக்கோ’னு காந்தல் ஸ்டேஷன்ல சொன்னாங்க. எங்க வீட்டுக்காரர் அப்படிப்பட்ட ஆள் இல்லைன்னு எவ்வளவோ சொல்லிக் கதறி அழுதேன். எதையுமே காதுல வாங்காம என்னை வெளியே விரட்டிட்டாங்க. அதுக்கப்புறம் அவரைப் பார்க்கவே விடலை. வீட்டுக்காரரை ஜாமீன்ல வெளிய எடுக்க 15 நாளுக்கு மேல் அலைஞ்சுக்கிட்டுக் கெடந்தேன்.

ஜெயசுதா
ஜெயசுதா

‘கால் முடியாம ஊட்டி பெரிய ஆஸ்பத்திரியில சுரேஷை அட்மிட் பண்ணியிருக்காங்க... போயி பாரு’னு அக்கம் பக்கத்து ஆளுங்க ஆகஸ்ட் 27-ம் தேதி சொன்னாங்க. அழுதுக்கிட்டே கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்குப் போயி பார்த்தப்ப, என் உசுரே உறைஞ்சு போயிடுச்சு. இடது கால் முழுக்க ரத்தமும் சீழும் கட்டி, சதையெல்லாம் அழுகிப்போயிருந்தது. பக்கத்துலயே போக முடியாத அளவுக்கு நாத்தம். அதைப் பார்த்து மயக்கம்போட்டு விழுந்துட்டேன். அவரால சரியா பேசக்கூட முடியலை. உடம்புல உசிரு மட்டும்தான் மிச்சமிருந்தது.

போலீஸ்காரங்க கூட்டிட்டுப்போன அன்னிக்குக் காலையில 4:30 மணியிலருந்து நைட்டு வரைக்கும் ‘திருடினேன்னு ஒப்புக்கச்சொல்லி’ இரும்புக் குழாயால அடிச்சு சித்ரவதை செஞ்சுருக்காங்க. இடது கால் நரம்பு, சதை எல்லாமே செதைஞ்சு ரத்த ஓட்டம் இல்லாம உள்ளேயே சீழ்க் கட்டியிருக்கு. கொஞ்சம்கூட மனசாட்சி இல்லாம காயத்தோடவே நைட்டு 10:30 மணிக்கு கூடலூர் சப் ஜெயில்ல கொண்டுபோயி போட்டுருக்காங்க. சீழ்க்கட்டி ரொம்ப நாத்தம் எடுக்கவும், வேற வழி இல்லாம ஊட்டி ஆஸ்பத்திரியில கொண்டுவந்து போட்டுட்டுப் போயிருக்காங்க.

‘இடது காலை வெட்டி எடுத்தாத்தான் ஆளைக் காப்பாத்தவே முடியும். இங்க வைத்தியம் பார்க்க முடியாது. கோயம்புத்தூருக்குக் கூட்டிட்டுப்‌ போங்க’னு சொல்லவும், என்ன செய்யுறதுன்னு தெரியாம தவிச்சேன். தனியார் ஆஸ்பத்திரியில வைத்தியம் பார்க்குற அளவுக்குக் கையில ஒண்ணுமே இல்லை. வீடு கட்டுறதுக்காக வாங்குன கடனையே இன்னும் அடைக்க முடியலை. அதனால, ஊர்ல இருக்குற கட்சி ஆளுங்ககிட்ட சொல்லி அழுதேன். அவங்கதான் போலீஸ் அதிகாரிகள்கிட்ட பேசி, கோயம்புத்தூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவெச்சாங்க. வீட்டுக்காரரை அடிச்சு அநியாயம் செஞ்ச போலீஸையே வைத்தியச் செலவையும் ஏத்துக்க வெச்சாங்க.

உயரதிகாரிகள்கிட்ட இந்த விஷயத்தைக் கொண்டுபோனோம். இந்தக் கொடுமையை செஞ்ச காந்தல் எஸ்.ஐ-க்கள் மனோஜ், ஜானகிராமன், காவலர்கள் சுரேஷ், ஸ்டீஃபன், ராஜவேல் ஐந்து பேரையும் நவம்பர் மாசம் சஸ்பெண்ட் செஞ்சாங்க. ‘இந்த விஷயத்தை வெளியே யாருக்குமே சொல்லக் கூடாது. அவரைக் குணமாக்கி ஒப்படைக்கிறோம்’னு சொன்னாங்க. பயந்துக்கிட்டு வெளியே யாருக்குமே சொல்லலை. இப்போ வைத்தியம் பார்க்கவே பணம் கொடுக்காம அலைய வெக்கிறாங்க.

சிகிச்சையில் சுரேஷ்
சிகிச்சையில் சுரேஷ்

என் வீட்டுக்காரர் இன்னமும் ஆஸ்பத்திரியில படுத்த படுக்கையாத்தான் இருக்கார். ஒரு நிமிஷம்கூட அவரால நிக்க முடியாது. அவரோட இயற்கை உபாதையையெல்லாம் என் ஒத்தக் கையாலதான் செஞ்சுக்கிட்டு வர்றேன். எனக்கும் கை முடியாததால வேலைக்குப் போக முடியலை. வீட்டுல இருக்கிற பாத்திரம் பண்டுகளை வித்துத்தான் தினமும் சாப்பிடுறோம். நாங்க யாருக்கும் எந்த துரோகமும் செஞ்சதில்லை. எங்களுக்கு இப்படியொரு கொடுமை நடந்துருக்கு. இந்தக் கொடூரத்துக்குச் சரியான நியாயம் கிடைக்கணும்‌. எங்க வீட்டுக்காரர் பழைய‌ மாதிரி நல்லபடியா வீட்டுக்கு வந்தாத்தான் நாங்க வாழ முடியும். ரெண்டு பொம்பளப் பிள்ளைகளை கையில் வெச்சுக்கிட்டு திக்கு திசை தெரியாம உக்காந்திருக்கேன்” என்றார் கண்ணீருடன்.

காந்தல் ரூரல் போலீஸாரின் கொடூரம் குறித்து, மக்கள் சட்ட மையத்தின் நிறுவனரான வழக்கறிஞர் விஜயன், ‘‘அப்பாவி மக்கள்மீது எத்தகைய உரிமை மீறலையும் செய்யலாம் என்ற காவல்துறைப் போக்கின் இன்னொரு உதாரணம்தான் இந்த சுரேஷ் விஷயம். இது மிகப்பெரிய மனித உரிமை மீறல். மனித உரிமைக் கழகம் இந்த வழக்கைத் தாமாகவே முன்வந்து எடுத்து நடத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியையும் இழப்பீட்டையும் வழங்குவதோடு, சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும்’’ என்றார்.

கீர்த்தி பிரியதர்ஷினி - விஜயன்
கீர்த்தி பிரியதர்ஷினி - விஜயன்

இந்த விவகாரத்தை நீலகிரியின் பொறுப்பு ஆட்சியர் கீர்த்தி பிரியதர்ஷினியின் கவனத்துக்குக் கொண்டுசென்றோம். ‘‘இது தொடர்பாக ஏற்கெனவே நமக்குப் புகார் வந்தது. காவல்துறை அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுசென்றோம். சுரேஷ் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் தரப்பில் பேசிய, சிறப்புப் பிரிவு ஆய்வாளர் சுபாஷிணி, ‘‘மோட்டார் திருடிய வழக்கு விசாரணைக்கு சுரேஷை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். சுரேஷுக்கு வெரிகோஸ் பிரச்னை இருந்துள்ளது. காவலர்கள் அவரைத் தாக்கிய விவரம் தெரிந்ததும், உடனடியாக இரண்டு எஸ்.ஐ உட்பட ஐந்து காவலர்களையும் சஸ்பெண்ட் செய்திருக்கிறோம். மேலும், அந்த நபரின் சிகிச்சைக்கான தொகையையும் சம்பந்தப்பட்ட காவலர்களையே ஏற்கச் சொல்லியிருக்கிறோம்’’ என்றார்.

காவல்துறையின் வன்முறைக்கு ஆளாகி, சித்ரவதையை அனுபவித்துக்கொண்டிருக்கும் சுரேஷுக்கு நீதியும், வறுமையோடு போராடிக்கொண்டிருக்கும் அவரது மாற்றுத்திறனாளி மனைவிக்கு உதவியும் உடனடித் தேவை. காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக இதில் தலையிட வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism