Published:Updated:

புதுக்கோட்டை: புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு - நூற்றுக்கணக்கான பெண்கள் திரண்டு போட்ட பூட்டு

டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு

``இப்போ திறந்த கடை பேருந்து நிறுத்தத்துக்கு ரொம்பப் பக்கம். பக்கத்துலயே பள்ளிவாசல் இருக்கு. ஏற்கெனவே இருக்கும் டாஸ்மாக்குக்கு எதிர்ல திறக்குறாங்க.” - மக்கள்

புதுக்கோட்டை: புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு - நூற்றுக்கணக்கான பெண்கள் திரண்டு போட்ட பூட்டு

``இப்போ திறந்த கடை பேருந்து நிறுத்தத்துக்கு ரொம்பப் பக்கம். பக்கத்துலயே பள்ளிவாசல் இருக்கு. ஏற்கெனவே இருக்கும் டாஸ்மாக்குக்கு எதிர்ல திறக்குறாங்க.” - மக்கள்

Published:Updated:
டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளத்தில், பேருந்து நிறுத்தம், கே.புதுப்பட்டி சாலை என இரண்டு இடங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டுவருகின்றன. இந்த நிலையில், அரிமளத்திலிருந்து கே.புதுப்பட்டி செல்லும் சாலையிலேயே புதிதாக மூன்றாவதாக ஒரு டாஸ்மாக் கடையைத் திறக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பே முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போதே இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், இந்த டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கினர். இதனால், தற்காலிகமாக அந்த முயற்சி கைவிடப்பட்டது. இந்நிலையில், பொதுமக்களின் எதிர்ப்புகளையும் மீறி அரிமளம் பகுதியில் அவசர அவசரமாக பொருள்கள் கொண்டுவரப்பட்டு 11-ம் தேதி மூன்றாவதாக ஒரு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.

டாஸ்மாக்
டாஸ்மாக்

இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாகச் சென்று புதிதாகத் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை முற்றுகையிட முயன்றனர். இதையறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டாஸ்மாக் நிர்வாகம் அந்தக் கடையை மூடியது. தொடர்ந்து கடைக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.

இதற்கிடையே திரண்டு வந்த பொதுமக்கள், ஏற்கெனவே செயல்பட்டுவந்த இரண்டு டாஸ்மாக் கடைகளையும், இழுத்து மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டதோடு, அந்தக் கடைகளை இழுத்து மூடவைத்தனர். தொடர்ந்து, கே.புதுப்பட்டி சாலையில், அமர்ந்த பொதுமக்கள், தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் காவல்துறை அதிகாரிகள், வட்டாட்சியர் உட்பட அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்போது, புதிதாகத் திறக்கப்பட்ட கடையை மூடுவதோடு, அங்குள்ள பொருள்களையும் அகற்றிக்கொடுப்பதாக உறுதியளித்தனர். தொடர்ந்து, மற்ற இரண்டு கடைகளையும் மூடுவது குறித்து மாவட்ட நிர்வாகத்தின் பார்வைக்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து, போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்ற்னர்.

இது குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, ``பெரிய ஆளுங்க குடிச்ச காலம் மாறி, இப்ப பள்ளி, கல்லூரி மாணவர்களும் மதுவுக்கு அடிமையாகிட்டாங்க. காரணம் இந்த மதுக்கடைதான். மது குடிச்சு, குடிச்சு குடல் வெந்து, சின்ன வயசுலேயே செத்துப்போனவங்களெல்லாம் எங்க பகுதியில அதிகம்.

டாஸ்மாக்
டாஸ்மாக்

இளம் வயசுலேயே பல பெண்கள் கணவனை இழந்துட்டு தவிச்சுக்கிட்டு இருக்காங்க. இப்படிப் பல்வேறு பிரச்னைகள் இருக்கு. அதுவும் இப்போ திறந்த கடை பேருந்து நிறுத்தத்துக்கு ரொம்பப் பக்கம். பக்கத்துலயே பள்ளிவாசல் இருக்கு. ஏற்கெனவே இருக்கும் டாஸ்மாக்குக்கு எதிர்ல திறக்குறாங்க. இப்படி, பொதுமக்கள் நடமாட்டம் இருக்கிற இடத்துல மூணாவதா ஒரு டாஸ்மாக் கடையை பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி கொண்டு வந்திருக்காங்க. தகவல் தெரிஞ்சு எல்லாரும் திரண்டு வந்ததால, தற்காலிகமா இப்போ மூடிட்டாங்க. நிரந்தரமா மூடவைக்கணும். இந்த டாஸ்மாக் கடைகளை நிரந்தரமா மூடுற வரைக்கும் நாங்க விட மாட்டோம்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism