Published:Updated:

`அதிகாலை நேரம்தான் டார்கெட்..!' - ஒரத்தநாடு கிராமத்துக்கு அதிர்ச்சி கொடுத்த கொள்ளையர்கள்

ஒரத்தநாடு
ஒரத்தநாடு

புதிய திருடர்கள் யாராவது கைவரிசை காட்டினார்களா அல்லது திருட்டையே தொழிலாகக் கொண்டுள்ளவர்கள் இதைச் செய்தார்களா எனத் தெரியவில்லை.

ஒரத்தநாடு அருகே உள்ள கிராமம் ஒன்றில் அதிகாலை நேரத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இரண்டு பெண்களின் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகையை மர்ம நபர்கள் அடுத்தடுத்து கொள்ளையடித்துச் சென்றதுடன் மோட்டார் பைக் ஒன்றையும் திருடிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் ஸ்டேஷன்
போலீஸ் ஸ்டேஷன்

ஒரத்தநாடு அருகே உள்ள பொய்யுண்டார்கோட்டை கிராமம் வாண்டையார் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரின் மனைவி ஆர்த்தி (26). இவர் நேற்று அதிகாலை வீட்டில் முன்புறம் உள்ள போர்டிகோவில் தனியாகத் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது வந்த மர்ம நபர்கள் இவர் கழுத்தில் கிடந்த சுமார் மூன்றரை பவுன் தங்கச் செயினைப் பறித்துச் சென்றனர். இதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரின் மனைவி கிருபா ராணி. இவரது வீட்டுக்குச் சென்ற திருடர்கள் அவர் கழுத்தில் இருந்த 7 பவுன் தங்க நகையைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

அதோடு இல்லாமல் கும்பகோணத்திலிருந்து பொய்யுண்டார் கோட்டைக்கு வெள்ளைதுரை என்பவர் வந்திருந்தார். அவரது மோட்டார் சைக்கிள் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அதையும் கொள்ளையர்கள் ஓட்டிச் சென்றனர். இந்தச் சம்பவம் அந்த அதிகாலை நேரத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Vikatan

இதுகுறித்து கிராமத்தைச் சேர்ந்த சிலர் பேசுகையில், ``கொரோனா ஊரடங்கால் பலரும் வேலையிழந்துள்ளதால் வருமானமின்றி காணப்படுகின்றனர். இதனால் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தச் சூழ்நிலையில் எங்கள் கிராமத்தில் அடுத்தடுத்து இரண்டு பெண்களிடம் தங்கச் செயினை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். இதை எதிர்பாராமல் அந்தப் பெண்கள் சத்தம் போட்டுள்ளனர். அதற்குள் அந்த மர்ம நபர்கள் மின்னல் வேகத்தில் மறைந்துவிட்டனர்.

இதில், போகிறபோக்கில் வீட்டின் முன் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கையும் ஓட்டிக்கொண்டு சென்றுவிட்டனர். புதிய திருடர்கள் யாராவது கைவரிசை காட்டினார்களா அல்லது திருட்டையே தொழிலாகக் கொண்டுள்ளவர்கள் இதைச் செய்தார்களா எனத் தெரியவில்லை. ஒரு கிராமப் பகுதியில் வந்து திருடிச் செல்வதற்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும். எதற்கும் துணிந்தவர்கள்தான் இதைச் செய்திருக்க முடியும்.

ஒரத்தநாடு
ஒரத்தநாடு

இதுதொடர்பாக ஒரத்தநாடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

நகை வழிப்பறி தொடர்பாக, சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமாரிடம் பேசினோம். `` சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு நபர்களை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறோம். சீக்கிரமே இதில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கைது செய்து பொதுமக்களின் அச்சத்தைப் போக்குகின்ற வகையில் நடவடிக்கை எடுப்போம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு