தஞ்சாவூர்: `பார்சலில் வந்த வெடிபொருள்கள்; தந்தை, மகன் அதிர்ச்சி!’ - போலீஸ் விசாரணை

`எனக்கு வெடிகுண்டு மூலப்பொருள் பார்சல் அனுப்பியது, தனியார் நிதி நிறுவனத்தின் உரிமையாளர்தான். நான் பணம் கேட்டுவிடக் கூடாது என்று என்னை மிரட்டுவதற்காக வெடிகுண்டு பார்சலை அனுப்பியிருக்கிறார்.’
ஒரத்தநாடு அருகே இளைஞரான விவசாயி ஒருவருக்கு வெடிகுண்டு தயார் செய்யக்கூடிய மூலப்பொருள்கள் பார்சலில் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தநிலையில் திருச்சியைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவனத்தின் உரிமையாளர், தன்னை மிரட்டுவதற்காக வெடிபொருள்களை அனுப்பியதாக அந்த இளைஞர் போலீஸில் புகாரளித்திருக்கிறார்.

ஒரத்தநாடு அருகேயுள்ள கண்ணந்தகுடி மேற்கு, வடக்குத் தெருவை சேர்ந்தவர் அறிவழகன் (27). இவருடைய தந்தை கருணாநிதி. அறிவழகன் பொறியியல் படித்துவிட்டு, தனது தந்தையுடன் விவசாயம் செய்துவருகிறார். இந்தநிலையில் அறிவழகனுக்கு திருச்சியிலிருந்து கூரியர் மூலம் பார்சல் ஒன்று வந்திருக்கிறது. அதை அறிவழகனின் தந்தை வாங்கி, வீட்டில் வைத்திருந்திருக்கிறார்.
கூரியரில் வந்த பார்சலைப் பிரித்த அறிவழகன் அதிர்ச்சியடைந்தார். அந்த பார்சலில் வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருள்கள் இருந்தன. உடனடியாக அறிவழகன், தனது தந்தை கருணாநிதியுடன் சேர்ந்து அவற்றை அவர்களின் தென்னந்தோப்பிலேயே குழிதோண்டிப் புதைத்தார்.

அதன் பிறகு இருவரும் ஒரத்தநாடு காவல் நிலையத்துக்குச் சென்று புகாரளித்தனர். இதையடுத்து போலீஸார் மற்றும் வெடிகுண்டு நிபுணர் எஸ்.எஸ்.ஐ கணேசமூரத்தி உள்ளிட்டவர்கள் வந்து பார்வையிட்டதுடன், வெடிபொருள்களைக் கைப்பற்றி சோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீஸ் தரப்பில் விசாரித்தோம். ``கார்த்திபன், தென்னுார் ஹைரோடு, 10.சி. வெள்ளாளர் தெரு, திருச்சி என்ற முகவரியிலிருந்து அறிவழகனுக்கு பார்சல் வந்திருக்கிறது. விசாரணையில் அந்த முகவரி போலியானது என்பது தெரியவந்திருக்கிறது. கனெக்டிங் டெட்டனேட்டர் (10 கிராம்) மற்றும் ஜெலட்டீன் செல் 19 (125 கிராம்) ஆகிய இரண்டும் வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப் பொருள்கள். இவைதான் பார்சலில் வந்திருக்கின்றன. இதை யார், எதற்காக அறிவழகனுக்கு அனுப்பிவைத்தார்கள் என்று விசாரணை செய்துவருகிறோம்’’ என்று தெரிவித்தனர்.

இது குறித்து அறிவழகனிடம் பேசினோம்.``நான் திருச்சி, மன்னார்புரம், கல்லுக்குழியிலுள்ள எல்பின் ஈகாம் பிரைவேட் தனியார் நிதி நிறுவனத்தில் உறுப்பினராகச் சேர்ந்தேன். அத்துடன் என் உறவினர்கள் மற்றும் நண்பர்களை சிலரையும் அதில் உறுப்பினராகச் சேர்த்துவிட்டேன். நான் அந்த நிறுவனத்தில் சுமார் ரூ.54.76 லட்சம் வரை பணம் செலுத்தியிருக்கிறேன்.
நான் செலுத்திய பணத்துக்கு 10 மாதங்களில் மூன்று மடங்காகப் பணம் தருவதாகக் கூறினார்கள். ஆனால், கூறியபடி பணம் வழங்கவில்லை. மேலும், அவர்கள் கொடுத்த செக்கும் திரும்பி வந்துவிட்டது. இதனால் நான் சேர்த்துவிட்டவர்கள், என்னிடம் பணம் கேட்கத் தொடங்கினர். இதையடுத்து நான் கடந்த 1-ம் தேதி அந்தத் தனியார் நிதி நிறுவன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சை எஸ்.பி-யிடம் புகாரளித்தேன்.

எனக்கு வெடிகுண்டு மூலப்பொருள் பார்சல் அனுப்பியது. அந்தத் தனியார் நிதி நிறுவனத்தின் உரிமையாளர்தான். நான் பணம் கேட்டுவிடக் கூடாது என்று என்னை மிரட்டுவதற்காக வெடிகுண்டு பார்சலை அனுப்பியிருக்கிறார். எனவே, எங்களுடைய பணத்தை திருப்பிப் பெற்றுத்தர வேண்டும். வெடிகுண்டு பார்சல் அனுப்பியதற்காக அவர்மீது தகுந்த நடவடிக்கையை போலீஸார் எடுக்க வேண்டும்’’ என்றார்.