சென்னை, மணலி அறிஞர் அண்ணா முதல் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ் (37). இவர் பெயின்டிங் கான்ட்ராக்ட் வேலை செய்து வந்தார். இவரின் மனைவி வரலட்சுமி. இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு நாகராஜ் அடிமையாகியுள்ளார். அதனால் அதிகளவில் பணத்தை இழந்துள்ளார். அதன் காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தச் சூழலில் நாகராஜ், தான் பயன்படுத்திவந்த செல்போனை அடகு வைத்து, அந்தப் பணத்தையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார். அது தொடர்பாகவும் கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதனால் மனமுடைந்த நாகராஜ், தனியாக படுக்கையறையில் தூங்கியுள்ளார். இன்று அதிகாலை அவரின் மனைவி கண்விழித்துப் பார்த்தபோது நாகராஜ் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வரலட்சுமி கதறி அழுதார். அதைக்கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் நாகராஜை மீட்டனர். அப்போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து மணலி காவல் நிலையத்துக்கு நாகராஜின் குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சம்பவ இடத்துக்கு வந்த மணலி போலீஸார், நாகராஜின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் தொடர்ந்து தற்கொலை சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதற்காக சிறப்பு சட்டம் இயற்ற தனிக்குழுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தச் சூழலில்தான் மீண்டும் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை சம்பவம் நடந்திருக்கிறது.