Published:Updated:

கிறிஸ்துமஸ் வாழ்த்துச் சொல்வதைப் போல நடந்த கொலை! - மனைவியின் ஆண் நண்பரால் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்

கொலை

கிறிஸ்துமஸ் வாழ்த்துச் சொல்வதைப் போல நடித்து பெயின்டரை கொலை செய்தவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

கிறிஸ்துமஸ் வாழ்த்துச் சொல்வதைப் போல நடந்த கொலை! - மனைவியின் ஆண் நண்பரால் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்

கிறிஸ்துமஸ் வாழ்த்துச் சொல்வதைப் போல நடித்து பெயின்டரை கொலை செய்தவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
கொலை

திருநெல்வேலி மாவட்டம், மலையடிகுறிச்சி, முப்பிடாதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வேல்துரை என்கிற சங்கர் (33). இவரின் மனைவி கோமதி. இவர் சொந்த ஊரில் வசித்து வருகிறார். வேல்துரை, சென்னை கிண்டி ஈக்காட்டுதாங்கல் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கியிருந்து பெயின்டராக வேலைப்பார்த்து வந்தார். இவர் கிறிஸ்துமஸ் தினத்தன்று (டிசம்பர் 25 ) பணியிலிருந்தபோது விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்த வீரபுத்திரன் என்பவர் அங்கு வந்தார். `வேல்துரைக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துச் சொல்ல வேண்டும். அதனால் அவரைச் சந்திக்க வேண்டும்' என அந்த நிறுவனத்தில் உள்ளவர்களிடம் வீரபுத்திரன் கூறியிருக்கிறார். அதனால் வீரபுத்திரனைச் சந்திக்க வேல்துரை வெளியில் வந்தார். வீரபுத்திரனைப் பார்த்தததும் வேல்துரைக்கு ஆத்திரம் வந்தது.

கொலை
கொலை

`ஏன் என்னை சந்திக்க வந்தாய்?' என வேல்துரை, வீரபுத்திரனிடம் கேட்டதாகத் தெரிகிறது. அதற்கு, `நீ எப்படி கோமதியை சென்னைக்கு வரும்படி சொல்லலாம்' என வீரபுத்திரன் கேட்டிருக்கிறார். இதனால் வேல்துரைக்கும் வீரபுத்திரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த வீரபுரத்திரன், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வேல்துரையை சரமாரியாக குத்தியிருக்கிறார். ரத்தம் அதிக அளவில் வெளியேறிய நிலையில் சம்பவ இடத்திலேயே வேல்துரை உயிரிழந்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அந்தப் பகுதியில் உள்ளவர்கள் ஓடிவந்திருக்கிறார்கள். அதைப்பார்த்த வீரபுத்திரன் தப்பிசென்றுவிட்டார்.

பின்னர், இந்தச் சம்பவம் குறித்து கிண்டி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், வேல்துரையின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக தர்மேந்திரா சௌதாரி என்பவர் கொடுத்த புகாரின்பேரில் கிண்டி போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்தனர். வேல்துரையைக் கொலைசெய்த குற்றத்துக்காக வீரபுரத்திரனை போலீஸார் கைதுசெய்து அவரிடமிருந்து கத்தியையும் பறிமுதல் செய்தனர். பின்னர் வீரபுத்திரனிடம் விசாரித்தபோது வேல்துரை கொலைசெய்யப்பட்டதற்கான காரணம் தெரியவந்தது.

கைது
கைது

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``கொலைசெய்யப்பட்ட வேல்துரையின் மனைவி கோமதி என்பவருக்கும் வீரபுத்திரனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்தத் தகவல் தெரிந்ததும் வேல்துரை, தன்னுடைய மனைவியைக் கண்டித்திருக்கிறார். அதோடு அவரின் ஆண்நண்பரான வீரபுத்திரனையும் கண்டித்திருக்கிறார். அதன்பிறகு வேலைக்காக வேல்துரை, சென்னை வந்துவிட்டார். அதனால் கோமதியும் வீரபுத்திரனும் அடிக்கடி சந்தித்திருக்கின்றனர். இந்தத் தகவலைத் தெரிந்த வேல்துரை, தன்னுடைய மனைவி கோமதியை சென்னைக்கு வரும்படி அழைத்திருக்கிறார். இந்தத் தகவலைக் கேள்விபட்ட வீரபுத்திரன், ராஜபாளையத்திலிருந்து சென்னைக்கு வந்து வேல்துரையை கொலைசெய்திருக்கிறார். விசாரணைக்குப் பிறகு வீரபுத்திரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்துள்ளோம்" என்றனர்.