Published:Updated:

மாணவிகளை மிரட்டி வீடியோ எடுத்து விற்ற தம்பதி! - போலீஸ் அதிகாரிகளை உறைய வைத்த வாக்குமூலம்

ராம் பிரசாத்

பாகிஸ்தானைச் சேர்ந்த தம்பதி, 45 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து, அந்த வீடியோக்களை ஆபாச இணையதளங்களுக்கு விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Representation image
Representation image

பாகிஸ்தானைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராவல்பிண்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், காவல் நிலையத்தில் அளித்த புகாரில், “ கல்லூரி முடிந்து பேருந்துக்காகக் காத்திருந்தபோது, ஒரு பெண் தன்னைக் கல்லூரி மாணவி என அறிமுகப்படுத்திக்கொண்டார். மிகவும் சகஜமாகப் பேசிப் பழகினார். தன்னை அழைத்துச்செல்ல சகோதரர் வருவதாகவும் அவருக்காகக் காத்திருப்பதாகவும் கூறியவர், உன்னையும் போகும் வழியில் இறக்கிவிடுகிறேன் என்றார். சிறிது நேரத்தில் அவரை அழைத்துச்செல்ல ஒருவர் வந்தார். அவரைத் தனது சகோதரர் என அறிமுகம் செய்துவைத்தார்.

car
car

நான் மறுத்தபோதும் வலுக்கட்டாயமாக காரில் ஏற்றினர். காருக்குள் ஏறியதும் கத்தியைக் காட்டி மிரட்டினார்கள். 'உதவி கேட்டு சத்தம் போட்டால் கொலை செய்துவிடுவோம். அமைதியாக வரவேண்டும்' என கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினர். பயத்தில் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அந்த கார், குலிஸ்தான் காலனி பகுதிக்குள் சென்றது. அங்கிருந்த ஒரு வீட்டு வாசலில் நின்றது.

என்னால் அவர்களது பிடியில் இருந்து தப்ப முடியவில்லை. வீட்டிற்குள் அழைத்துச்சென்றவர்கள், என்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தனர். அதை, அந்தப் பெண் வீடியோ, புகைப்படம் எடுத்தார். அவர்கள் இருவரும் கணவன் மனைவி என்பது அப்போதுதான் தெரிந்தது. இதுகுறித்து ஏதாவது வெளியில் சொன்னால், புகைப்படத்தையும் வீடியோக்களையும் இன்டர்நெட்டில் பதிவேற்றம் செய்துவிடுவோம் என மிரட்டினர்'' எனக் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணையில் இறங்கினர்.

Representation image
Representation image

கல்லூரி மாணவி தெரிவித்த அடையாளத்தை வைத்துக் கொண்டு விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த வீட்டைக் கண்டுபிடித்து, அந்தத் தம்பதியைக் கைது செய்தனர். காவல்துறையின் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. மாணவிகளைத் தங்கள் வீட்டுக்கு அழைத்துவந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவற்றைப் புகைப்படம், வீடியோவாக எடுத்து, ஆபாச இணையதளங்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் அந்தத் தம்பதியினர் கூறியுள்ளனர்.

மேலும், இதுவரை 45 மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் இதில் சிலர் சிறுமிகள் என்பதும் காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைக் கேட்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அவர்களிடமிருந்து ஏராளமான படங்கள் மற்றும் வீடியோக்களைக் கைப்பற்றியுள்ளனர்.

Arrest
Arrest

தம்பதி கைது குறித்துப் பேசியுள்ள காவல்துறை அதிகாரிகள், “ குற்றவாளிகளின் வாக்குமூலத்தைக் கேட்பதற்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்தக் குற்றத்தை இவர்கள் மட்டும்தான் செய்தார்களா அல்லது வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என விசாரித்துவருகிறோம். இவர்களுக்கு எதிராகக் கடுமையான வழக்குகளைப் பதிவு செய்ய உள்ளோம்” என்கின்றனர் உறுதியாக.