Published:Updated:

பாம்பன்: படகுடன் சிக்கிய 1,000 கிலோ மஞ்சள்! - கடத்தல் கும்பலைத் தேடும் போலீஸார்

சிக்கிய கடத்தல் மஞ்சளுடன் போலீஸார்
சிக்கிய கடத்தல் மஞ்சளுடன் போலீஸார்

கடத்தல் கும்பல்கள் தமிழகத்திலிருந்து டன் கணக்கில் சமையல் மஞ்சளை இலங்கைக்குக் கடத்திவருகின்றன. கள்ளத்தனமாக மஞ்சளை வாங்கும் இலங்கை கடத்தல்காரர்கள், அதற்கு மாற்றாக பணம் மட்டுமல்லாமல், தங்கக்கட்டிகளையும் கொடுக்கின்றனர்.

பாம்பன் கடற்கரையிலிருந்து இலங்கைக்குக் கடத்தவிருந்த 1,000 கிலோ சமையல் மஞ்சளை, கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் கைப்பற்றினர். மஞ்சள் மூட்டைகளை இலங்கைக்குக் கடத்த முயன்ற கும்பலை போலீஸார் தேடிவருகின்றனர்.

கடத்தல் மஞ்சள்
கடத்தல் மஞ்சள்

இலங்கையில் சமையலுக்குப் பயன்படுத்தும் விராலி மஞ்சள் உள்ளிட்ட பணப்பயிர் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதன் ஒரு பகுதியாக வெளிநாடுகளிலிருந்து மஞ்சள் இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், இலங்கையில் மஞ்சள் உபயோகப்படும் அளவுக்கு உற்பத்தி பெருகவில்லை. இதனால் அங்கு மஞ்சளுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. அங்கு கடந்த ஆண்டு இறுதியில் கிலோ 400 ரூபாய்க்கு விற்கப்பட்டுவந்த மஞ்சளின் விலை, தற்போது 7,000 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட கடத்தல் கும்பல்கள் தமிழகத்திலிருந்து டன் கணக்கில் சமையல் மஞ்சளை இலங்கைக்குக் கடத்திவருகின்றன. கள்ளத்தனமாக மஞ்சளை வாங்கும் இலங்கையர்கள் அதற்கு மாற்றாக பணம் மட்டுமல்லாமல் தங்கக்கட்டிகளையும் கொடுக்கின்றனர். இதனால் சமீபகாலமாக மஞ்சள் கடத்தல் அதிக அளவில் நடந்துவருகிறது.

கடந்த சில நாள்களுக்கு முன்னர் மண்டபம் கடல் பகுதியில் ரோந்து சென்ற சுங்கத்துறையினர் 500 கிலோ கடத்தல் மஞ்சளைக் கைப்பற்றினர். இந்தச் சம்பவத்தின்போது இலங்கையிலிருந்து கடத்திவரப்பட்ட தங்கக்கட்டிகள் சிக்கியதாகவும், ஆனால் சுங்கத்துறையினர் அவற்றை மறைத்துவிட்டனர் எனவும் செய்திகள் உலவின. மேலும், தங்கத்தைக் கடத்திவந்த வேதாளை கிராமத்தைச் சேர்ந்த கடத்தல் நபருக்கு பதிலாக, வேறு சிலர் மீது மஞ்சள் கடத்தியதாக சுங்கத்துறையினர் வழக்கு பதிவு செய்ததாகவும் கூறப்பட்டது.

மஞ்சள் மூட்டைகளைச் சோதனையிடும் போலீஸார்
மஞ்சள் மூட்டைகளைச் சோதனையிடும் போலீஸார்

அதற்குப் பிரதிபலனாக கடத்தல் தங்கத்தைப் பங்கிட்டுக் கொண்டதாகவும், இதை விசாரிக்கச் சென்ற மத்திய, மாநில உளவுத்துறையினரை அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. ஆனால் சுங்க இலாகாவினரோ, `மஞ்சள் கடத்தலில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகளைத்தான் பிடித்தோம். இதில் ஒளிவு மறைவு ஏதும் இல்லை’ எனத் தெரிவித்திருந்தனர்.

ராமநாதபுரம்: கடற்கரைப் பகுதியில் சிக்கிய 2.3 டன் மஞ்சள்! - இலங்கைக்குக் கடத்த முயன்ற இருவர் கைது

இந்தநிலையில் இன்று காலை பாம்பன் கடற்கரை வடக்கு பகுதியிலிருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படுவதாக மண்டபம் கடலோரப் பாதுகாப்பு குழும போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆய்வாளர் கனகராஜ் தலைமையில் சென்ற கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் நாட்டுப்படகு ஒன்றைச் சோதனையிட்டனர். தூத்துக்குடியைச் சேர்ந்த பதிவு எண் இல்லாத அந்த நாட்டுப்படகிலிருந்து தலா 25 கிலோ எடையுடன் கூடிய 40 மூட்டைகளிலிருந்த ஆயிரம் கிலோ மஞ்சள் கைபற்றப்பட்டது.

மஞ்சள் மூட்டைகளுடன் சிக்கிய நாட்டுப்படகு
மஞ்சள் மூட்டைகளுடன் சிக்கிய நாட்டுப்படகு

இலங்கைச் சந்தையில், சுமார் 70 லட்ச ரூபாய் மதிப்புகொண்ட இந்த மஞ்சளைக் கைப்பற்றிய போலீஸார், நாட்டுப் படகையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும போலீஸார், மஞ்சள் மூட்டைகளை கடத்த முயன்ற கும்பலைத் தேடிவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு