Published:Updated:

பாம்பன்: 400 கிலோ மஞ்சள்; 750 கிலோ கடல் அட்டை - படகு பழுதானதால் சிக்கிய கடத்தல்காரர்கள்!

போலீஸாரிடம் சிக்கிய மஞ்சள் மூட்டைகள்.
போலீஸாரிடம் சிக்கிய மஞ்சள் மூட்டைகள். ( உ.பாண்டி )

அந்தப் படகுக்குள் சமையலுக்குப் பயன்படுத்தும் 400 கிலோ விரலி மஞ்சள் மூட்டைகள், பதப்படுத்தப்பட்ட 750 கிலோ அரிய வகை கடல் அட்டை மூட்டைகள் இருந்தன.

தனுஷ்கோடி வழியாக இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்ட ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான பதப்படுத்தப்பட்ட அரிய வகை கடல் அட்டை மூட்டைகள், விரலி மஞ்சள் மூட்டைகள் ஆகியவை படகுடன் பறிமுதல் செய்யப்பட்டன. கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த மூவரை போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

போலீஸாரிடம் சிக்கிய கடத்தல் மஞ்சள் - கடல் அட்டை.
போலீஸாரிடம் சிக்கிய கடத்தல் மஞ்சள் - கடல் அட்டை.
உ.பாண்டி

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு நடந்துவந்த போதைப்பொருள் கடத்தல் கடந்த சில நாள்களாகச் சமையலுக்கு பயன்படும் மஞ்சள் கடத்தலாக மாறியிருக்கிறது. இலங்கையில் நிலவும் மஞ்சள் தட்டுப்பாடு மற்றும் அதன் அதிகபட்ச விலை ஆகியவை இந்தக் கடத்தலுக்குக் காரணங்களாக இருக்கின்றன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் துபாயிலிருந்து அனுமதியின்றி இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட சுமார் 33,000 கிலோ மஞ்சள், மன்னார் கடல் பகுதியில் நின்ற படகு ஒன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 305 கிலோ மஞ்சள் மற்றும் இலங்கை புத்தளம் மாவட்டம், கல்பிட்டி பகுதியில் ஆயிரம் கிலோ கடத்தல் மஞ்சள் ஆகிவை பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

பிடிபட்ட நாட்டுப்படகு
பிடிபட்ட நாட்டுப்படகு
உ.பாண்டி

இந்நிலையில், தூத்துக்குடி, திரேஸ்புரம் கடல் பகுதியிலிருந்து இலங்கைக்கு தனுஷ்கோடி வழியாக நாட்டுப்படகு ஒன்று சென்றிருக்கிறது. நேற்று மாலை பாம்பன் குந்துகால் பகுதியில் சென்ற அந்தப் படகின் இன்ஜினில் திடீர் பழுது ஏற்பட்டிருக்கிறது. இதனால், படகைத் தொடர்ந்து இயக்க முடியாமல் அந்தப் படகில் இருந்தவர்கள் தத்தளித்திருக்கிறார்கள்.

கோவை: உள்ளாடைகளில் 6 பாக்கெட்கள்... `Paste form’ முறையில் தங்கம் கடத்தல்! - சிக்கிய தம்பதி

இந்நேரத்தில் குந்துகால் கடல் பகுதியில் ரோந்து சென்ற தமிழக கடலோரப் பாதுகாப்பு குழும போலீஸார் நடுக்கடலில் தனியாக நின்றுகொண்டிருந்த நாட்டுப்படகைப் பார்த்திருக்கிறார்கள். அவர்கள் அந்தப் படகின் அருகில் சென்று சோதனை செய்தபோது, அந்தப் படகுக்குள் சமையலுக்குப் பயன்படுத்தும் 400 கிலோ விரலி மஞ்சள் மூட்டைகளும், பதப்படுத்தப்பட்ட 750 கிலோ அரிய வகை கடல் அட்டை மூட்டைகளும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து படகுடன் அவற்றைப் பறிமுதல் செய்த மரைன் போலீஸார், படகிலிருந்த கடத்தல்காரர்கள் மூன்று பேரையும் கைதுசெய்து கரைக்குக் கொண்டுவந்தனர்.

மஞ்சள் - கடல் அட்டையுடன் போலீஸார்.
மஞ்சள் - கடல் அட்டையுடன் போலீஸார்.
உ.பாண்டி

இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கடத்தலில் ஈடுபட்டவர்கள் தூத்துக்குடி, லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த மலையாண்டி, திரேஸ்புரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் பாலத்தின் ஆகியோர் எனத் தெரியவந்தது. தூத்துக்குடியைச் சேர்ந்த ரெடி என்பவரது பதிவு எண் இல்லாத நாட்டுப்படகில் மஞ்சள் மற்றும் கடல் அட்டை மூட்டைகளை கடத்தி வந்ததும் தெரியவந்தது. ரூ 50 லட்சம் மதிப்புள்ள இவற்றை இலங்கையில் கொடுத்துவிட்டு, இதற்கு மாற்றாகத் தங்கம் கடத்திவர அவர்கள் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு