Published:Updated:

ஊராட்சிமன்றத் தலைவர் கொலை; `ஸ்கெட்ச்' வெங்கடேசனுக்கு ஸ்கெட்ச் போட்ட கஞ்சா கும்பல் சிக்கியது எப்படி?

கொலைசெய்யப்பட்ட ஊராட்சிமன்றத் தலைவர் வெங்டேசன்

மாடம்பாக்கம் ஊராட்சிமன்றத் தலைவர் கொலைசெய்யப்பட்டதற்கான அதிர்ச்சிக் காரணம் தெரியவந்திருக்கிறது.

ஊராட்சிமன்றத் தலைவர் கொலை; `ஸ்கெட்ச்' வெங்கடேசனுக்கு ஸ்கெட்ச் போட்ட கஞ்சா கும்பல் சிக்கியது எப்படி?

மாடம்பாக்கம் ஊராட்சிமன்றத் தலைவர் கொலைசெய்யப்பட்டதற்கான அதிர்ச்சிக் காரணம் தெரியவந்திருக்கிறது.

Published:Updated:
கொலைசெய்யப்பட்ட ஊராட்சிமன்றத் தலைவர் வெங்டேசன்

சென்னை கூடுவாஞ்சேரி மாடம்பாக்கம் ஊராட்சிமன்றத் தலைவர் `ஸ்கெட்ச்' என்கிற வெங்கடேசன், கடந்த 17-ம் தேதி நாட்டு வெடிகுண்டுகள் வீசிக் கொலைசெய்யப்பட்டார். இது தொடர்பாக மணிமங்கலம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து சிசிடிவி கேமராப் பதிவுகளை ஆய்வுசெய்தனர். அப்போது, வெங்கடேசனைக் கொலைசெய்துவிட்டு ஒரு கும்பல் பைக்கில் தப்பிச் செல்லும் காட்சி போலீஸாருக்குக் கிடைத்தது. அதனடிப்படையில் தாம்பரம் துணை கமிஷனர் சிபிச்சக்கரவர்த்தி தலைமையிலான தனிப்படை போலீஸார், கொலையாளிகளைத் தேடிவந்தனர்.

சடலமாக வெங்கடேசன்
சடலமாக வெங்கடேசன்

இந்த நிலையில், கொலைசெய்த கும்பல் பதுங்கியிருக்கும் இடம் குறித்துக் கிடைத்த ரகசியத் தகவலின்படி தனிப்படை போலீஸார் அங்கு சென்று, 10 பேரைக் கைதுசெய்தனர். இதில் போலீஸாரிடமிருந்து தப்பிக்க நான்கு பேர் மேம்பாலத்திலிருந்து குதித்தனர். அதனால் அவர்களுக்குக் கை காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர்களை போலீஸார் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். போலீஸ் விசாரணையில் கைதுசெய்யப்பட்டவர்கள் மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த முகமது சதாம் உசைன் (24), மணிமாறன், முகமது ரியாசுதீன் (25), முகமது இம்ரான் கான் (25) , மோகன்ராஜ், கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த முகமது ரியாஸ் (32) சென்னையைச் சேர்ந்த முகமது யாகூப், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அகமது பாஷா (21), செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் (26), முகமது என்பது தெரியவந்தது.

இது குறித்து நம்மிடம் பேசிய போலீஸார், ``ஸ்கெட்ச் வெங்கடேசனுக்கும், மாடம்பாக்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் பழக்கம் இருந்தது. அந்தப் பெண் குடியிருந்த பகுதியில் சதாம் என்பவரின் கூட்டாளிகள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்திருக்கிறார்கள். அதைத் தட்டிக்கேட்கும்படி வெங்கடேசனிடம் அந்தப் பெண் கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து கஞ்சா விற்பனை தொடர்பாக மணிமங்கலம் காவல் நிலையத்தில் ஸ்கெட்ச் வெங்கடேசன் ரகசியமாகத் தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் கஞ்சா விற்ற சதாமின் கூட்டாளிகளைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளியில் வந்த சதாமின் கூட்டாளிகள் வெங்கடேசனைக் கொலைசெய்யத் திட்டமிட்டனர். ஆனால் காயங்களுடன் அவர் தப்பிவிட்டார்.

கண்ணீர் அஞ்சலி போஸ்டர்
கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

இந்தச் சூழலில் கஞ்சா விற்பனை செய்யும் கும்பலைச் சேர்ந்தவர்களில் இரண்டு பேர் மாடம்பாக்கம் ஏரிக்கரையில் கடந்த ஆண்டு கொலைசெய்யப்பட்டனர். அதற்கு ஸ்கெட்ச் வெங்கடேசன்தான் காரணம் என சதாம் கும்பல் கருதியது. ஆனால், தனக்கும், அந்த இரட்டைக் கொலைக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை என ஸ்கெட்ச் வெங்கடேசன் தெரிவித்தார். அதை நம்பாத சதாமின் டீமைச் சேர்ந்தவர்கள், இரட்டைக் கொலைக்குப் பழிக்குப் பழிவாங்கவே ஸ்கெட்ச் வெங்கடேசனை ஸ்கெட்ச் போட்டு கொலைசெய்திருப்பது தெரியவந்திருக்கிறது. இந்தக் கும்பலிடமிருந்து இரண்டு பைக்குகள், வெடிக்காத நாட்டு வெடிகுண்டு, ஆறு பட்டாகத்திகளைப் பறிமுதல் செய்திருக்கிறோம்" என்றனர்.

கொலைசெய்யப்பட்ட ஊராட்சிமன்றத் தலைவர் வெங்கடேசனை ஏன் `ஸ்கெட்ச்’ என அடைமொழியிட்டு அழைக்கிறார்கள் என மணிமங்கலம் போலீஸாரிடம் கேட்டோம். அதற்கு போலீஸார், ``பிரபல ரௌடி ஒருவருக்கு வெங்கடேசன்தான் ஸ்கெட்ச் போட்டுக் கொடுப்பார். அதனால்தான் அவரை ஸ்கெட்ச் வெங்கடேசன் என்று அழைத்திருக்கிறார்கள். மேலும் வெங்கடேசன், மாடம்பாக்கம் பகுதி மக்களுக்கு சாலை வசதி, குடிநீர் வசதி செய்துகொடுப்பது எனச் சமூக சேவைகளிலும் ஈடுபட்டுவந்தார். அதனால்தான் அவர் கொலைசெய்யப்பட்ட தகவல் வெளியானதும், வெங்கடேசனின் ஆதரவாளர்கள் அதிக அளவில் குவிந்தனர். தேவையான பாதுகாப்பு கொடுத்து அசம்பாவித சம்பவங்களைத் தடுத்திருக்கிறோம்" என்றனர்.