Published:Updated:

`ஓடஓட விரட்டி கொலை ; துரத்திப்பிடித்த போலீஸ்!' - ஈரோட்டில் ஊராட்சிமன்றத் தலைவருக்கு நேர்ந்த சோகம்

கொலையான ராதாகிருஷ்ணன்
கொலையான ராதாகிருஷ்ணன் ( க.தனசேகரன் )

பட்டப்பகலில் ஊராட்சிமன்றத் தலைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுகாவில் இருக்கிறது சங்கராபாளையம் ஊராட்சி. சமீபத்தில் நடந்துமுடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், சங்கராபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவியைப் பிடிக்க 6 பேர் களத்தில் இறங்கினர். கடும் போட்டிகளுக்கிடையே, சின்னதங்கம் (எ) ராதாகிருஷ்ணன் என்பவர் வெற்றிபெற்று, ஊராட்சிமன்றத் தலைவர் ஆனார். கடந்த 6-ம் தேதிதான் ஊராட்சிமன்றத் தலைவராகப் பதவியேற்றுக்கொண்டார்.

`கோவில்பட்டி நிலைதான் ஏற்படும் என நினைத்தோம்!' -செங்கோட்டையன் மிரட்டலால் மிரண்ட ஈரோடு தி.மு.க.

இந்நிலையில், ராதாகிருஷ்ணன் இன்று காலை சுமார் 9.15 மணியளவில் அந்தியூர் மூலக்கடை அருகே உள்ள மெக்கானிக் ஷாப் ஒன்றில் பைக்கை சர்வீஸ் செய்ய விட்டுவிட்டு நின்றிருக்கிறார். அப்போது அவர் அருகே கறுப்பு ஸ்கார்ப்பியோ கார் ஒன்று வந்து நின்றிருக்கிறது. அந்தக் காரில் இருந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் இறங்கிய 4 பேர் கொண்ட கும்பல், ராதாகிருஷ்ணனை சரமாரியாக வெட்டியது.

தலை, முகம் எனப் பல இடங்களில் வெட்டுப்பட்ட ராதாகிருஷ்ணன், ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடியிருக்கிறார். உடனே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனையில் அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. அதையடுத்து, மேல்சிகிச்சைக்காக ராதாகிருஷ்ணனை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைத்திருக்கின்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

ராதாகிருஷ்ணன் பதவியேற்ற போது
ராதாகிருஷ்ணன் பதவியேற்ற போது

இதற்கிடையே, `கறுப்பு ஸ்கார்ப்பியோ காரை எங்கு பார்த்தாலும் பிடியுங்கள்’ என மைக் மூலமாக ஈரோடு மாவட்ட போலீஸாருக்கு தகவல் பறந்திருக்கிறது. அந்த வகையில், ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே, கொலை கும்பலின் ஸ்கார்ப்பியோ கார் வந்திருக்கிறது. அது, கொலையாளிகளின் கார் என்பதை உறுதிசெய்த போலீஸார், சினிமா பாணியில் அந்த ஸ்கார்ப்பியோ காரை விரட்டியிருக்கின்றனர். சில நிமிட சேஸிங்கிற்குப் பிறகு, கொலையாளிகளின் காரை போலீஸார் மடக்கியிருக்கின்றனர். காரிலிருந்த கொலையாளிகளில் இருவர் தப்பித்து ஓட, மீதமிருந்த இருவரை போலீஸார் சுற்றிவளைத்துக் கைதுசெய்தனர்.

கொலை செய்யப்பட்ட ஊராட்சிமன்றத் தலைவரான ராதாகிருஷ்ணன் மீது ஒரு கொலை வழக்கு உட்பட அடிதடி வழங்குகள் இருந்திருக்கின்றன. சரியான சாட்சியங்கள் இல்லாத காரணத்தால், அவர் மீதான கொலை வழக்கு தள்ளுபடியாகியிருக்கிறது.

ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்

அந்தக் கொலையின் முன்விரோதத்தினால்கூட, இப்போது கூலிப்படையை ஏவி ராதாகிருஷ்ணன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள இருவரிடமும் விசாரணை நடத்தினால்தான் உண்மை தெரியவரும் என போலீஸார் தரப்பில் சொல்லப்படுகிறது.

பின் செல்ல