Published:Updated:

`பணிச்சுமை, மன உளைச்சல்´; கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட ஊராட்சி செயலாளர்!

தற்கொலை செய்துகொண்ட ஊராட்சி செயலாளர் பாஸ்கர்
தற்கொலை செய்துகொண்ட ஊராட்சி செயலாளர் பாஸ்கர்

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் அருகே அலுவலகப் பணிச்சுமையால் மன உளைச்சலுக்கு ஆளான ஊராட்சி செயலாளர் ஒருவர், அலுவலகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூரை அடுத்த மேல்நல்லாத்தூர் ஊராட்சியில் செயலாளராக அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (48) என்பவர் பணியாற்றிவந்தார்.

பாஸ்கர், மேல்நல்லாத்தூர் ஊராட்சித் தலைவர் அரிபாபு என்பவருக்குக் கீழ் பணிபுரிந்துவந்திருக்கிறார். நேற்று முன்தினம் மாலை ஊராட்சி செயலாளர் பாஸ்கர் வழக்கம்போல் அலுவலகத்தைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டு, நேற்று (சனிக்கிழமை) காலை வழக்கம்போல் அலுவலகத்தைத் திறந்து அலுவலகப் பணிகளை மேற்கொண்டுவந்திருக்கிறார்.

கடம்பத்தூர்
கடம்பத்தூர்

இந்தநிலையில், காலையில் பொதுமக்கள் அலுவலகத்துக்குச் சென்றிருக்கிறார்கள். அப்போது ஊராட்சி செயலர் பாஸ்கர், அலுவலக மின்விசிறியில் தூக்கிட்டு, தற்கொலை செய்துகொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக ஊராட்சித் தலைவர் அரிபாபு மற்றும் மணவாள நகர் காவல்துறையினருக்குத் தெரிவித்தனர். அதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் பாஸ்கரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, திருவள்ளூர் அரசுப் பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

போலீஸார் பாஸ்கர் எழுதிவைத்திருந்த கடிதம் ஒன்றையும் கைப்பற்றினர். அந்தக் கடிதத்தில் தற்கொலை செய்துகொண்ட பாஸ்கர்,``1998-ம் ஆண்டு முதல் நான் இந்தச் செயலாளர் பதவியில் இருந்துவருகிறேன். என்னுடைய இத்தனை வருட அனுபவத்தில் நான் ஒருமுறைகூடத் தவறு செய்ததில்லை. ஆனால், இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே எனக்கு வேலைப்பளு மிகவும் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக, 01.01.2021 முதல் 06.02.2021 வரை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இந்த முடிவுக்கு என்னைத் தள்ளிவிட்டார்கள் என்பததை இந்தக் கடிதத்தின் மூலமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மணவாள நகர் காவல் நிலையம்
மணவாள நகர் காவல் நிலையம்

ஊராட்சிச் செயலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக, ஊராட்சி அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக ஏராளமான ஊழியர்கள் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், மறியலில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்து அனுப்பிவைத்தனர். ஊராட்சிச் செயலாளர், அலுவலகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கும் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு