Published:Updated:

நெல்லை: பாபநாசம் கோயில் நகைகள் மாயம்? - பக்தர்கள் அதிர்ச்சி!

நகைகள் கொள்ளைபோன பாபநாசநாதர் கோயில்
நகைகள் கொள்ளைபோன பாபநாசநாதர் கோயில்

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள பாபநாச நாதர் கோவிலுக்கு காணிக்கையாக வந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென் மாவட்டங்களில் பிரசித்திபெற்ற சிவாலயங்களில் ஒன்றாக பாபநாசத்தில் உள்ள பாபநாசநாதர் கோயில் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் இயற்கையின் மடியில் அமைந்துள்ள இந்தக் கோயில், சாளுக்கிய மன்னர்களால் கட்டப்பட்டு, பின்னர் நாயக்க மன்னர்களால் விரிவுபடுத்தப்பட்டது.

`சுகாதார பிரசாதம், அசத்தும் அன்னதானம்!’ - நெல்லையப்பர் கோயிலுக்கு BHOG தரச்சான்று

கைலாய மலையில் நடந்த சிவபெருமான் - பார்வதி திருமணத்தைக் காண முடியாத அகத்தியருக்கு, பொதிகை மலைப்பகுதியில் இறைவன் திருமணக் கோலத்தில் காட்சியளித்ததாக இக்கோயிலின் தலபுராணம் தெரிவிக்கிறது.

பிரசித்திபெற்ற பாபநாசநாதர் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இந்தக் கோயிலில் வழிபட்டவர்கள், தங்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைத்ததும் கோயிலுக்கு பொன்னையும் பொருளையும் காணிக்கையாகக் கொடுப்பார்கள்.

பாபநாசம் கோயில்
பாபநாசம் கோயில்

அதன்படி கடந்த சில மாதங்களில் மட்டும் இந்தக் கோயிலுக்கு தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் அதிக அளவில் வந்திருக்கிறது. ஆனால், அந்த நகைகள் திடீரென மாயமானது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கோயில் நிர்வாகத்தினர் வெளியில் சொல்லாத போதிலும் பக்தர்களுக்குத் தெரியவந்ததால் பரபரப்பு நிலவியது.

நகைகள் மாயமான சம்பவம் சர்ச்சையானதால், அறநிலையத் துறை அதிகாரிகள் வேறு வழியின்றி காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அதனால் விக்கிரமசிங்கபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோயிலின் ஊழியர்கள் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்குத் தெரியாமல் நகைகள் மாயமாக வாய்ப்பில்லை.
பாபநாசம் கோயில் பக்தர்கள்

கோயில் நகைகள் காணாமல் போன விவகாரம், பக்தர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. கோயிலில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆகியோரிடம் மட்டுமே கோயிலுக்குள் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வரும் நிலையில், அவர்களுக்குத் தெரியாமல் நகைகள் திருடப்பட்டிருக்க வாய்ப்பில்லை என பக்தர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஆனால், இந்த விவகாரம் குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் எதையும் தெரிவிக்க மறுக்கிறார்கள். பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் மாயமானதாகக் கூறப்படும் நிலையில் அது பற்றி காவல்துறையினரும், வாய்திறக்க மறுத்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு