Published:Updated:

`போதைக்கு அடிமையான 15 வயது மகன்!’ - தந்தையின் செயலைப் பாராட்டிய கேரள போலீஸ்

மகன் குடித்துவிட்டு தள்ளாடியபடியே வீட்டுக்கு வந்தால் கண்டித்து தண்டிக்கும் தந்தைகளைப் பார்த்திருப்போம். ஆனால், பத்தாம் வகுப்பு படிக்கும் தன் 15 வயது மகன் போதையின் பாதையில் பயணித்தபோது தந்தை செய்த செயலுக்காக போலீஸாரிடம் பாராட்டைப் பெற்றுள்ளார்.

போதை ஊசி
போதை ஊசி

கேரள மாநிலம் கொச்சி வடுதலையைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவனின் நடவடிக்கையில் கடந்த சில வாரங்களாக மாற்றம் ஏற்பட்டது. தினமும் இரவு வீட்டுக்குத் தாமதமாகத் தள்ளாடிக்கொண்டு வந்திருக்கிறான். பெற்றோர் கேட்டதற்கு நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்குச் சென்று வருகிறேன் எனச் சமாளித்திருக்கிறான். ஒருநாள் நள்ளிரவு தாண்டி வீட்டுக்கு வந்த மாணவன் ரூமில் சென்று படுத்திருக்கிறான். காலையில் பார்த்தபோது ரூமில் இல்லை. பெற்றோர் வீடுமுழுவதும் தேடிப் பார்த்தும் மகனைக் காணவில்லை.

கைது செய்யப்பட்ட டெறின் பீட்டர்
கைது செய்யப்பட்ட டெறின் பீட்டர்

வீட்டு மொட்டை மாடியில் சென்று பார்த்தபோது தண்ணீர் தோட்டியின் மீது சுருண்டு படுத்திருக்கிறான். அவனை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர் பெற்றோர். பின்னர் அவனுக்கு கவுன்சலிங் கொடுக்கும் படலம் அரங்கேறியது. அதன்பிறகு தந்தை செய்த செயல்தான் பாராட்டுக்குக் காரணம். இதுகுறித்து கொச்சி போலீஸ் கூறுவதைக் கேட்போம், ``பத்தாம் வகுப்பு மாணவன் தினமும் தாமதமாக வீட்டுக்கு வருவதும் கேட்டால் நண்பனின் பிறந்தநாள் எனக் கூறி சமாளிப்பதும் தொடர்ந்தது. ஒருநாள் தாமதமானதால் அவனின் அம்மா போன் செய்திருக்கிறார். போனை எடுத்த மாணவன் வழக்கம்போல நண்பனின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் இருக்கிறேன் எனக் கூறியுள்ளான்.

அதன்பிறகு போனை கட்பண்ணாமல் மதுகுடிப்பதை தொடர்ந்திருக்கிறான். அம்மா போனை தந்தையிடம் கொடுத்திருக்கிறார். தந்தை அங்கு நடந்த உரையாடலை வைத்து மகன் தவறான சகவாசத்தால் மது குடிக்கிறான் என புரிந்துகொண்டார். அன்று நள்ளிரவுக்கு மேல் வீட்டுக்கு வந்தவன் மொட்டைமாடியில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு மேல் சுருண்டு கிடந்திருக்கிறான். மகனை மருத்துவமனையில் சேர்த்து கவுன்சலிங் கொடுத்தபோது தனக்குப் போதைப்பழக்கத்தை ஏற்படுத்தியவர்கள் குறித்து கூறியிருக்கிறான்.

போதை ஊசி
போதை ஊசி

வழக்கமாக இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மகனைத் திட்டி இனி குடிக்காமல் இரு என அறிவுரை கூறுவார்கள் பெற்றோர். ஆனால், அந்தத் தந்தை காவல் நிலையத்துக்கு வந்து புகார் கொடுத்தார். அந்தப் புகாரில் தன் மகன் 18 வயது பூர்த்தியாகாத சிறுவன். சிறுவனுக்குப் போதை வஸ்து, மது போன்றவைகளைக் கொடுத்து தவறான வழிக்குக் கொண்டு சென்றவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் எர்ணாகுளம் வடக்கு காவல் நிலைய போலீஸ் அதிகாரிகள் விசாரணையில் இறங்கினர். 15 வயது சிறுவனுக்குப் போதை மருந்து வழங்கி தவறாக வழி நடத்திய கொல்லம் வேலியாத்தைச் சேர்ந்த டெறின் பீட்டர் (18), குறுவந்துறையைச் சேர்ந்த அதுல் அஜு(19), அலன் பிராங்கிளின் ஆகிய மூன்றுபேரைக் கைது செய்துள்ளோம். 10-ம் வகுப்பு மாணவன் மற்றும் அவனின் நண்பர்களுக்குப் போதைப் பொருள்கள் வழங்குவதை இந்த மூன்றுபேரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தந்தையின் தைரியமான முடிவால் போதை சப்ளை செய்த ஆசாமிகள் கைது செய்யப்பட்டனர். இதுபோன்று அனைத்துப் பெற்றோரும் விழிப்போடு செயல்பட்டால் பிள்ளைகளைத் திருத்தலாம். மாணவனின் நலன் கருதி பெற்றோரின் பெயரை வெளியிடவில்லை" என்றனர்.