Published:Updated:

ஈரோடு:`தோழியைத் திருமணம் செய்த தாய்; நரபலி கொடுக்க திட்டம்?!’ - பதறிக்கிடக்கும் குழந்தைகள்

திருமணம் செய்துகொண்ட பெண்ணுடன் சேர்ந்து நரபலி கொடுக்க முயல்வதாக தாய் மீது அவருடைய குழந்தைகள் இருவர் புகார் கொடுத்திருக்கும் சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

ஈரோடு, ரங்கம்பாளையம் ரயில்நகரைச் சேர்ந்தவர்கள் ராமலிங்கம் - ரஞ்சிதா தம்பதியினர். இவர்களுக்கு தீபக் (15), கிஷாந்த் (6) என இரண்டு ஆண் குழந்தைகள். சேலை வியாபாரம் செய்துவந்த ராமலிங்கத்துக்கு எப்படியோ இந்துமதி என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு காதலாகியிருக்கிறது. விளைவு மனைவி மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு இந்துமதியை இரண்டாவதாக மணம் முடித்திருக்கிறார். தாய் ரஞ்சிதாவோ தனலட்சுமி என்ற பெண்ணுடன் உண்டான தன்பாலின உறவில், அவரைத் திருமணம் செய்திருக்கிறார். தாய், தந்தையின் இந்தச் செயல்களால் அதிர்ந்துபோன குழந்தைகள், அவர்கள் கொடுத்த சித்ரவதைகளால் மேலும் நொந்துபோயிருக்கின்றனர். அதையடுத்து வீட்டிலிருந்து தப்பித்துச் சென்ற குழந்தைகள், தாத்தா - பாட்டி துணையுடன் ஈரோடு எஸ்.பி அலுவலகத்துக்கு வந்து பெற்றோர்கள் மீதான புகார்களைச் சொல்லிக் கண்ணீர்விட்டுள்ளனர்.

தாத்தா - பாட்டியுடன் எஸ்.பி அலுவலகத்துக்குப் புகார் கொடுக்க வந்த குழந்தைகள்
தாத்தா - பாட்டியுடன் எஸ்.பி அலுவலகத்துக்குப் புகார் கொடுக்க வந்த குழந்தைகள்

குழந்தைகள் கொடுத்திருக்கும் புகார் மனுவில், ``நாங்கள் அம்மா - அப்பா என ஒரே குடும்பமாக புஞ்சை புளியம்பட்டியில் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தோம். எங்கள் தந்தை இரண்டாவதாக இந்துமதி என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு எங்கள் தந்தை எங்கள் மூவரையும் ஈரோட்டுக்கு அழைத்துச் சென்று, அவருடைய இரண்டாவது மனைவியுடன் ஒன்றாக இருக்கவைத்தார். அதையடுத்து எங்களுடைய தந்தையின் இரண்டாவது மனைவியின் தோழியான தனலட்சுமி என்பவரை, எங்கள் அம்மா திருமணம் செய்துகொண்டார். அந்த தனலட்சுமி என்ற பெண்ணை, `அப்பா’வென அழைக்கும்படி எங்களை மிரட்டினார்.

நாங்களும் உயிருக்கு பயந்து `அப்பா...’ என அழைத்துவந்தோம். இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் இருந்துகொண்டு எங்களை பள்ளிக்குச் செல்லவிடாமல், வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்யவைக்கின்றனர். அதில் சின்னத் தவறு ஏற்பட்டால்கூட எங்களைக் கடுமையாக தண்டித்தனர். கண், வாய், சிறுநீர் கழிக்கும் உறுப்பு என அனைத்திலும் மிளகாய்ப்பொடியைத் தூவி கொடுமைப்படுத்துகின்றனர். மிளகாய்ப்பொடி போட்ட உணவைத்தான் மூன்று வேளையும் சாப்பிடக் கொடுக்கின்றனர். பாத்ரூம் கழுவும் மருந்தை வாயில் ஊற்றிக் குடிக்கவைப்பதுடன், பாத்ரூமில் படுக்கவைத்து கொடுமைப்படுத்துகிறார்கள். பள்ளிக்குச் சென்று எங்களுடைய தந்தை இறந்துவிட்டார் எனப் பொய் சொல்லி எங்களுடைய டி.சி-யை வாங்கி வைத்துக்கொண்டு படிக்கவிடாமல் செய்கின்றனர். எங்களை நரபலி கொடுத்துவிடுவார்கள் என பயந்து பாட்டி வீட்டுக்கு வந்துவிட்டோம். எங்களுடைய உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்” எனக் கூறி அதிரவைத்துள்ளனர்.

ரஞ்சிதா - தனலட்சுமி
ரஞ்சிதா - தனலட்சுமி

என்ன நடந்ததென குழந்தைகளின் தாய்மாமன் தமிழ்ச்செல்வனிடம் பேசினோம். ``என்னுடைய அக்கா ரஞ்சிதாவின் கணவர் ராமலிங்கம் இரண்டாவதாக இந்துமதி என்ற பெண்ணை கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னால் திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு சில மாதங்களிலேயே எல்லோரும் ஒரே வீட்டில் வசிக்கத் தொடங்கினார்கள். இது சரியாக இருக்காது என என்னுடைய தந்தை அக்கா வீட்டுக்கு விசாரிக்கச் செல்ல, ‘எங்களை நிம்மதியாக வாழ விடுங்க. இல்லைன்னா புள்ளைங்களை கொன்னுட்டு நானும் செத்துப்போயிருவேன். இல்லைன்னா கண் காணாத இடத்துக்கு போயிடுவேன்’ என அக்கா சத்தம் போட்டிருக்கிறார். அதன் பிறகு நாங்களும் அவர்களைத் தொந்தரவு செய்யவில்லை. இந்தநிலையில், அக்கா குழந்தைகள் இருவரும் பிப்ரவரி 23-ம் தேதி எங்கள் வீட்டுக்கு வந்து, அவர்களுடைய வீட்டில் நடக்கும் சம்பவங்களையும், கொடுமைகளையும் சொல்லிக் கண்ணீர்விட்டனர். ‘அம்மா இன்னொரு பெண்ணை கல்யாணம் செஞ்சுக்கிட்டு எங்களை கொடுமைப்படுத்துது. எங்களை நரபலி கொடுக்குறதா பேசிக்கிட்டு இருந்தாங்க. அதனால உயிருக்கு பயந்து லெட்டர் எழுதிவெச்சுட்டு ஓடி வந்துட்டோம்’ எனக் குழந்தைகள் தேம்பினார்கள்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடர்ந்து பேசியவர், ``என்னுடைய அக்கா ரஞ்சிதா அவருடைய கணவர் மற்றும் குழந்தைகள் முன்னிலையிலேயே தனலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். என்னுடைய அக்கா ரஞ்சிதா தன்னை `சக்தி’ என்றும், திருமணம் செய்துள்ள தனலட்சுமியை `சிவன்’ என்றும் தங்களைக் கடவுளாகக் குழந்தைகளிடம் கூறியுள்ளனர். குழந்தைகளை நரபலி கொடுத்துவிட்டால் நமக்கு இன்னும் அதிக சக்தி கிடைக்கும் என பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். என்னுடைய அக்காவுக்கு சாப்பாட்டில் எதையோ கலந்துகொண்டு, அவருடைய கையாலேயே குழந்தைகளைக் கொல்ல ஏதேதோ திட்டம் தீட்டியிருக்கின்றனர். இதையெல்லாம் வெளியே சொல்ல முடியாத அளவுக்குக் குழந்தைகள் பயந்து கிடந்திருக்கின்றனர். போலீஸார்தான் விசாரணை செய்து என்ன நடந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்து தக்க தண்டனை கொடுக்க வேண்டும்” என்றார்.

ஈரோடு எஸ்.பி தங்கதுரை
ஈரோடு எஸ்.பி தங்கதுரை

இந்த விவகாரம் தொடர்பாக ஈரோடு எஸ்.பி தங்கதுரையிடம் பேசினோம். ``தாயிடமிருந்து டி.சி வாங்கிக் கொடுக்கச் சொல்லிதான் குழந்தைகள் நேற்று என்னிடம் புகார் கொடுத்தார்கள். என்னவென்று அதிகாரிகளை விசாரிக்கச் சொல்லியிருக்கிறேன். விசாரணையின் முடிவில்தான் என்ன நடந்திருக்கிறது எனத் தெரியும். தவறு நடந்திருப்பின் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்ட கணவர் ராமலிங்கம் எதற்காக முதல் மனைவியையும், குழந்தைகளையும் ஒரே வீட்டில் தங்கவைத்தார்? ரஞ்சிதாவுக்கும் தனலட்சுமிக்கும் தன்பாலின உறவு இருந்ததும், அவர்கள் திருமணம் செய்தபோதும் கணவர் உடனிருந்தது ஏன்? உடல்ரீதியாக யார் யாரெல்லாம் குழந்தைகள் இருவருக்கும் சித்ரவதைகள் கொடுத்திருக்கிறார்கள்? குழந்தைகளை நரபலி கொடுக்கத் திட்டமிட்டது உண்மையா? கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காவல் நிலையங்களில் இது தொடர்பாக புகார் கொடுக்கப்பட்டும், தற்போது வரை போலீஸார் விசாரித்து நடவடிக்கை எடுக்காதது ஏன் எனப் பல சந்தேகங்கள் இதில் எழுகின்றன. இனியாது இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு