Published:Updated:

`எலும்பு முறிவு; அவசர சிகிச்சை வார்டு' -மதுரை அரசு மருத்துவமனை நோயாளிக்கு நேர்ந்த அதிகாலை பயங்கரம்

இராசாசி மருத்துவமனை
இராசாசி மருத்துவமனை

இன்று அதிகாலையில் 4 பேர் கொண்ட மர்மக் கும்பல் ஒன்று மருத்துவமனைக்கு வந்தது. அவர்கள் முருகனின் உடல்நலம் குறித்து விசாரிக்க வந்ததாகக் கூறிவிட்டு அவர் அருகில் சென்றுள்ளனர்.

மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முருகன் என்பவரை மர்மக் கும்பல் ஒன்று மருத்துவமனைக்குள் புகுந்து வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகமான மக்கள் நடமாட்டமும் பாதுகாப்பும் உள்ள நிலையில் நடந்துள்ள இச்சம்பவம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

முருகன்
முருகன்

மதுரை கரும்பாலைப் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவருக்கு வாகன விபத்தில் காலில் எலும்புமுறிவு ஏற்பட்டது. இதனால் அரசு இராசாசி மருத்துவமனையின் புதிய கட்டடத்தில் கடந்த 5-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில், இன்று அதிகாலையில் 4 பேர் கொண்ட மர்மக் கும்பல் ஒன்று மருத்துவமனைக்கு வந்தது. அவர்கள் முருகனின் உடல்நலம் குறித்து விசாரிக்க வந்ததாகக் கூறிவிட்டு அவர் அருகில் சென்றுள்ளனர்.

மருத்துவமனை
மருத்துவமனை

அப்போது, விசாரிப்பது போல அருகில் சென்றவர்கள் தாங்கள் மறைத்துவைத்திருந்த பட்டாக்கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் பெட்டில் படுத்திருந்த முருகனை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தனர். இதனால் சம்பவ இடத்திலயே முருகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

மருத்துவமனைக்குள் புகுந்து கும்பல் ஒன்று நோயாளியைக் கொலை செய்வதைப் பார்த்து செவிலியர்கள், மருத்துவர்கள், நோயாளிகள் அதிர்ச்சியில் வெளியில் ஓடினர். அதன்பின் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இராசாசி மருத்துவமனை
இராசாசி மருத்துவமனை

சம்பவ இடத்தில் மதுரை மாநகரக் காவல்துறை உதவி ஆணையர் கார்த்திக் விசாரணை நடத்தினார். கொலை செய்யப்பட்ட முருகன் மீது சில வழக்குகள் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இவருடைய தொழில்ரீதியான எதிரிகள் இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

இராசாசி மருத்துவமனைக்குள் நடந்த இக்கொலைச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு